Monday, March 14, 2011

ருத்ரதாண்டவம்

கள்வன் நுழைந்தால்கூட வேண்டியதைமட்டும் வேண்டும்மட்டும் அள்ளிக்கொண்டு ஓடிவிடுவான். நீயோ கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு உனக்குள் பதுக்கிக்கொண்டாயே. இங்கே ஊரும் உடைமையும் இழந்து சோற்றுக்காகவும் நீருக்காகவும் கையேந்தி நிற்கிறோமே. எங்கள் அலறல் உன் காதுகளுக்கு எட்டவில்லையா அல்லது எங்கள் நிலைமையைக் கண்டு எள்ளிநகையாடுகிறாயா. ஏன். யார்மீது கோபம். எதற்காக வந்தது இந்தக் கோபம். யாரைப் பழிவாங்க எடுத்தாய் இந்த விஷ்வரூபம். எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வீசி எறிந்து துவாம்சம் செய்துவிட்டாயே. எதற்காக இங்கே வந்து நர்த்தனம் ஆடினாய். அசுரத்தனமாய் நீ ஆடிவிட்டுச் சென்றதுக்குப் பெயர் ஆழிப்பேரலையாம். அந்தப் பெயர்கூட உனக்கு நாங்கள் வைத்ததுதான். உனக்குத் தெரியுமா பிறவியிலேயே உயர்ந்த பிறவி நாங்கள்தானாம். மார்தட்டிக்கொண்டிருக்கிறோம். நீயோ அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தசாவதாரம் பூண்டு ஆனந்தமாய் ருத்ரதாண்டவமாடி எங்களை அற்பமாய் அழித்துவிட்டுச் செல்கிறாயே. நியாயமா இது. நீயும் இருக்கிறாய். உனக்கும் கோபம் வரும். கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எங்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கிறாயா.  நீ கொடுத்த அடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு விழுகிறோமே தெரியவில்லையா உனக்கு. எந்தக் கடனைத் தீர்த்துக்கொள்ள இங்கே வந்து வட்டியும் முதலுமாய் வசூலித்துச் சென்றாய். எங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உன் வாய்க்குள் தினித்து வேடிக்கைப் பார்த்தோம். நாங்கள் தயாரித்த அணுகுண்டுகளை உனக்குள் வெடிக்கவைத்துப் பரீட்சித்தோம். ஓ .... உன்னை ஊனப்படுத்திவிட்டோம் என்ற கோபமோ. நீ எப்போதும் அழுததில்லையே. கதறியதில்லையே. கண்ணீர் விட்டதில்லையே. தடுத்ததுகூட இல்லையே. அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டு மௌனமாய்தானே இருந்தாய். உன் மௌனத்துக்குள் இப்படி ஒரு புகைச்சல் பூதாகரமாய் பொங்கி எழப்போகிறது என்று சொல்லவே இல்லையே. யார் உனக்கு என்ன கொடுமை செய்தாலும் அறியாத பிள்ளைபோல் அமைதியாக இருந்தாயே. உனக்கும் உணர்வுண்டு உன்னாலும் பேச முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாய். ஆனால் எங்களுக்குப் புரியாது. புரிந்தால்கூட புரியாததுபோல்தான் நாங்கள் இருப்போம். ஏன் தெரியுமா. நீதான் வாய்திறந்து வார்த்தை உதிர்க்கவில்லையே. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று பழமொழி படித்த பரம்பரையல்லவா நாங்கள். அப்படிப்பட்ட எங்களை ஏளனமாய் மிதித்துவிட்டு ஒட்டுமொத்தமாய் உலகத்துப் பார்வையெல்லாம் ஒரு நொடிக்குள் உன்மீது திருப்பிக்கொண்டாயே....நீ எத்தனை முறை சீறிப்பாய்ந்து எழுந்து வந்து தாண்டவமாடினாலும்  உன் ஆவேசம் சொல்லும் அறிவுரையை உணர்ந்துகொள்ள முடியாத நாங்கள் உனக்கு வைத்த அழகான பெயர் ஆழிப்பேரலைதான். ஏனென்றால் நாங்கள்தான் உயர்ந்த பிறவியாயிற்றே.

Saturday, March 5, 2011

வஞ்சகன் கண்ணனடி

காலம் இணைத்ததைக் காலமே பிரித்தது. மீண்டும் இணைவோம் என்று ஒருபோதும் நினைக்காத வேளையில் நிஜமாகவே இணைந்தோம். விட்டுப்போன தொடர்பு மீண்டும் கைகோர்த்தது. காய்ந்துபோன நினைவுகளுக்கு நீர் தெளித்து மீண்டும் பசுமைப்படுத்தி படரவிட்டோம். பொக்கிஷமாய் பூட்டிக்கிடந்த நிகழ்வுகளின் பூட்டுடைத்து மீண்டும் ரசித்துப் படித்தோம். ஓய்வு பெறும் வரை ஒன்றாக உழைத்திருப்போம் என்று ஆனந்தமாய் ஆய்வு நடத்தினோம் .ஆனால் பூநாகமாய் புறப்பட்ட  பதினைந்து புல்லுறுவிகள் நீட்டிய  ஓலை  உனக்கும்  எனக்கும் இடையே திரை போட்டு வேடிக்கை பார்க்கிறது. உன் ஆழ்ந்த அறிவை அடையாளம் காண முடியாத முள்ளம்பன்றிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டாயே. அவை உன்னைக் கடித்துக் குதறிவிடும் என்பதனால் தூக்கி எறியப்பட்டாயா. துவண்டுவிடாதே தோழி. தூறலைக் கண்டு துவண்டு விடாதே. தொடர்ந்து செல். அடைமழை வந்தாலும் தொடர்ந்து செல். நீ விட்டுச் சென்ற நினைவுத் துளிகள் இங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்துக்கோர்க்க மீண்டும் வா. வரண்டு விட்டது பாலைவனம் என இறுமாப்போடு பல்லிளித்த வஞ்சகர் களின் பற்களைப் பிடுங்கி உன் சோலைவனத்துக்கு உரமாக்கு. எழுதிய தீர்ப்பைத் திருத்தி எழுத யாருக்கு உண்டு தைரியம் . ஆனால் உனக்கு உண்டு பெண்ணே. உன்னிடம் எனக்குப் பிடித்ததே அந்த தைரியம்தான். பிடிக்காததும்கூட உண்டு. உன் கோபம். கோபம் தலைக்கேறியதும் வந்துவிழும் வார்த்தைகள். அவை உன்னை நிதானமிழக்க வைக்கிறது என்பதை நீ அறிவாயா. இன்னும்கூட உண்டு தோழி. நீ உண்ணும்போது  ஊர் பிரச்சனையெல்லாம் உன் பிரச்சனையாக எண்ணி உணவோடு சேர்த்து விழுங்குவது. உணவு மட்டும்  உன் உடலுக்குள் செல்லவில்லை ஊரில் உள்ள பிரச்சனைகளும் உன் உடலுக்குள்  இரத்தத்துக்குள் கலக்கின்றது என்பதை நீ ஏன் அறியாய். அது உனக்கே ஊறு விளைவிக்கும். அதனால்தான் பல முறை உன்னைத் தடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை நான் சொல்லவில்லை. சொன்னதும் கண்ணனடி.

Thursday, March 3, 2011

மயிலிறகாய்......

கொட்டினால் கோலம் கிறுக்கினால் ஓவியம் என்று வார்த்தைகளால் சுண்டி இழுத்து மயிலிறகாய் என்னை வருடிச்சென்றவள் நீ. வாழ்த்துக் கூறியதும் உன் இதழ் உதிர்த்த புன்னகையின் பூரிப்பு உன் விழிகளில் காணவில்லையே. ஆசையாய் தேடி அன்பாய் நீட்டிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தயக்கம் உன்னைக்  காட்டிக் கொடுக்கிறதே. உனக்குள்ளும் ஏதோ ஒன்று உராய்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். சொல்லிவிடு. சொன்னால் உன்னை சிதைத்துக் கொண்டிருக்கும் சிராய்ப்புக் காயம்  சீரழிந்து போகும். சொல்லாத சோகம் சுகமாய் உன்னை சொறிந்துகொண்டே இருக்கும். சோகம்கூட சில சமயங்களில் சுகமாய்தான் இருக்கும். ஆனால் சுகமே சோகம்தான் என நினைத்தால் சோர்ந்துபோகும் வாழ்க்கை. துரத்திவிடு. தூர துரத்திவிடு. சோகம் உன்னைத் தின்று விடுவதற்குள் நீ சோகத்தைத் தின்றுவிடு. வானத்தில் இருக்கும் நிலவைப் போல தூரமாய் வைத்துவிடு. நிலவுகூட தூரத்தில் இருக்கும்போது அழகாய்த்தான் இருக்கிறது. அருகில் வைத்துக்கொள்ள முடியுமா. உன்னுடன் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் துன்பத்திற்கு தூபம் போடாதே. உன் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கும் உருண்டையை உமிழ்ந்துவிடு. உன்னைச்சுற்றிப் படர்ந்திருக்கும் அழகான விஷயங்களை ஆழ்ந்து பார். அனுபவித்துப்பார். அவற்றை இரசித்துப்பார். இரசிப்பதுகூட ஒரு கலைதான். உன்னிடம் அந்தக் கலை கொட்டிக்கிடக்கிறது என்பது எனக்குத் தெரியும். போனதைப் பற்றியே யோசித்தால் இருப்பதைப் பற்றி எப்போது நினைப்பது. எப்போது இரசிப்பது. கிடக்காத சுகத்தை எண்ணித் தேய்ந்து போகாதே. உனக்கு இறைவன் கொடுத்த சுகங்கள் எத்தனையோ அவற்றை எண்ணி நெகிழ்ந்து போ. உனக்கும் கீழே இருப்பவர் கோடி. கால்களுக்கு செருப்பு கிடக்கவில்லையே என ஏக்கம் கொள்ளாதே. ஊனமில்லாத கால்கள் கொடுக்கப்பட்டுள்ளதே என திருப்தி கொள். சொல் நன்றியை இறைவனுக்கு.