Thursday, February 10, 2011

தொலைத்துவிட்டேனடி தோழி

 தொலைத்துவிட்டேனடி தோழி. உன்னைத் தொலைத்துவிட்டேனடி. தொலைந்து போனதை எண்ணி தொலைந்துவிட்டாயே நீ. நீ தொலைத்த எதையுமே தொடர்ந்துபோக முடியாமல் தோற்றுப்போனேனடி நான். எவ்வளவு அழகு நீ. எவ்வளவு இனிமை உன்னிடம். உன் இளமைக்கால ரசிகை நான் என்பது உனக்குத் தெரியுமா. உன் மடியில் தலை சாய்த்து  இளைப்பாறும் நாட்கள் மீண்டும் வராதா. நீ செல்லமாய் வாரியணைத்து முத்தமிட்ட ஈரம் இன்னும் காயவில்லையே என் கன்னத்தில். உன் கதகதப்பில் குளிர்காய்ந்த சூடு கூட குறையவில்லை. அதற்குள் தனிமைப்படுத்திக்கொண்டாயே உன்னை. என் சிரிப்புக்களையும் சிணுங்கள்களையும் சில்லரைகளாய் உன் அடிமடியில்  சேமித்து  வைத்திருந்தாயே.  அனைத்தையும் அவிழ்த்து எங்கே கொட்டினாய். உன்னை அடித்துப் போட்ட அந்தப் பிரிவை கலைத்துப்போடமுடியாமல் களைத்துப் போனேனடி நான். நீயாக நீ இல்லையே. தூக்கத்தைத் தூர விரட்டி விட்டு...தூயவளே என்ன ஆனாய்.  கடற்கரை ஈரத்தில் இருவரும் நடக்கையில் மணலில்  பதிந்த நம் காலடி தடத்தை ஓடி வந்து அழித்துவிட்டுத் திரும்பி ஓடும் அலையைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் முறைத்துவிட்டு வருவாயே, மறந்துபோனதா அல்லது மரித்துப்போனதா. நான் ஒரு வரி பாட நீ மறு வரி பாட பதிவு செய்த பாடலை இனி எப்படி பதியம் போடுவேன். உன்னோடு தூளிகட்டி நான் வாழ்ந்த காலங்கள் கனவில்லையே. இருந்தும் கவிழ்ந்து போனது ஏன். நீ காட்டிய பாதையில் நடை பயில வந்த என்னை பாதியிலேயே பரிதவிக்க விட்டு விட்டு பல்லக்கு ஏறி பாற்கடல் கடைய சென்றாயா. அன்று மூழ்கிப்போன உன்னை முத்தெடுக்க வரவில்லையே நான். இன்று தொலைத்துவிட்ட காலத்தை துரத்திப் பிடிக்க வருவாயா என்னோடு. தூரத்து நிலவாய் துவண்டு போன உனக்கு அன்பாய் அருகிலேயே நான் இருந்தும் அனாதையாய் நீ இருக்க தோற்று விட்டேனடி தோழி. தொலைத்துவிட்டேனடி உன்னை.