Wednesday, February 9, 2011

சடையன் மகனுக்கு.........

என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக்கொண்டு பதினைந்து படிகளைக் கடந்து கீழே வந்ததும் என் கண்களைக் கவர்ந்தது கொத்துக் கொத்தாய் ஊசிகளைக் கோர்த்ததுபோல் பூத்திருந்த அந்த சிவப்பு வண்ண மலர்கள்தான். அங்கே பூக்களையும் அதன் மேல் படர்ந்திருந்த காலைப் பனி நீர்த் துளிகளையும் ரசித்தவாறு நான் சற்று நின்றதும் கால் வலிக்குதா ? தூக்கிக்கவா ? என்று நீங்கள் கேட்டதும் சிரித்ததுக் கொண்டே வேண்டாம் என தலையசைத்துவிட்டு உங்களைப் பின் தொடர்ந்ததும் இன்னும் ஞாபகத்தில் பசுமையாய் இருக்கிறது. இதுதான் நீ படிக்கப்போற பள்ளி என்று நீங்கள் புன்னகையோடு சொன்னபோது உங்கள் கைகளை இன்னும் இருக்கமாய் பற்றிக்கொண்டேன். நாம் இருவரும் கதவருகே நின்ற போது அங்கே ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு தன் காலணிகளுக்குக் கயிறு கட்டிக்கொண்டிருந்தார். வாய்யா தலைமையாசிரியர் உள்ளதான் இருக்காரு போய் பாரு என்று சொன்னவர் என்னைப் பார்த்து கண்களை சிமிட்டியதும் நான் முகத்தை திருப்பிக் கொண்டதும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அவர் அப்பள்ளியின் ஆசிரியர் என்பது அன்று எனக்குத் தெரியாது. நீங்கள் என்னைத் தலைமையாசிரியர் முன் நிறுத்தியதும் என்னிடம் தலைமையாசிரியர் கேட்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொன்னதும் ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை எனக்குப் பதில் சொல்லத் தெரியாது என்று நினைத்தீர்களோ.  புத்தகப் பையை நாற்காலியின் விளிம்பில் மாட்டிவிட்டு என் தலையை லேசாக வருடிவிட்டு கை அசைத்ததும் உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டேன். என்னை விட்டு விட்டுப் போக மனமில்லாமல் மீண்டும் என் தலையை வருடிவிட்டு பல முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தீர்கள். உங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என்னைத் தலைமையாசிரியரின் குரல் திருப்பியது. உன் பெயர் என்ன ?..... நான் உங்களையே பார்த்துக்கொண்டிருந்ததால் மௌனம் என்னிடம். சரி உனக்குப் படிக்கத் தெரியுமா ? தலையை மட்டும் அசைத்தேன். அவர் மேசை மேல் இருந்த பிரம்பை எடுத்து என்னிடம் கொடுத்து கரும்பலகையில் இருந்த சொற்களை வாசிக்கச் சொன்னதும் நான் கடகடவென வாசித்ததும் சந்தோசத்தில் வாய்விட்டு சிரித்தார். பார்த்தீர்களாடா இன்னைக்கு வந்த பிள்ளை எப்படி வாசிக்குதுனு... என்று அங்கே அமர்ந்திருந்த மாணவர்களிடம் கூறினார்.அவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். அன்றிலிருந்து ஒன்றாம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான் குட்டி ஆசிரியராக மாறினேன். பெருமையாக இருந்தது எனக்கு. என்னை அங்கே விட்டு வந்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்டன இன்னும் நான் அந்த சூழலிலிருந்து மீளவே இல்லை. அந்த அழகிய சூழலை உருவாக்கித் தந்த உங்களுக்கு................ நன்றி அப்பா.