Tuesday, February 22, 2011

நானும் அவனும்

என் கிராமத்து சாலையோரத்தில் மகிழம்பூ மரம் ஒன்று இருக்கும். விடுமுறை நாட்களில் காலையில் எழுந்ததும் என் கவனத்தை ஈர்ப்பது அந்த மகிழம்பூக்களின் வாசம்தான். தினமும் காலையில் அங்கே ஓடிச்சென்று  அந்தப் பூக்களைப் பொருக்கி வந்து நூலில் கோர்த்து சாமி படங்களுக்குப் போடுவேன். அப்படி நான் ஓடிச்செல்லும் போதெல்லாம் அவனும் என்னோடு ஓடி வருவான். அந்த மகிழம்பூ மரத்தின் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் இருக்கும். நாவல் மரத்தின் கீழ் உதிர்ந்து கிடக்கும் நாவல் பழங்களைப் பொருக்கி வந்து என்னிடம் தருவான். அந்த நாவல் மரத்தின் கீழ் ஒரு பெரிய கிணறு உண்டு.அந்தக் கிணற்று நீர்தான் என் கிராமத்து மக்களுக்கு அப்போதைய தெப்பக்குளம். நான் ஒரு சிறிய வாளியிலும் அவன் ஒரு பெரிய  வாளியிலும் வீட்டுக்கு நீர் அள்ளிப் போவது எங்கள் சாயங்கால கடமை மட்டுமல்ல அது எங்கள் பொழுதுபோக்கும்கூட. நீரை எடுத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் புறப்படுவோம் ஆனால் அதை விரைவாக வீட்டில் உள்ள தொட்டியில் ஊற்றி விட்டு ஓடி வந்து என் வாளியையும் தூக்கிக் கொண்டு ஓடுவான். அவ்வளவு சுறுசுறுப்பு அவன். எங்கள் வீட்டு அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று நீந்தி விளையாடுவதும் அலைகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடி விளையாடுவதும் இன்றும் என் மனத்திரையில் நிழலாடும் காட்சிகள் அவை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடற்கரையை ஒட்டி உள்ள படகுத்துறைக்குச் சென்று கடலில் மிதந்துவரும் பலகைப்பெட்டிகளுக்காகக் காத்திருப்பான். தூரத்தில் மிதந்து வரும்போதே நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு கடலில் நீந்திச்சென்று தனக்குக் கிடைத்த பெட்டியை கரைக்கு இழுத்து வருவேன். அதை சைக்கிளில் வைத்துக் கட்டி வீட்டிக்குக் கொண்டுவந்து கோடரியால் வெட்டிப்போடுவான். அவன் வெட்டிப்போடும் பலகைகளை அடுப்பங்கரையில் அடுக்கி வைப்பேன் நான். அதைப் பார்க்கும் பக்கத்து வீட்டு பாட்டி அந்தப் பிள்ளைகளை பாருங்க எவ்வளவு பொருப்பா இருக்காங்க நீங்களும் இருக்கீங்களே என்று தன் பேரப்பிள்ளைகளைத் திட்டுவது ஜன்னல் வழியாக என் காதில் விழும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அந்தப் பலகைகள்தான்  எங்கள் வீட்டு சமையலுக்கு அம்மாவுக்குக் கைகொடுத்து வந்தது. அப்படி ஒரு நாள் மாலை வேளையில் படகுத்துறையில் ஓடும்போது கால் தவறி கடலில் விழுந்துவிட்டான். அங்கு கற்றூண்களில் ஒட்டியிருந்த சிப்பிகள் அவன் உடலைப் பதம் பார்த்து விட்டன. அந்தத் தடையங்கள் இன்னும் அவன் உடலில் வரிவரியாக வடுக்களாக உள்ளன. என் அம்மா பள்ளி ஓய்வு நேர உணவுக்காக செய்து கொடுத்தனுப்பும் வாழைப்பழ பலகாரங்களை நண்பர்களிடம் விற்று பணமாக்கி சேமித்து வைப்பான். அப்படி சேமித்து வைக்கும் பணத்தை அம்மாவிடமே திருப்பித் தரும் அன்பான குணமுடையவன். ஒரு நாள் என்னை அவனோடு போட்டியிட அழைத்தான். அதுவும் வரையும் போட்டிக்கு. நான் தயங்கித் தயங்கி சம்மதித்தேன்.  கண்ணன் வெண்ணெய் உண்ணும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை என்னிடம் கொடுத்தான். அவன் யசோதை கண்ணனை மிரட்டும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை எடுத்துக் கொண்டான். சரி வா வரையலாம். யார் நல்லா வரையறோம்னு பார்க்கலாம் என்றான். இருவரும் வரைய ஆரம்பித்தோம். நிமிடங்கள் நகர்ந்தன. அவனும் வரைந்து முடித்தான் நானும் வரைந்து முடித்தேன். அவனுடைய ஓவியம் சுமாராக இருந்தது. என் ஓவியத்தை இமைக்காமல் பார்த்தான். நானும்தான். என் ஓவியத்தை எடுத்துக்கொண்டு ஓடி அம்மாவிடம் காட்டினான். அப்பாவிடம் காட்டினான். நம்பவே முடியல இவ்வளவு அழகா எப்படி வரைந்தே என்று கேட்டான். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஏனென்றால் எனக்கே தெரியாத ஓவியத் திறமையை அன்று வெளிக்கொணர்ந்தவன் அவன்தான். அதன்பிறகுதான்  பார்த்த காட்சியெல்லாம் வரைய ஆரம்பித்தேன்.