Sunday, April 17, 2011

தேங்கி நிற்கிறேன்

ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் கதை சொல்லும். உன் விசும்பல் என் செவிகளுக்குள்  ரீங்காரமிட்டு  உள்ளத்து உணர்வுகளை  மகரந்தமாய் என்னிடம் சேர்க்கின்றது. அழாதே! அழுது என்னை உடைத்துவிடாதே! இதை  கேட்டுப் பெறவில்லை நான். இது சூழ்ச்சியா சூட்சுமமா தெரியாது. காலம் எனக்குக் கம்பலம் விரிக்கின்றது. போகாமல் இருக்க வேண்டும் என பூவேலி போடுகின்றது உன் விழிகள். போய்விடாதே என மனம் மண்டியிட்டு மன்றாடுகிறது. முடிந்தவரை முயன்றேன் முடியாமல் தேய்கிறேன். எல்லா உறவுகளுக்குள்ளும் ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் எந்த  எதிர்பார்ப்புகளுக்குள்ளும் சிறைபடாது சிறகு விரிப்பது தூய நட்பு மட்டும்தான். தூய நட்பின் கதகதப்பில் குளிர்காய்ந்த அன்பு என்றும் மாறாது மறையாது. எனக்காக நீயோ உனக்காக நானோ எதுவும் செய்யவில்லை எதையும் கேட்கவில்லை இருப்பினும் ஏதோ ஓர் இழப்பு இழையோடுகிறது. பிரிவொன்று சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு  வந்து என் கரம் பற்றி நிற்பதைப் பார்த்ததும் உன் விழியோரம் தேங்கி நிற்கும் சோகத்துக்கு விலையும் உண்டா சொல் கண்ணே. நடந்து முடிந்த நாட்களும் கடந்து சென்ற காட்சிகளும் கண்ணுக்குள் கவி பாடுகிறது. சந்தோஷ நாட்குறிப்பில் நம் முகவரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் போல் துன்பம் தூண்டில்போடும் இந்த நேரத்தில் உடன் இருந்து உதவவிடாமல் என்னை விலக்கி வைத்து வேடிக்கை காட்டுகிறது கால தேவதை. என்ன செய்வேன் நான்.  அலுங்காமல் குலுங்காமல் அட்சயப்பாத்திரத்தில் அள்ளி வைத்து அழகு பார்த்தாய் என்னை. உன்னை எங்கே வைப்பேன் நான். நீ ரசித்து ரசித்து தூதுவிட்ட ஒவ்வொரு வார்த்தையும் மருதாணி பூசிக்கொண்டு என் முன் வட்டமடிக்கிறது. உன்னைத் தேற்றவும் முடியாமல் தேம்பவும் முடியாமல் தேங்கி நிற்கிறேன்.

Saturday, April 9, 2011

அழகாய் பூக்குமே

அன்புக்கும் அமைதிக்கும் அர்த்தம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கையில் மருந்துக்குக்கூட இந்த அத்தியாயத்துக்குள் நுழைய மறுப்பதேன். தன்னைச் சுற்றி ஒரு வேளி போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொண்டால் யாரால் எழுப்பமுடியும். தூங்குபவர்களை  எழுப்பிவிடலாம். தூங்குவதைப்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் எரிச்சலை மூட்டினாலும் பல சமயங்களில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இவர்கள்கூட மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் அதுதான்  உண்மை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்கள் நகரும்போது  பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதபோதெல்லாம் இவர்களின் மனமும் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றதென்று யாருக்குப் புலப்படும். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது இவர்களின் மீது எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. தனக்குத் தேவையானதெல்லாம் இருந்தும்கூட பிறரின் பொருட்களை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதும் பிறரின் பொருட்களை தொலையச் செய்வதும் இவர்களை உள்ளூர ஆனந்தப்படுத்தும் ஓர் அற்பச் செயல். இப்படிச் செய்வதன் மூலம் பிறரைப் பழிவாங்கிவிட்டதாக இவர்களின் நினைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தொலைத்த பொருளைத் தேடி அலைந்து வேதனைப்படுவதைப் பார்த்துப் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்துவிடும் இவர்களின் மனது. ஆனால் பிறரின் பொருட்களை தொலைப்பதில் சுகம் காணும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தொலைந்துகொண்டிருப்பது இவர்களால் அறியப்படாத இரகசியம். இவர்கள் முழுமையாக தங்களைத் தொலைத்த பிறகுதான் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே உண்மை அறியப்படும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் இருக்கலாம். உங்கள் நண்பர்களாக இருக்கலாம். உங்கள் வீட்டில்கூட இருக்கலாம். இவர்களின் செய்கையைப் பார்த்து வெறுத்து ஒதுக்கி விடாமல் தயவுசெய்து இவர்களின் முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அழகாய் பூக்குமே.

Tuesday, April 5, 2011

கேளடி தோழி நீயொரு சேதி

அறிமுகம் இல்லாத ஊரில் அவஸ்த்தைப் படப்போகிறோமோ என்ற கவலையோடு வந்த என்னை அன்போடு அரவணைத்து தோழமைப் பாராட்டியது உன் நட்பு. குடும்பத்தை விட்டுப்பிரிந்து தொலைதூரம் வந்து துவண்டு கிடந்த என்னைத் துவட்டிவிட்டது உன் அழகான வார்த்தைகள். ஒரு நாள் இரவு உணவு அருந்த அமர்ந்தபோது என் கைப்பேசியில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அந்த விபத்து செய்தி என் கைகளில் எடுத்த உணவை வாய்க்குள் வைக்க விடாமல் செய்தது. முதலில் சாப்பிடுங்க பிறகு விசாரிப்போம் என்று ஆண்டி சொன்னதும் வாய்க்குள் வைத்த ஒரு கவளச் சோறு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கைகளைக் கழுவிக்கொண்டு நண்பரை விசாரித்தபோது பலத்த காயங்களுடன் உன்னை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. உனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டியது என் மனம். அன்று இரவு கலக்கத்தோடு இருந்த விழிகளில் உறக்கம் வரவில்லை. கண்களின் ஓரம் கண்ணீர்தான் வந்தது. எப்போது விடியும் எப்போது உன்னைப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். மறுநாள் மருத்துவமனையில் உன்னைப் பார்த்தபோது உடல் முழுக்க காயங்கள் இருந்தும்கூட உன் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் என்னை சோகத்தில் ஆழ்த்தாமல் உன்னை ரசிக்க வைத்தது. உன் காயங்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல் என் அண்ணன் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையாகவும் இப்படி நொருங்கிப்போய்விட்டாரே என்று  உன் காரைப்பற்றி கவலைப்படும்போதும் ஒரு உயிரற்ற பொருள்மீது நீ கொண்ட பாசத்தைக் கண்டு பிரமித்துள்ளேன். உன் வண்டி பயன்படுத்த முடியாமல் போனதும் நீ என்னோடு வந்து தங்கியதும் நம் நட்பு மேலும் கைகுலுக்கியது.  உன் உடல் நலம் பெற்றதும் புதிய வண்டி வாங்கிய பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ என்னைப் பேருந்து ஏற்றிவிட்டுவிட்டுப் போகும்போதெல்லாம் நன்றிப் பெருக்கோடு என் விழிகள் உன்னை வழியனுப்பும். நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் மாற்றலாகிக் கடிதம் வந்ததும் நாம் பிரியப்போகிறோம் என்ற கவலை என்னிடம் மட்டுமல்ல உன்னிடம்கூட சிறிதளவும் இல்லாமல் இருந்ததைக் கவனித்தாயா. அது ஏன் என்று உனக்குத் தெரியுமா. இருவருக்கும் ஒரே சமயத்தில் கடிதம் வந்ததால் பிரிவு வலியை ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்வோடு பிரிந்தோம். மீண்டும் நாம் சந்தித்துக்கொள்ளவே இல்லை. கைப்பேசியில் குரலும் குறுஞ்செய்தியும் மட்டுமே நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இதோ உனக்காக எழுதியுள்ளேன். இதையும் படி. இதயம் இலேசாகும்.

Saturday, April 2, 2011

கொட்டித் தீர்த்துவிடு தோழி

வணக்கம். நமக்குள் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். நம் தேசங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் உம்மையும் எம்மையும் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது கொட்டித்தீர்த்துவிடு தோழி. எரிமலையாய் குமுறிக் கொட்டித்தீர்க்கும் தோழிகளுக்குப்  பனிமலர்களைத் தூவி ஆசிர்வதிக்கும் தங்களின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள உயிர்ச்சத்துக்கள் என்னை இழுத்து உட்கார வைக்கிறது. தேவையில்லாத பேச்சுக்களைப் பேசும் உதடுகளுக்கு உடனே பூட்டுப் போடுவதும் அறியாமையால் பூட்டிக்கிடக்கும் உள்ளங்களின் பூட்டுடைத்து வாழ்க்கைக்கு வழி காட்டுவதும் தங்களுக்கே உரித்தான பானியோ. எதிர்மறை கருத்துக்களிலேயே உடும்புப்பிடியாக இருக்கும் பெண்களின் நெற்றிப்பொட்டில் தோட்டாக்களால் துளைத்தெடுக்கும் தைரியம் மிக மிக அருமை. பொய்மையின் தோலுரித்து உண்மையின் வெளிச்சத்தில் பெண்மையின் மென்மையை அழகுபடுத்துகிறது தங்களின் சொல்லாடல். அது மட்டுமா. பெண்ணால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் நியாயத் தராசில் வைத்து ஆண்மையை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்துகிறது தங்களின் வழக்காடுமுறை. அழகான கருத்துக்களை  உதட்டில் புன்சிரிப்பைத் தேக்கிக்கொண்டு சொற்களைப் பாகெடுத்து தாங்கள் அள்ளி ஊட்டும் ஆணித்தரம் என்னை அசர வைக்கிறது. வாழ்ந்த நாட்களை சாட்சியாய் வைத்து வாழும் நாட்களுக்கு வழி சொல்லும் வண்ணக் கலவையம்மா நீ. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி தாங்கள் அள்ளித் தெளிக்கும் தீர்ப்பைக் கேட்டிருந்தால் வாழ வழி தெரியாத  நல்லத்தங்காள் கூட தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி தேடியிருந்திருப்பாள். எனக்குத் தங்களை வாழ்த்த வயதுள்ளதா என்று தெரியவில்லை மனதுள்ளது. வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். அன்பான வாசகர்களே... மக்கள் தொலைக்காட்சியில் மாலை மணி ஆறுக்கு மேல் கொட்டித் தீர்த்துவிடு தோழியுடன் நீங்களும் கைகுலுக்கினால்  பெண்களின் வாழ்க்கையில் விழுந்திருக்கும் சுலுக்குகளுக்கு எப்படி முடிச்சவிழ்க்கப்படுகிறது என்பதைக் காணலாம். உங்களுக்கேகூட வழிபிறக்கலாம்.                .