Tuesday, April 5, 2011

கேளடி தோழி நீயொரு சேதி

அறிமுகம் இல்லாத ஊரில் அவஸ்த்தைப் படப்போகிறோமோ என்ற கவலையோடு வந்த என்னை அன்போடு அரவணைத்து தோழமைப் பாராட்டியது உன் நட்பு. குடும்பத்தை விட்டுப்பிரிந்து தொலைதூரம் வந்து துவண்டு கிடந்த என்னைத் துவட்டிவிட்டது உன் அழகான வார்த்தைகள். ஒரு நாள் இரவு உணவு அருந்த அமர்ந்தபோது என் கைப்பேசியில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அந்த விபத்து செய்தி என் கைகளில் எடுத்த உணவை வாய்க்குள் வைக்க விடாமல் செய்தது. முதலில் சாப்பிடுங்க பிறகு விசாரிப்போம் என்று ஆண்டி சொன்னதும் வாய்க்குள் வைத்த ஒரு கவளச் சோறு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கைகளைக் கழுவிக்கொண்டு நண்பரை விசாரித்தபோது பலத்த காயங்களுடன் உன்னை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. உனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டியது என் மனம். அன்று இரவு கலக்கத்தோடு இருந்த விழிகளில் உறக்கம் வரவில்லை. கண்களின் ஓரம் கண்ணீர்தான் வந்தது. எப்போது விடியும் எப்போது உன்னைப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். மறுநாள் மருத்துவமனையில் உன்னைப் பார்த்தபோது உடல் முழுக்க காயங்கள் இருந்தும்கூட உன் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் என்னை சோகத்தில் ஆழ்த்தாமல் உன்னை ரசிக்க வைத்தது. உன் காயங்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல் என் அண்ணன் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையாகவும் இப்படி நொருங்கிப்போய்விட்டாரே என்று  உன் காரைப்பற்றி கவலைப்படும்போதும் ஒரு உயிரற்ற பொருள்மீது நீ கொண்ட பாசத்தைக் கண்டு பிரமித்துள்ளேன். உன் வண்டி பயன்படுத்த முடியாமல் போனதும் நீ என்னோடு வந்து தங்கியதும் நம் நட்பு மேலும் கைகுலுக்கியது.  உன் உடல் நலம் பெற்றதும் புதிய வண்டி வாங்கிய பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ என்னைப் பேருந்து ஏற்றிவிட்டுவிட்டுப் போகும்போதெல்லாம் நன்றிப் பெருக்கோடு என் விழிகள் உன்னை வழியனுப்பும். நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் மாற்றலாகிக் கடிதம் வந்ததும் நாம் பிரியப்போகிறோம் என்ற கவலை என்னிடம் மட்டுமல்ல உன்னிடம்கூட சிறிதளவும் இல்லாமல் இருந்ததைக் கவனித்தாயா. அது ஏன் என்று உனக்குத் தெரியுமா. இருவருக்கும் ஒரே சமயத்தில் கடிதம் வந்ததால் பிரிவு வலியை ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்வோடு பிரிந்தோம். மீண்டும் நாம் சந்தித்துக்கொள்ளவே இல்லை. கைப்பேசியில் குரலும் குறுஞ்செய்தியும் மட்டுமே நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இதோ உனக்காக எழுதியுள்ளேன். இதையும் படி. இதயம் இலேசாகும்.