Tuesday, August 13, 2013

தூக்கம் உன் கண்களை...

தூக்கம் தூர்ந்து போனால் துக்கம் தொட்டில் கட்டும். துவண்டு விழும் தேகத்தை தூக்கிப் பிடிக்க  முடியாமல்  உடல் உபாதைகள் உருட்டி விளையாடும். மனதை மல்லாக்கா படுக்க வைத்து பாண்டி ஆட முயற்சிக்கும். பட்டு மெத்தையில் படுத்தாலும் இமைகளை மூடியதும் உறக்கம் வர மறுத்தால் உள்ளம் ஊர் சுற்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நேரம் ஊர் சுற்ற முடியும். உள்ளம் களைத்துப் போகும்போதுதான் உனக்கே தெரியாமல் உள்ளத்தை உளைச்சல் விளைச்சல் செய்யும். உளைச்சலின் விளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க மனம் மூளையைக் கட்டிப் போடும் வித்தை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும். யாருக்கும் தெரியாமல் உருவாக்கப்படும் இந்த அத்தியாயம் நோயாக உருப்பெறும் முன் பக்கத்தில் உள்ளவர் உண்மையை உணர்ந்து புத்திசாலித்தனமாக பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றினால்தான் உண்டு. இல்லையேல் அதன் விளைவு மனதை அழித்து.. உடலை அழித்து.. வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். மீண்டு வர முடியாத வேரோர் உலகத்தில் வாழ்க்கை தடம் புரண்டு தள்ளாடிக்கொண்டிருக்கும். எத்தனையோ பேர் இந்த இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நாமே பார்த்திருப்போம். கட்டாந்தரையில் படுத்தாலும் உடனே உறங்கிப் போகும் அன்பர்கள் இந்த வேதனையை உணர்ந்திருக்க சந்தர்ப்பமில்லை. பிரச்சனைகளை உண்டு வாழும் உள்ளங்கள் எவ்வளவுதான் சொகுசாகப் படுத்தாலும் உறக்கம் விலகிப் போகும்போது  அது வேரொரு சிக்கலுக்குக் கதவைத் திறந்து வைக்கிறது என்பதைப் பாதிக்கப்பட்டவர் உணர்வதில்லை. அதனால் தூக்கம் தூரப் போகும் போதெல்லாம் மூலத்தை அறிந்தால் தொல்லைகளை அறுத்து இன்புற்று வாழ நாமே வழி தேடிக்கொள்ளலாம்.

Sunday, March 10, 2013

அசோகவர்த்தினியாகவோ..அசோகவர்மனாகவோ..


பஞ்ச பூதங்கள் பஞ்சாங்கம் சொல்லவில்லையே எங்கள் குலவிளக்கு அணையப்போகிறது என்று...எப்படி... எப்படி நடந்தது இது. கண்ணிமைக்கும் நேரத்தில் களவு போனது எப்படி. கண்களைத் திறந்துகொண்டுதானே தவம் கிடந்தோம்.  தவம் களையாமல் எங்களையே களைத்துப்போட்டுவிட்ட சூட்சுமத்தை அறியாமல் தவிக்கிறோம்.எங்கள் கண்களில் மண்ணைத் தூவியது யார். விடை காண முடியாத விடுகதையாக்கிவிட்டீரே. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் நீங்கள் பாவா இல்லை. எங்களுக்கும் நீங்கள் பாவாதான். அவ்வளவு பிடிக்கும் உங்களை. எங்களுக்கு மட்டுமா உங்களைப் பிடித்திருந்தது. அக்கம் பக்கம் முதற்கொண்டு உங்களோடு நட்புக்கொண்ட அத்தனைப் பேருக்கும் அல்லவா உங்களைப் பிடித்திருந்தது. அதனால்தானோ என்னவோ ஆண்டவனுக்கும் உங்களை அதிகம் பிடித்துப் போனது போலும். நான் உங்களை மாமா என்று அழைத்ததே இல்லை. நீங்கள் அதற்கும் மேலே  தந்தையின் இருக்கையில் அல்லவா  அமர்ந்துகொண்டு இருந்தீர்கள். உங்கள் அன்பு மழையில் சாரலாகவும் தூரலாகவும் நாங்களும் உங்களோடு இணைந்திருந்தோம். உங்கள் பண்பின் நேர்த்தியை பிறருக்கும் பரிந்துரைத்திருக்கிறோம். எங்களது ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் நிறைந்துள்ளீர்கள்.  நீங்கள் இல்லாத நிகழ்வே இல்லையே பாவா. இனி.. எப்படி.. தெரியவில்லை... நீங்கள் எப்போதுமே எங்களை எதுக்காகவும் காக்க வைத்ததே இல்லை. ஆனால் அந்த  மூன்று நாட்கள்  அன்ன ஆகாரமின்றி நாங்கள் கொண்ட விரதத்தை சிவராத்திரியாக்கிவிட்டு நீங்கள் சிவலோகம் போனது எப்படி. அந்த இரவு நாங்கள்  விழி திறந்து காத்திருக்க நீங்கள் மூடிய விழியைத் திறக்காமலேயே காத்திருந்தது எதற்காக. காலத்தைக் கடந்து கரைந்து போகவா. அப்படி என்ன அவசரம். இன்னும் கொஞ்ச காலம் எங்களோடு வாழ்ந்திருக்கலாமே. அழைக்காமலேயே உதவிக்கு ஓடோடி வருவீர்களே. இப்போது நாங்கள் எல்லோரும் அழைத்தும் கூட வர மறுத்தது ஏன். எவ்வளவு நல்ல குணங்கள் உங்களிடம். இனி யாரிடம் போய் தேடுவது. எங்குப் போய் தேடுவது. எதை சொல்லியும் உள்ளத்தைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. எப்படித் தேற்றினாலும் காயத்தை ஆற்றிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இல்லாத ஒவ்வொரு கனமும் முள் முனையில் முகாரி எழுதுகிறது.  கடைசியாக நீங்கள் பறித்த நெல்லியின் கிளை பாரம் தாங்காமல் வளைந்து தொங்கியதும் அதிலுள்ள காய்களைப் பறித்துவிட்டு  நான் கிளையை உடைக்கச் சொன்ன போது அதில் இருக்கின்ற பிஞ்சுகள் எல்லாம் முற்றியதும் உடைக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றீர்களே. நினைவில்லையா... அப்போது அந்தக் கிளையின் பாரம் குறைந்ததும் நீங்கள் பிடியைத் தளர்த்தியவுடன் கிளை மேலே போய்விட்டது. இப்போது காய்களெல்லாம் முற்றி அந்தக் கிளை பாரம் தாங்காமல் மீண்டும் வளைந்து பூமியை நோக்கிக் கொண்டிருக்கிறது.  நான் சொல்லும் முன்பே நெல்லிக்காயைப் பறித்து பங்கு போட்டுவிட்டுப் போவீர்களே. இப்போது உங்களுக்கும் சேர்த்து நானே பறிக்கிறேன். நான் மட்டுமே பறிக்கிறேன். உங்களை நாங்கள் புதைக்கவில்லை விதைத்திருக்கிறோம். மீண்டும் முளைத்து வருவதற்காக. அசோகவர்த்தினியாகவோ... அசோகவர்மனாகவோ... மீண்டும் உங்கள் வரவுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

Sunday, March 3, 2013

பங்கோர் அம்மன்

 அழகிய தீவுக்குள் அழியாத சரித்திரம் ஒன்று வரையப்படாத ஓவியமாய் என் மனதுக்குள் தூரிகை ஏந்தி வாழ்கிறது. இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கும். அப்படி ஒரு சம்பவம் என் கண் முன் கண்ட காட்சி எனக்குள் பதப்படுத்தப்பட்டுள்ளது. சாலையை விட்டு சில படிகள் இறங்கினால் நான் படித்த பள்ளி. பள்ளியைச் சுற்றி பூச்செடிகளும் மாமரங்களும் சூழ்ந்திருக்கும். பள்ளியை விட்டு சில படிகள் இறங்கினால் கம்பீரமாய் எழுந்தருளியிருக்கும் காளியம்மன் கோவில். கோவிலின் முன்புறம் எந்நேரமும் அலை ஓசையை அள்ளி வீசியவாறு கடலின் நர்த்தனம். கோவிலின் விதையாய் இருந்த பாறைதான் இந்தப் பகுதியில் என் ஆதங்கம். ஓர் இரவு அம்மன் பாறையின் மேல் அமர்ந்திருந்ததை தான் நேரில் கண்டதாக என் தந்தை கண்ணில் நீர் மல்க கூறியுள்ளார். அந்த அற்புதங்களைக் கேட்டே வளர்ந்ததாலோ என்னவோ காலையில் பள்ளி சென்றவுடன் புத்தகப் பையை வகுப்பறைக்குள் வைத்து விட்டு ஓடிச்சென்று கோவிலில் விழுந்து வணங்கிவிட்டுதான் மறு வேலை. ஆதியில் அது ஒரு சிறு ஆலயம். கோவிலின் முழு வடிவத்தில் இயற்கையாகவே பாதி பாறை இடம்பெற்றிருக்கும். கோவிலின் கற்பக்கிரகமே பாறையோடுதான் இணைந்திருக்கும். கோவில் உருவான விதமே ஆச்சரியமான ஆனால் உண்மைக்குப் பாதகமற்ற சரித்திரம். ஆரம்பக்காலத்தில் அந்தப் பாறையின் பக்கத்தில் படுத்துறங்கும் பார்வையற்ற ஒருவரின் கனவில் அம்மன் தோன்றி அந்தப் பாறையில் தினமும் விளக்கு வைக்கச் சொன்னதாகவும்; விளக்கு வைக்கத் தொடங்கிய பிறகு அவர் பார்வை பெற்றதாகவும் கேள்விப்பட்டதுண்டு. அதுமட்டுமல்ல விளக்கு வைத்தவர் பார்வை இல்லாதவர் என்றும், ஓர் இரவில் அம்மன் அவர் கனவில் பாறையின் மேல்  தோன்றி காட்சி  தந்ததாலும், அதன் பிறகு அவருக்கு பார்வை கிடைத்ததாலும் அந்தப் பாறையே சக்தி பீடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அந்தக் கோவிலின் வரலாற்று பதிப்பில் நான் படித்ததுண்டு. அதன் காரணமாகவே கோவிலுக்குள் பாறையும் சேர்ந்தே இருக்கும். கோவிலை உடைத்துப் பெரியதாகக் கட்ட முடிவெடுத்தப் போது பாறையை உடைப்பதில் சர்ச்சை தொடங்கியது. உடைக்கலாம் என்று ஒரு சாராரும் உடைக்கக் கூடாது என்று மறு சாராரும் விவாதிக்க ஆரம்பித்தனர். இறுதியில் பாறையை உடைக்கக் கூடாது என்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வழங்கியவர் சாதாரண ஆள் இல்லை. திருவிழாவிற்கு நாற்பத்தெட்டு நாட்களுக்கு முன்பிருந்து அன்ன ஆகாரமின்றி கோவிலிலேயே தங்கி திருவிழாவுக்கு முதல் நாள் சுமார் பத்து மணி நேரம் கரகத்தைக் கையால் தொடாமல் தலையில் சுமந்தவாறே மக்களுக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டே கோவிலை வந்தடையும் ஒரு முதியவர். அவர் பார்ப்பதற்கே மிகவும் கம்பீரத்துடன் தெய்வீகமாகக் காட்சியளிப்பார். அவர் கொடுத்த அருள் வாக்குதான் அந்தத் தீர்ப்பு. அதுவும் பாறையை உடைத்தால் கோவில் தலைவரின் உயிருக்குப்  பேராபத்துக் காத்திருக்கு என்பதுதான் சத்திய வாக்கு. இருப்பினும் நாகரிக வளர்ச்சியின் காரணமோ, தெய்வத்தை நாருரித்துப் பார்க்கும் ஏளனமோ தெரியவில்லை. பாறையை உடைத்தே தீர வேண்டும் என்று தீர்மானமானது. பழைய கோவிலைப் பிரித்து புதிய கோவில் கட்டும் வேலை தொடங்கப்பட்டது. ஒரு நாள் திடீரென்று பள்ளிக்கூடமே அதிரும் அளவுக்கு வேட்டு சத்தம் கேட்டது. படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிப்போய் பார்த்தோம். வேட்டு வைக்கப்பட்டு பாறை இரண்டு துண்டுகளாக பிளந்துகிடந்தது. பாறை சிதறல்களின் தூசு புகை அடங்கும் முன் கோவில் தலைவர் மூர்ச்சையற்று சரிந்து கிடப்பதைப் பார்த்து அனைவரும் பதறிவிட்டனர். அவரை அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினர் உடன் இருந்தவர்கள். ஆனால் பலனற்றுப் போனது. சொன்ன அருள்வாக்கு சத்தியமாகிப்போனது. கோவில் தலைவருக்கு மீண்டும் மூச்சு வரவே இல்லை. அந்த சக்தியின் வடிவத்தை முதன் முறையாக அப்போது நான் அனுபவித்தேன். இன்றுவரை அந்நிகழ்வு என் உயிரோடு ஊஞ்சல் கட்டிக்கொண்டு நிற்கிறது. பிறகு பாறைத் துண்டுகளை அடித்தளமாக்கிக் கோயில் எழுப்பப்பட்டது. அதன்பிறகு  அந்தக் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் என் கண்களுக்குப் பாறை மட்டுமே விஸ்வரூபம் கொண்டு அம்மனை ஏந்தி நிற்கிறது.

Saturday, February 16, 2013

உன் விழியில் என் பார்வை

மலை உச்சியிலிருந்து விழும் அருவியைப் பார்க்கும் போதெல்லாம் திகைப்போடு மலைத்திருக்கிறேன். அதன் மூலத்தைப் பார்க்கும் ஆவல் எனக்குள் ஏற்படும். இந்த நீர் எங்கிருந்து ஊற்றெடுத்து எப்படி வருகிறது என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். என்றாவது ஒரு நாள் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டதுண்டு. பார்த்தேன். அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கும்கி திரைப்படம் எனக்கு வழங்கியது. விடுமுறை நாள்களில் பொழுது போக்க என்ன செய்வது என்று யோசிக்கும்போதெல்லாம் என் குடும்பத்தார் சட்டென்று யோசனை வழங்குவது திரையரங்கம்தான். ஆனால் கும்கி திரைப்படம் வெளியானபோது யோசிக்கவேயில்லை. காத்திருந்து விரைந்து சென்று பார்த்தோம். படம் பார்க்கும் ஆவலைவிட கலையுலகின் முடிசூடா திலகத்தின் வாரிசு எப்படி இருக்கும் என்ற ஆவலே அதிகமாக இருந்தது. அதுவும் பாடல் வெளியீட்டு விழாவைப் பார்த்த பிரமாண்டம் யானையின் இரு தந்தங்களயும் பற்றிக்கொண்டு நெற்றிப்பொட்டில் முத்தமிடும் காட்சி அமர்க்களப்படுத்தியது. அப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கும் ஒரு காட்சி. அந்தக் காட்டின் அழகும் அந்த அழகுக்கே மகுடம் தரித்ததைப் போல் அமைந்த கொட்டும் அருவியும் என் நெடுநாள் கனவுக்குள் நுழைந்து தெரித்து ஓட ஆரம்பித்தது. அந்தக் கொட்டும் அருவியின் மலை உச்சியில் போய் பார்க்க வேண்டும் என்று சின்ன வயசுல அம்மாவைக் கேட்டேன் என்று அவள் தன் ஆவலை வெளியிட்டபோது யாருக்கும் சொல்லாத என் ஆசையும் மொட்டவிழ்த்துக் கொண்டு நின்றது. உயரத்திலிருந்து வெள்ளை வெளேரென்று கொட்டும் நீரிலிருந்து தெரித்துக் கிளம்பும் நீர்ப்புகை சில்லென்று எங்கும் பரவ கீழிருந்து மெதுவாக காமிராவை நகர்த்தி அருவியின் உச்சிவரை கொண்டு செல்லும் காட்சிக்குள் நானும் மூழ்கி எழுந்தேன். நானே காமிராவின் கண்களாய் மாறிப்போனதாய் உணர்ந்தேன். காணக்கிடைக்காத காட்சியை நேரில் காண்பதைப் போல் புலகாங்கிதம் எனக்குள். நான் நேரில் பார்க்க ஆசைப்பட்ட பார்க்க முடியாத காட்சிகள் என் கண் முன் விரிந்து நிற்பதைக் கண்டு பிரபிப்போடு பூரித்துப் போனேன். அந்தப் பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு நன்றி. காட்சியை அற்புதமாய் பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு மிக்க நன்றி