Thursday, February 16, 2012

பஞ்சுக்குள் நுழைந்த பல்லக்கு

கல்லூரி வாசல் தோரணம் கட்டிய நாட்கள் அது. ஓவியம் என்னோடு கலந்த கலை என்பதால் போட்ட மனுவுக்கு உடனே வெற்றி கிடைத்தது. அந்தப் பாட வகுப்புக்குச் சென்றபோது நான் எதிர்ப்பார்த்ததைப் போல் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு முற்றும் மனனமாகிப் போனவனுக்கு அ என்ற முதல் எழுத்தை மட்டுமே மனதில் ஒட்ட வைக்க முயற்சித்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அப்படி இருந்தது எனக்கு. ஒருநாள் ஓவியத்தில் வண்ணமிடும் கலையை விரிவுரையாளர் ஆரம்பித்தபோது அவரைப் பின்பற்றி மற்ற மாணவர்கள் வண்ணமிட நான் மட்டும் அவருக்காகக் காத்திராமல் விரைவாக செய்து முடிக்க வந்ததே கோபம் அவருக்கு. உனக்கு அதிகம் தெரியும் என்ற நினைப்பா என்று என்னிடம் கோபித்துக் கொண்டார். பதிலேதும் சொல்லாமல் நான் மௌனமாய் இருந்தேன். பிறகு வேறு ஒரு தலைப்பில் ஓவியம் தீட்டி மறு வாரம் கொண்டு வரச்சொன்னார். யோசித்தேன். இவரை அடியோடு சாய்க்க வேண்டுமானால் என் முழு திறமையும் காட்ட வேண்டுமென முடிவெடுத்தேன். அருவி ஒன்றில் இரண்டு பாரைகளுக்கு நடுவே அன்னம் ஒன்று பறந்து வந்து நீரின் மேல் அமர முயற்சிப்பதைப் போலவும் பாரைகளின் இடுக்கில் சூரிய ஒளி ஊடுருவி வந்து அந்த அன்னத்தின் மேல் பட்டு அருவி நீரிலும் படுவது போலவும் காட்சி அமைத்தேன். அதுமட்டுமின்றி அருவியிலிருந்து ஓடிவரும் நீரின் வேகத்தைக் காட்ட பாரைகளின் மீது பட்டுத் தெறித்து விழும் நீர்த் துளிகளின் காட்சியை மிக அருகிலும் காட்டியிருந்தேன். மறு வாரம் வகுப்பிற்குள் நுழைந்ததும் அனைத்து மாணவர்களும் தாங்கள் வரைந்து வந்த ஓவியங்களைப் பிரித்து மேசை மேல் வைத்தனர். நானும் என் ஓவியத்தைப் பிரிக்காமல் மேசை மேல் வைத்தேன். விரிவுரையாளர் என் மேசையருகே வந்தார். என் ஓவியத்தை அவரே பிரித்தார். ஏதும் பேசாமல் ஓவியத்தை அவர் மேசை மேல் கொண்டு வைத்தார். மாணவர்களை அருகில் வந்து அமரச் சொன்னார். என் ஓவியத்தை எடுத்து அனைவரும் பார்க்கும்படி உயரத்தில் ஒட்டினார். ஓவியக் கலைக்கே உரித்தான பல கூறுகள் என் ஓவியத்துள் ஒளிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதை எங்கே கற்றாய் என்று என்னிடம் கேட்டார். எங்கும் கற்கவில்லை என்றேன். சில நிமிடங்கள் இமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு தன் இரு கைகளையும் தட்டி தனது சந்தோசத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு நில்லாமல் அனைவரையும் கை தட்டச் சொன்னார். இப்படி ஒரு பாக்கியம் கிடைக்க வரம் வாங்கி வர வேண்டும் என்றார். அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் என்னைப் பல்லக்கில் ஏற்றின. பிறகு அந்த ஓவியம் கல்லூரியில் காட்சித் தேர்வாக தேர்வு பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார்.