Wednesday, February 16, 2011

வழிமேல் விழி வைத்து...

என் பள்ளியின் முன்புறம் ஒரு சிறு பூந்தோட்டம் இருந்தது. அதில் அவரவருக்கு விருப்பமான செடிகளை நட்டுவைத்து வளர்க்கும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. என்ன செடி நடலாம் என்று என் மண்டைக்குள் ஒரே குடைச்சல். உனக்கு ரோஜாப்பூதான ரொம்பப் பிடிக்கும் அந்தச் செடிய நடு என்று அம்மா ஆலோசனை சொன்னதும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டதைப்போல் நிம்மதி பெரு மூச்சு விட்டேன். மறுநாள் காலையில் அம்மா வெட்டித் தந்த ரோஜாக் கிளையை என் பள்ளியின் பூந்தோட்டத்தில் நட்டு வைத்தேன். என் வகுப்பறையின் பின்புறத்தில் ஒரு நீர்க்குழாயும் ஒரு சிறிய வாளியும் இருக்கும். அதில்தான் நான் தினந்தோறும் நீர் பிடித்து ரோஜாச் செடிக்கு வார்த்து வந்தேன். அந்த ரோஜாக் கிளை துளிர் விட ஆரம்பித்ததும் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு. அந்தச் செடியில் புதிய இலைகளைப் பார்க்கும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை பூக்கும். அந்த ரோஜாச் செடியில் எப்போது பூ பூக்கும் என்று தவம் கிடக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ஒரு சிறு அரும்பு துளிர்த்திருப்பதைப் பார்த்தேன். அந்த முதல் அரும்பு என்னை ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பல முறை அந்த மொட்டு மலர்கிறதா என்று ஓடிச்சென்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நாளுக்கு நாள் மொட்டு பெரிதாகிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். மேலிருக்கும் புல்லிதழ் அவிழ்ந்து சிவப்பு நிறம் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. என் நண்பர்கள் நாளை ரோஜா மலர்ந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். நாளை எப்போது வரும் என்ற காத்திருப்போடு வீடு திரும்பினேன். அங்கு காத்திருந்தது எனக்கு ஒரு பேரிடி. சீக்கிரம் சாப்பிட்டிட்டு கிளம்பு பாட்டி இறந்துட்டாங்களாம் தந்தி வந்திருக்கு என்று மூக்கை சிந்தியவாறே அம்மா துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எனக்கும் கவலையாகத்தான் இருந்தது இருப்பினும் திரும்பி வருவதற்கு நான்கைந்து  நாட்கள் ஆகும் என்று தெரிந்ததும் இந்த பாட்டிக்கு நேரம் காலம் தெரியாதா என்று மனம் முனுக ஆரம்பித்தது. அம்மா கண்ணீரும் கம்பலையுமாய் பேருந்தை விட்டு கீழிறங்க நானும் பிந்தொடர்ந்தேன். அந்த வீட்டின் முன்புறத்தில் வெற்றிலைப் பாக்கை இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பாட்டி. வந்ததே கோபம் எனக்கு. பிறகுதான் அது தவறுதலாக வந்த தந்தி என்று வீட்டில் இருந்தவர்கள் பேசி சிரித்தபோது தெரிந்துகொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். என் பக்கத்து வீட்டு நண்பன் ஓடி வந்து உன் ரோஜாப்பூ மலர்ந்திருச்சி தெரியுமா. இந்நேரம் வாடிப்போயிருக்கும் என்று என் ஏக்கத்தைப் பெரிதாக்கினான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் ரோஜாப்பூ என்ன ஆகியிருக்குமோ என்ற தவிப்பு எனக்கு. மறுநாள் ஓடிச்சென்று பார்த்தேன். ரோஜாப்பூ வாடாமல் வதங்காமல் எனக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தது. மலர்ந்தது ரோஜா மட்டுமல்ல என் மனமும்தான்.