Wednesday, May 25, 2011

பிரியாவிடை

வணக்கம். இந்தக் கீற்று உங்களுக்கு சமர்ப்பணம். உடைந்துபோன சில்லுக்களாய் சிதைந்துபோகும் முன் தாங்கிப் பிடித்து தடவிக்கொடுத்தது உங்கள் வார்த்தைகள். ஓடி ஓடி ஓய்ந்துபோய் சோர்ந்து வந்த நேரம் இதழ் பிரித்து வெளி வந்த தேன்துளியாய் என் உச்சி முகர்ந்து கைகுலுக்கியது உங்கள் சொற்கள். கரம் குவித்து கவி பாடி என்னை நெகிழச் செய்தன உங்கள் வாழ்த்துகள். எத்தனை ஆழமாய் என்னைப் படித்துள்ளீர்கள், இரசித்துள்ளீ ர்கள், மதித்துள்ளீர்கள் என்பதனை அறிந்தபோது ஆச்சரியம் என்னை ஆட்கொண்டது. அறிமுகப் படுத்திய நாட்களை அழகாக அச்சுக்கோர்த்து நாட்குறிப்பேட்டில் சேர்த்து வைத்ததை எனக்குப் படம் பிடித்துக் காட்டினீர்கள். நட்பின் ஆழத்தை அளந்து காட்ட முயற்சித்து அளவுகோல் போதாமல் திக்குமுக்காட வைத்தீர்கள். தூய நட்பு என்றுமே தூர்ந்துபோகாது என்று துவைத்துப்போட்ட துயரங்களைத் தூக்கி எறியச் சொன்னது உங்களன்பு. உலர்ந்து போனது உடலா உள்ளமா என்று அறியும் முன் என் சோர்வுகளைத் துறவு கொள்ளச் செய்தது உங்கள் உல்லாச வரவேற்பு. குலு குலு அறையின் கதவைத் திறந்ததும் என்னை வரவேற்ற என் பெயர் உங்கள் அன்பின் முகவரியைச் சொல்லாமல் சொல்லிப் போனது. எனக்கே தெரியாமல் சேர்த்து வைத்த என் வரிகளுக்கு வடிவம் கொடுத்த போது என் விழியோரம் துளிர்த்த நீர்த்துளியை இமைகள் மறைத்தன. அன்று வந்திருந்த குழந்தைகள்கூட என்னுரை கேட்டு கண்ணீர் சொரிந்த போது என் பதிவுகளின் சுவடுகள் அவர்களின் மனதிலும் பட்டா போட்டிருப்பதைக் கண்டு மனம் கலங்கினேன். நான் நலம் வாழ வாழ்த்தியதும்  என் வருகைக்காக வாசல் திறந்து வைத்து காத்திருப்பதும் காணும்போது மனசு மகிழம்பூவாய் மணக்கிறது. நான் வந்ததும் போனதும் வெறும் கானல் நீராய் இல்லாமல் கல் வெட்டாய் பதிந்துள்ளது என்பதனை அறியும் போது உள்ளம் மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்து போகிறது. இறைவனின் கட்டளை என்னவென்று புரியும்வரை காவலாய் நிற்கிறது காலம் இங்கே.

Tuesday, May 10, 2011

வரம் வாங்கி வந்த நாட்கள்

பாபா....பாபா....ஏன் இவ்வளவு சீக்கிரம் உங்களை மறைத்துக் கொண்டீர்கள். இந்த அவதாரத்தில் உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எழுதப்படவில்லையா. வருவேன் என்று சொல்லி வைத்தேனே. மறந்துவிடவில்லை என்பது எனக்குத் தெரியும். மறைந்து நின்று உங்களின் மறுபதிப்பை பதியம்போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்களுக்கேது மரணம் பாபா. மரணத்தை மரிக்க வைத்த நீங்கள் இங்குப் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. நீங்கள் இப்புவிக்கு வந்துபோன நாட்கள் அல்லவா வரம் வாங்கி ஜனித்துள்ளன. என் மனம் மலிந்து உடல் உரிந்து உயிர் உறைந்த பொழுதுகளில் உங்கள் திருவுருவம் காட்டி என்னைத் தூக்கி நிறுத்திய நாட்களை எப்படிச் சொல்வேன். உங்களது செந்நிற கமலப் பாதங்களை என் கண்முன் பதித்துச் சென்ற தருணம் என் விழிகளுக்குள் படர்ந்திருந்த சோகப்படலம் உங்கள் காலடியில் கரைந்து போனதை யாரிடம் சொல்வேன். அந்த விடியற்காலைப் பொழுதில் உங்கள் விஜயம் என் அறை முழுக்க வீசிய பூ வாசம் என்ன புண்ணியம் செய்தேன் நான். உங்கள் கால் தடத்தில் மலர்ந்த அழகிய மலர்களின் ஒளி என் அறையை மூழ்கடித்ததை எப்படிச் சொல்வேன். அன்று காலை நான் கண்விழிக்கும் போது உங்கள் இரு கரங்களையும் உயர்த்தி என்னை ஆசிர்வதித்ததும் விடிந்ததும் என் பக்கத்து அறையில் இருந்தவர்கள் விடியற்காலை நான்கு மணிக்கு என்ன அப்படியொரு வாசம் என்று பேசிக்கொண்டபோதும்தான் நான் கண்டது கனவல்ல நனவென்று உணர்ந்தேன். அன்று மாலை என்னோடு தங்கியிருந்தவர் உங்கள் நிழல்படத்தை வாங்கிவந்து வரவேற்பறையில் மாட்டிவைத்தபோது மெய்யாகவே மெய் சிலிர்த்துப் போனேன். காரணம் நான் கண்விழிக்கும்போது ஆசிர்வதித்த அதே திருவுருவத்தை அங்கு நிழற்படமாகப் பார்த்தேன். நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆனால் அன்று நடந்த எல்லாமே யாரோ சொல்ல யாரோ நடத்திக்கொண்டிருப்பதைப் போன்றே இருந்தது. அநாதையாய் நான் உணர்ந்த உணர்வுகளை உடைத்து என் தலை சாய்க்க உங்கள் மடி காத்திருப்பதைப் புன்னகையோடு எனக்குப் புரியவைத்தீர்கள். ஒருவேளை நான் உங்களை சந்திக்கும் நாட்கள் தாமதமாகிவிட்டது என்பதனால்தான் நீங்களே வந்து என் தலை கோதிச் சென்றீர்களா பாபா. என்னே உங்கள் கருணை. யாரிடம் போய் சொல்வேன் இந்த அரிய அனுபவத்தை. வார்த்தைகளின் வரம்புக்குள் வர முடியாத வாழ்வல்லவா அது. எப்படி காற்றும் மழையும் மலரும் ஒளியும் சொல்லும் மொழி வடிவமற்றுள்ளதோ அப்படியல்லவா வலிமையாய் மௌனித்துள்ளது. உங்களுடைய ஓய்வு நேரத்தை முடித்துக்கொண்டு விரைந்து எழுந்து வரும் பொழுதுகளுக்காகத் திருவோடு ஏந்திக் கொண்டு நிற்கிறது காலம். மீண்டும் ஒரு புதிய பரிணாமத்துக்குள் புகுந்து வரப்போகும் உங்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது  அரியாசனம்.

Monday, May 2, 2011

வானம் வளையும்

சக்கர நாற்காலியில் நீ வளம் வர சுமையே சுகமாய் மொத்த குடும்பமும் உன்னைச் சுற்றி சேவகம் செய்ய காலம்  காத்துக்கிடக்கிறதா இல்லை காலனைக் காக்க வைத்துவிட்டாயா. முதல் முறை என் விழிகளைச் சந்திக்கத் திராணியில்லாமல் உன் விழிகள் தலை சாய்த்துக் கொண்டதும் ஏதோ ஒரு கோபம் உன்மேல் எனக்கு வந்து போனது உண்மைதான். ஆனால் உன் வேகமும் விவேகமும் என்னை சற்று உரசிப் பார்த்தப்போது என் கோபம் தானாகக் கழன்று போனது. உன் தாயும் தந்தையும் நாள்முழுக்க உனக்காகக் கைகட்டி இங்கே காத்துக் கிடக்க எந்த சலனமும் இல்லாமல் நீ உன் நண்பர்களோடு சகஜமாய் சந்தோசமாய் காலத்தைச் சாய்த்துப் பிடித்துக் கண்ணடிக்கிறாயே அது எப்படி.  இரண்டு மாதக் குழந்தையைத் தோள் மீதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் உன்னை மார்போடும் சாய்த்துக்கொண்டு இங்கே தவமாய் தவம் கிடக்கும் தாய்மையை என்னவென்று சொல்வது, காலம் உன்னைக் கட்டிப் போட்டாலும் அங்கேயே சுருண்டு கிடக்காமல் கட்டவிழ்த்து வீசி விட்டு எழுந்து அமர்ந்து ஆர்ப்பரிக்கும் நீ எழுந்து நிற்க உன் சக்தி முழுதும் திரட்டு.  சாதித்தவர்களின் பட்டியலைத் தேடு.  வல்லமை தர வேணடி வானுலாவ நடந்துபோ. வானம் உனக்காக வளைந்து வரும்.