Thursday, October 4, 2012

நட்டுவைத்தேன்

அன்று காலைப் பொழுது புலர்ந்ததும் எப்பொழுதும் போல் அறைக்குள் சென்று என் நாற்காலியில் அமர்ந்ததும்  மேசை மேல் அடுக்கி வைத்திருந்த கோப்புகளோடு என் விரல்கள் உறவாட ஆரம்பித்தன. அலுவலக அறையில் கலகல வென கேட்ட சிரிப்பொலி அறையின் நிசப்தத்தை உடைத்தது. அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது விளங்கவில்லை. ஆனால் ஏதோ அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் புரிந்தது. அவர்களுக்குள் தொடங்கிய பேச்சு முடிவுறும் முன் என் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் என் நெருங்கிய தோழி. நுழைந்ததோடு நில்லாமல் சிரிப்புக்கான காரணத்தை எனக்கு விளங்க வைத்து விடும் ஆர்வத்தில் நான் எதுவும் கேட்காமலேயே தன் இள வயதில் நடந்த அனுபவம் ஒன்றை மிக சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தாள். பள்ளிப் பருவத்தில் தான் ஓர் ஆட்டுக் குட்டியை மிக மிக அன்போடு வளர்த்த கதையை அவளது நினைவுக் குறிப்பிலிருந்து அச்சுக் கோர்க்க ஆரம்பித்ததும் அவள் முகமெங்கும் சந்தோச நட்சத்திரங்கள் ஒளிர்விடுவதைப் பார்த்தேன். என் கைகள் நான் பார்த்துக் கொண்டிருந்த கோப்பைத் தானாக மூடியது. பள்ளிக்குச் செல்லும் முன் அந்த ஆட்டுக்குட்டிக்குப் புட்டிப் பால் கொடுத்துவிட்டு செல்வதையும் அதைத் தூய்மைப்படுத்துவதையும் சொல்லும்போது எல்லாருமே தான் வளர்க்கும் செல்லப் பிராணியை இப்படிப் பார்த்துக் கொள்வது இயல்புதானே என நினைத்தேன். ஆனால் அந்த ஆட்டுக்குட்டியின் கால் ஊனம் என்பதும் அதனால் அதன் கால்களைச் சரிப்படுத்த ஆட்டுக்குட்டியின் பாதி உடலை மணலுக்குள் தினம் தினம் புதைத்து வைப்பதைப் பற்றியும் சொல்லும் போது அடடா என உச்சுக் கொட்டியது என் மனது. பிராணிகளிடம் இப்படிப்பட்ட பரிவு காட்ட எத்தகைய அன்பான உள்ளம் வேண்டும். என் தோழியின் அன்பான மனது என்னை இளக வைத்தது. அவள் கதையைத் தொடர்வதை சற்று நிறுத்தி அந்த ஆடு நடந்ததா என்று குறுக்கு விசாரணை செய்தேன். ஆமாம் நடந்தது என்று அவள் கூறியதும் அதை விட சுவாரசியம் அவள் தொடர்ச்சியாக சொன்ன விஷயங்கள். ஒரு நாள் வழக்கம்போல் ஆட்டுக்குட்டிக்குத் தேவையான சேவைகளை செய்து விட்டு அந்த ஆட்டுக்குட்டியின் கால்களை மணலுக்குள் புதைத்து வைத்து விட்டு பள்ளிக்குச் செல்ல காலதாமதமாகி விட்டதாகவும்  ஆசிரியரும் மற்ற நண்பர்களும் காரணம் கேட்டபோது தான் ஆட்டுக்குட்டியை நட்டு வைத்து விட்டு வருவதற்கு தாமதமாகி விட்டதாக சொன்னபோது அங்கிருந்த அனைவரும் கலகலவென சிரித்து விட்டதாகவு ம் சொன்னாள். அவள் சொல்லி முடிப்பதற்குள் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நானும் வாய் விட்டு சிரித்து விட்டேன். ஆனால் அதன் பிறகு அவள் சொன்னது என் மனதைப் பிழிந்தது. அவள் பள்ளி விட்டு வந்த ஒரு நாள் அவளை உலுக்கிய அந்த சோகம்... ஆசையோடும் அன்போடும் அரவணைத்த ஆட்டுக்குட்டியைக் காணாமல் அவள் தேடியபோது  நேர்த்திக் கடனைத் தீர்க்க அந்த ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்து விட்டதாக வந்த தகவல் அவளைக் காயப்படுத்தி விட்டதாக சொன்னாள்.  அவள் முகத்தில் காயத்தின் வலி படர்வதைப் பார்த்தேன். சில வினாடி நிசப்தம் என் அறைக்குள். அந்த நிகழ்வுக்குப் பிறகு தான் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டதாகக் கூறினாள். அதன் பிறகு எந்தப் பிராணியையும் தான் வளர்க்கவில்லை என்றும் கூறினாள். எனக்குள்ளும் மெல்லிய சோகம் இழையோடியது. இருப்பினும் ஆட்டை நட்டு வைத்தேன் என்று அவள் சொன்னது நினைவுக்கு வரும்போதெல்லாம்  எனக்குள்ளிருந்து சிரிப்பலைகள் மோதிவிட்டுச் செல்லும் .