Thursday, October 4, 2012

நட்டுவைத்தேன்

அன்று காலைப் பொழுது புலர்ந்ததும் எப்பொழுதும் போல் அறைக்குள் சென்று என் நாற்காலியில் அமர்ந்ததும்  மேசை மேல் அடுக்கி வைத்திருந்த கோப்புகளோடு என் விரல்கள் உறவாட ஆரம்பித்தன. அலுவலக அறையில் கலகல வென கேட்ட சிரிப்பொலி அறையின் நிசப்தத்தை உடைத்தது. அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது விளங்கவில்லை. ஆனால் ஏதோ அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் புரிந்தது. அவர்களுக்குள் தொடங்கிய பேச்சு முடிவுறும் முன் என் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் என் நெருங்கிய தோழி. நுழைந்ததோடு நில்லாமல் சிரிப்புக்கான காரணத்தை எனக்கு விளங்க வைத்து விடும் ஆர்வத்தில் நான் எதுவும் கேட்காமலேயே தன் இள வயதில் நடந்த அனுபவம் ஒன்றை மிக சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தாள். பள்ளிப் பருவத்தில் தான் ஓர் ஆட்டுக் குட்டியை மிக மிக அன்போடு வளர்த்த கதையை அவளது நினைவுக் குறிப்பிலிருந்து அச்சுக் கோர்க்க ஆரம்பித்ததும் அவள் முகமெங்கும் சந்தோச நட்சத்திரங்கள் ஒளிர்விடுவதைப் பார்த்தேன். என் கைகள் நான் பார்த்துக் கொண்டிருந்த கோப்பைத் தானாக மூடியது. பள்ளிக்குச் செல்லும் முன் அந்த ஆட்டுக்குட்டிக்குப் புட்டிப் பால் கொடுத்துவிட்டு செல்வதையும் அதைத் தூய்மைப்படுத்துவதையும் சொல்லும்போது எல்லாருமே தான் வளர்க்கும் செல்லப் பிராணியை இப்படிப் பார்த்துக் கொள்வது இயல்புதானே என நினைத்தேன். ஆனால் அந்த ஆட்டுக்குட்டியின் கால் ஊனம் என்பதும் அதனால் அதன் கால்களைச் சரிப்படுத்த ஆட்டுக்குட்டியின் பாதி உடலை மணலுக்குள் தினம் தினம் புதைத்து வைப்பதைப் பற்றியும் சொல்லும் போது அடடா என உச்சுக் கொட்டியது என் மனது. பிராணிகளிடம் இப்படிப்பட்ட பரிவு காட்ட எத்தகைய அன்பான உள்ளம் வேண்டும். என் தோழியின் அன்பான மனது என்னை இளக வைத்தது. அவள் கதையைத் தொடர்வதை சற்று நிறுத்தி அந்த ஆடு நடந்ததா என்று குறுக்கு விசாரணை செய்தேன். ஆமாம் நடந்தது என்று அவள் கூறியதும் அதை விட சுவாரசியம் அவள் தொடர்ச்சியாக சொன்ன விஷயங்கள். ஒரு நாள் வழக்கம்போல் ஆட்டுக்குட்டிக்குத் தேவையான சேவைகளை செய்து விட்டு அந்த ஆட்டுக்குட்டியின் கால்களை மணலுக்குள் புதைத்து வைத்து விட்டு பள்ளிக்குச் செல்ல காலதாமதமாகி விட்டதாகவும்  ஆசிரியரும் மற்ற நண்பர்களும் காரணம் கேட்டபோது தான் ஆட்டுக்குட்டியை நட்டு வைத்து விட்டு வருவதற்கு தாமதமாகி விட்டதாக சொன்னபோது அங்கிருந்த அனைவரும் கலகலவென சிரித்து விட்டதாகவு ம் சொன்னாள். அவள் சொல்லி முடிப்பதற்குள் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நானும் வாய் விட்டு சிரித்து விட்டேன். ஆனால் அதன் பிறகு அவள் சொன்னது என் மனதைப் பிழிந்தது. அவள் பள்ளி விட்டு வந்த ஒரு நாள் அவளை உலுக்கிய அந்த சோகம்... ஆசையோடும் அன்போடும் அரவணைத்த ஆட்டுக்குட்டியைக் காணாமல் அவள் தேடியபோது  நேர்த்திக் கடனைத் தீர்க்க அந்த ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்து விட்டதாக வந்த தகவல் அவளைக் காயப்படுத்தி விட்டதாக சொன்னாள்.  அவள் முகத்தில் காயத்தின் வலி படர்வதைப் பார்த்தேன். சில வினாடி நிசப்தம் என் அறைக்குள். அந்த நிகழ்வுக்குப் பிறகு தான் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டதாகக் கூறினாள். அதன் பிறகு எந்தப் பிராணியையும் தான் வளர்க்கவில்லை என்றும் கூறினாள். எனக்குள்ளும் மெல்லிய சோகம் இழையோடியது. இருப்பினும் ஆட்டை நட்டு வைத்தேன் என்று அவள் சொன்னது நினைவுக்கு வரும்போதெல்லாம்  எனக்குள்ளிருந்து சிரிப்பலைகள் மோதிவிட்டுச் செல்லும் .                                                                                                                                                                                                                                       

Wednesday, July 11, 2012

நீ..நான்..வலி

இன்று உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்... மீண்டும் மீண்டும் உன்னைத் தொட்டுத் தடவியது என் விரல்கள். விழிகளில் நீர் பூத்தது. பூத்த நீர்த்துளிகள் உன் மீது சொட்டுச் சொட்டாய் விழுந்து ஈரமாகியது. அந்த ஈரத்தையும் உடனே துடைத்தது என் விரல்கள். ஏனோ இன்று உன் மேல் அளவுகடந்த கவனத்தைத் திருப்பியது என் மனம். உன்னைத் தனித்துப் பார்க்கத் துவங்கியது என் ஆழ்மனம். எத்தனைப் போராட்டம்.. பத்து வயதிலிருந்து விருந்தாளியைப் போல் வரத் தொடங்கிய புண்களோடு என்னைப் பள்ளிக்குச் சுமந்து சென்றதும்  வலியோடு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதும் காலுறையை கழற்ற முடியாமல் நீரில் ஊர வைத்து கழற்றும் போது வழியும் ரத்தத்தைக் கண்டு என் விழிகள் அழுவதும் இப்போது நினைத்தாலும் அழுகை அழுகையாய் வருகிறது. மற்றப் பிள்ளைகள் விளையாடும் போது ஏக்கத்தோடு நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் புண்கள் ஆறியதும் நாமும் விளையாடலாம் என்று என் மனம் ஆறுதல் சொல்லும். எத்தனை மருந்துகள் எத்தனை ஊசிகள். புண்கள் ஆறியதும் ஓடியாடி விளையாடி பூரித்துப் போவேன். ஆனால் அந்தக் குதூகலமெல்லாம் ஒரு மாதம் கூடத் தாக்குப் பிடிக்காது. மீண்டும் பழைய பள்ளவிதான். மாதம் ஒரு முறையோ இரு முறையோ மீண்டும் வந்து விடும் புண். அந்த நிலையிலும்கூட வீட்டிலிருந்து ஆறு கீலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கு ஒருநாள் கூட மட்டம் போடாமல் போய்வந்ததையும் மாலை வகுப்பு இருந்தால் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி சென்று படித்து விட்டு வீட்டுக்கு நடந்தே சென்றதையும் நினைக்கும் போது என்னைப் பார்த்து நானே பெருமைப்படுகிறேன். ஒரு நாள் இரு நாள் அல்ல பத்து வருடங்களுக்கு மேல் இந்த வலியையும் வேதனையையும் தாங்கி இருக்கிறேன். பிறகு புண்கள் வந்து போகும் இடைவெளி அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது, நான் படும் அவதியைப் பார்த்து என் அம்மா வெள்ளியில் பாதங்கள் செய்து அம்மனுக்குச் சாற்றியதன் விளைவாகக் கூட இருக்கலாம். பல வருடங்கள் கடந்து போனது. இப்போதெல்லாம் அடிக்கடி ஒருவித வலி வருகிறது. அப்போதெல்லாம் நீ பட்ட அவதியை என் நாட்குறிப்பேடு எனக்குப் புரட்டிக் காட்டுகிறது. சோர்ந்து விடாதே......விளையாட்டாய் கூட...

Tuesday, May 8, 2012

அஜான் ஸ்ரீபானோ

அஜான் ஸ்ரீபானோ. ஒரே நாளில் உலகின் விழிபடலத்துக்குள்லெல்லாம் நுழைந்து கருவிழிக்குள் கவிதை பாடிய அன்பின் திருவுருவம் நீ. ஊருக்கே அன்னமிடக்கூடிய அட்சயப் பாத்திரம் தந்தையின் கையில். இரந்துண்டு வாழும் அன்னப்பாத்திரமோ மகனின் கையில். எப்படி...? கோடியில் புரளவேண்டிய கோமேதகமல்லவா நீ. எதுவுமே எட்டித் தொட முடியாத அளவுக்கு இமயத்தின் உச்சியில் அமர்ந்துவிட்ட உன்னை இனி கோடி என்ன... கோமேதகமென்ன.... எதுவுமே அசைக்க முடியாது என்பதை நிருபனமாக்கிவிட்டாய். ஆன்மீகம் என்ற போர்வையில் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் பல அரலி விதைகள் உன்னைப் பார்த்தாலே முளைவிட முடியாமல் மண்ணுக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொள்ளும். உலக மாயையை விலக்கிய உண்மையின் திருவுருவம் நீ. கதைகளிலும் காவியங்களிலும் உன் போன்ற கதைகளைப் படித்ததுண்டு. அப்போதெல்லாம் இது கற்பனையின் வடிவத்துக்கு முலாம் பூசப்பட்டுள்ளது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதுண்டு. உமது வரவைக் கண்ட பிறகுதான் பணமும் பதவியும் பஞ்சணையாய் இருந்தும் கூட சலனமில்லாமல் சலிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத ஆன்மாவும் இவ்வுலகில் இன்னும் பிறப்பெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தேன். தங்கத் தட்டில் தாம்பூலம் தர தந்தை தயாராய் இருந்தும் அதனைத் தட்டிவிட்டு திசை மாறிய உமது திருப்பாதங்களுக்கு ஒரு வேண்டுகோள்..... அன்பே ஆடையாய்க் கொண்டு அனைத்தையும் துறந்ததைப்போல் பிறவியே வேண்டாமென பிறப்பறுத்து சென்று விடாதீர்.. நானே கடவுள் என நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பணத்தைக் குறிவைத்து மனிதனை அறுவடை செய்து வித்தை காட்டும் அவலம் இங்கே மலிந்துவிட்டது.

Thursday, February 16, 2012

பஞ்சுக்குள் நுழைந்த பல்லக்கு

கல்லூரி வாசல் தோரணம் கட்டிய நாட்கள் அது. ஓவியம் என்னோடு கலந்த கலை என்பதால் போட்ட மனுவுக்கு உடனே வெற்றி கிடைத்தது. அந்தப் பாட வகுப்புக்குச் சென்றபோது நான் எதிர்ப்பார்த்ததைப் போல் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு முற்றும் மனனமாகிப் போனவனுக்கு அ என்ற முதல் எழுத்தை மட்டுமே மனதில் ஒட்ட வைக்க முயற்சித்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அப்படி இருந்தது எனக்கு. ஒருநாள் ஓவியத்தில் வண்ணமிடும் கலையை விரிவுரையாளர் ஆரம்பித்தபோது அவரைப் பின்பற்றி மற்ற மாணவர்கள் வண்ணமிட நான் மட்டும் அவருக்காகக் காத்திராமல் விரைவாக செய்து முடிக்க வந்ததே கோபம் அவருக்கு. உனக்கு அதிகம் தெரியும் என்ற நினைப்பா என்று என்னிடம் கோபித்துக் கொண்டார். பதிலேதும் சொல்லாமல் நான் மௌனமாய் இருந்தேன். பிறகு வேறு ஒரு தலைப்பில் ஓவியம் தீட்டி மறு வாரம் கொண்டு வரச்சொன்னார். யோசித்தேன். இவரை அடியோடு சாய்க்க வேண்டுமானால் என் முழு திறமையும் காட்ட வேண்டுமென முடிவெடுத்தேன். அருவி ஒன்றில் இரண்டு பாரைகளுக்கு நடுவே அன்னம் ஒன்று பறந்து வந்து நீரின் மேல் அமர முயற்சிப்பதைப் போலவும் பாரைகளின் இடுக்கில் சூரிய ஒளி ஊடுருவி வந்து அந்த அன்னத்தின் மேல் பட்டு அருவி நீரிலும் படுவது போலவும் காட்சி அமைத்தேன். அதுமட்டுமின்றி அருவியிலிருந்து ஓடிவரும் நீரின் வேகத்தைக் காட்ட பாரைகளின் மீது பட்டுத் தெறித்து விழும் நீர்த் துளிகளின் காட்சியை மிக அருகிலும் காட்டியிருந்தேன். மறு வாரம் வகுப்பிற்குள் நுழைந்ததும் அனைத்து மாணவர்களும் தாங்கள் வரைந்து வந்த ஓவியங்களைப் பிரித்து மேசை மேல் வைத்தனர். நானும் என் ஓவியத்தைப் பிரிக்காமல் மேசை மேல் வைத்தேன். விரிவுரையாளர் என் மேசையருகே வந்தார். என் ஓவியத்தை அவரே பிரித்தார். ஏதும் பேசாமல் ஓவியத்தை அவர் மேசை மேல் கொண்டு வைத்தார். மாணவர்களை அருகில் வந்து அமரச் சொன்னார். என் ஓவியத்தை எடுத்து அனைவரும் பார்க்கும்படி உயரத்தில் ஒட்டினார். ஓவியக் கலைக்கே உரித்தான பல கூறுகள் என் ஓவியத்துள் ஒளிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதை எங்கே கற்றாய் என்று என்னிடம் கேட்டார். எங்கும் கற்கவில்லை என்றேன். சில நிமிடங்கள் இமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு தன் இரு கைகளையும் தட்டி தனது சந்தோசத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு நில்லாமல் அனைவரையும் கை தட்டச் சொன்னார். இப்படி ஒரு பாக்கியம் கிடைக்க வரம் வாங்கி வர வேண்டும் என்றார். அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் என்னைப் பல்லக்கில் ஏற்றின. பிறகு அந்த ஓவியம் கல்லூரியில் காட்சித் தேர்வாக தேர்வு பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

Sunday, February 5, 2012

சுயமே நலமில்லை

ஏன் இந்த சுயநலம். எதற்கு இந்த சுயநலம். எங்கிருந்து வந்ததிந்த சுயநலம் எப்படிப்போனால் எனக்கென்ன என்ற போக்கு. எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று கீதையில் கண்ணன் உபதேசிக்கவில்லையா. உபதேசத்தைக் கேட்கவில்லையா. பூமியின் நாட்கள் வளர வளர சுயநலம் என்ற விதை செடியாய் மரமாய் விருட்சமாய் வளர்ந்து எங்கும் படர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது...வலிக்கிறது. எல்லாம் எனக்கு மட்டும்... எல்லாம் நான் மட்டும்...என்ற எண்ணம் மட்டும் உதித்ததாலோ என்னவோ தன்னைத் தவிர தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரிவதில்லை. இவர்களுக்குத் தெரியுமா தான் வாழும் பொழுதின் மறு கனம் கூட சொந்தமில்லை என்பது. தான் என்ற ஆடையைக் கலைந்துவிட்டு தன்னை விடுத்து தனித்து நின்று புறக்கண்ணை மூடி அகக்கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டுமே இங்கிருக்கும் எதுவுமே தனதில்லை என்பது புரியும். ஆனால் எத்தனைப் பேருக்கு இந்த உண்மையை உணரும் அறிவு திறக்கப்பட்டுள்ளது ஒருசிலரைத் தவிர. நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும் கண்காணிக்கப் பட்டு வருவதும் எல்லாற்றுக்குமே வரவு செலவு இலாப நட்டம் அனைத்துமே பதிவு செய்யப்பட்டு வருவதும் உணராமல் இருக்கும் வரை இந்த மானிடப் பிறவிப் பயன் அறியாமல்தான் போகும். பதிவு செய்வது யார். இயற்கை என்ற மாபெரும் சக்தி. எந்நேரமும் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் இந்த சக்தியல்லவா இறை. சுயநலத்தை விடுத்து பிறர் நலத்தை கொஞ்சம் திருப்பிப் பார்த்தாலே மானுடம் விழித்துக்கொள்ளும்.

Monday, January 2, 2012

ஓர் அந்நியம்

மனதுக்குள் ஒரு சுமை. நேரம் ஆக ஆக சுமையின் பாரம் அதிகரித்துக்கொண்டே போனது. என்னைச் சுற்றியிருந்த சுற்றமெல்லாம் தங்களின் அன்பையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கும்போது என்னால் மட்டும் அந்த சூழலுக்குள் நுழையமுடியவில்லை. என் மனம் எங்கோ தள்ளிநின்றது. எல்லோரும் உள்ளே அமர்ந்திருக்க நான் மட்டும் வெளியில் அமர்ந்து வானத்தை அன்னாந்து நோக்கிக்கொண்டிருந்தேன். வானத்தின் கரிய நிறம் மேகத்தையோ நட்சத்திரத்தையோகூட காட்டவில்லை. மழைத்தூரலை மட்டுமே விளக்கொளி இருளின் இடையில் ஆங்காங்கே ஊடுருவிக் காட்டியது. மனதில் இருந்த சுமையையும் தாண்டி அந்த மழைத்தூரலையும் கொஞ்சம் ரசித்தேன். ஆனால் சுமை குறையவில்லை. எதிர்பார்ப்பின் உறவு தூரத்தில் இருக்கும் போது துயரத்தின் சுவடு முகம் காட்டவில்லையானாலும் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து மூன்று மீட்ட்ர் தூரத்தில் என் கவனம் திரும்பியது. குத்தாங்காலிட்டு இரு கைகளாலும் கால்களைக் கட்டிக்கொண்டு வானத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த அந்தப் பெண். அவள் அந்த வீட்டின் பணிப்பெண். அந்த இருட்டிலும் லேசான விளக்கொளியில் அவளுடைய முகம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அந்த முகத்தில் அப்பிக்கொண்டிருந்த சோகத்தை யாராலும் வழித்தெரிய முடியாத அளவுக்கு  தன்னிலை மறந்து அமர்ந்திருந்த அவளுக்குள் என் சிந்தனை கூடு பாய்ந்தது. தன்னைச் சார்ந்துள்ள உறவுகளைக் கரை சேர்க்க தன் சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் அடகு வைத்து ஏக்கத்தின் மடியில் அமர்ந்திருக்கும் அவளைவிடவா.....நாடு நகரம் மதம் மொழி சொந்தபந்தம் அத்தனையும் தொலைதூர கனவுகளாக கசிந்துகொண்டிருக்கும் அவளது பரிதவிப்பின் விளிம்பில் எனது சோகம் சரியத் தொடங்கியது. தேசம் விட்டு தேசம் வந்து வீட்டு வேலை என்ற பெயரில் கையேந்தி நிற்கும் அந்தப் பெண்ணைக் காட்டியவாறு நிலாச்சோறு ஊட்டி என் சோகத்தையும் ஏக்கத்தையும் மறந்து போகச் செய்தது நிலவைக் காணாத அந்த இரவு.