Tuesday, May 10, 2011

வரம் வாங்கி வந்த நாட்கள்

பாபா....பாபா....ஏன் இவ்வளவு சீக்கிரம் உங்களை மறைத்துக் கொண்டீர்கள். இந்த அவதாரத்தில் உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எழுதப்படவில்லையா. வருவேன் என்று சொல்லி வைத்தேனே. மறந்துவிடவில்லை என்பது எனக்குத் தெரியும். மறைந்து நின்று உங்களின் மறுபதிப்பை பதியம்போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்களுக்கேது மரணம் பாபா. மரணத்தை மரிக்க வைத்த நீங்கள் இங்குப் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. நீங்கள் இப்புவிக்கு வந்துபோன நாட்கள் அல்லவா வரம் வாங்கி ஜனித்துள்ளன. என் மனம் மலிந்து உடல் உரிந்து உயிர் உறைந்த பொழுதுகளில் உங்கள் திருவுருவம் காட்டி என்னைத் தூக்கி நிறுத்திய நாட்களை எப்படிச் சொல்வேன். உங்களது செந்நிற கமலப் பாதங்களை என் கண்முன் பதித்துச் சென்ற தருணம் என் விழிகளுக்குள் படர்ந்திருந்த சோகப்படலம் உங்கள் காலடியில் கரைந்து போனதை யாரிடம் சொல்வேன். அந்த விடியற்காலைப் பொழுதில் உங்கள் விஜயம் என் அறை முழுக்க வீசிய பூ வாசம் என்ன புண்ணியம் செய்தேன் நான். உங்கள் கால் தடத்தில் மலர்ந்த அழகிய மலர்களின் ஒளி என் அறையை மூழ்கடித்ததை எப்படிச் சொல்வேன். அன்று காலை நான் கண்விழிக்கும் போது உங்கள் இரு கரங்களையும் உயர்த்தி என்னை ஆசிர்வதித்ததும் விடிந்ததும் என் பக்கத்து அறையில் இருந்தவர்கள் விடியற்காலை நான்கு மணிக்கு என்ன அப்படியொரு வாசம் என்று பேசிக்கொண்டபோதும்தான் நான் கண்டது கனவல்ல நனவென்று உணர்ந்தேன். அன்று மாலை என்னோடு தங்கியிருந்தவர் உங்கள் நிழல்படத்தை வாங்கிவந்து வரவேற்பறையில் மாட்டிவைத்தபோது மெய்யாகவே மெய் சிலிர்த்துப் போனேன். காரணம் நான் கண்விழிக்கும்போது ஆசிர்வதித்த அதே திருவுருவத்தை அங்கு நிழற்படமாகப் பார்த்தேன். நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆனால் அன்று நடந்த எல்லாமே யாரோ சொல்ல யாரோ நடத்திக்கொண்டிருப்பதைப் போன்றே இருந்தது. அநாதையாய் நான் உணர்ந்த உணர்வுகளை உடைத்து என் தலை சாய்க்க உங்கள் மடி காத்திருப்பதைப் புன்னகையோடு எனக்குப் புரியவைத்தீர்கள். ஒருவேளை நான் உங்களை சந்திக்கும் நாட்கள் தாமதமாகிவிட்டது என்பதனால்தான் நீங்களே வந்து என் தலை கோதிச் சென்றீர்களா பாபா. என்னே உங்கள் கருணை. யாரிடம் போய் சொல்வேன் இந்த அரிய அனுபவத்தை. வார்த்தைகளின் வரம்புக்குள் வர முடியாத வாழ்வல்லவா அது. எப்படி காற்றும் மழையும் மலரும் ஒளியும் சொல்லும் மொழி வடிவமற்றுள்ளதோ அப்படியல்லவா வலிமையாய் மௌனித்துள்ளது. உங்களுடைய ஓய்வு நேரத்தை முடித்துக்கொண்டு விரைந்து எழுந்து வரும் பொழுதுகளுக்காகத் திருவோடு ஏந்திக் கொண்டு நிற்கிறது காலம். மீண்டும் ஒரு புதிய பரிணாமத்துக்குள் புகுந்து வரப்போகும் உங்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது  அரியாசனம்.