Friday, November 4, 2011

செல்லமடா நீ எனக்கு


என்  உதிரத்தை  உணவாக்கிக்கொண்டு உடலை உரமாக்கிக்கொண்டு என் சுவாசத்தை நீ சுவாசித்து எனக்குள் பூத்த என் முதல் பூ நீ.  எனக்குள் நீ பூத்தபோது உன்னைத் தவிர வேறு எண்ணங்கள் எல்லாம் அருந்து போனது எனக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை உன் நினைவே என் உயிர் அணுக்களாக உயிர் வளியை அள்ளிக் கொண்டு என் உடல் முழுக்க ஓடியது. உன்னை முதன் முதலாய் என் கைகளில் ஏந்திய போது உலகில் உள்ள சந்தோஷத்தை எல்லாம் உருட்டி என் கண்களின் வழி ஆனந்தக் கண்ணீராய் ஓட விட்டவன் நீ. எனக்குள் ஆழமாய் தியானித்துக்கிடந்த நீ என்னைப் பிளந்துகொண்டு வெளியில் வந்தபோது என்னைப் பார்க்காமல் உன்னைப் பார்த்தன என் கண்கள். என் உடலில் உயிர் இருக்கிறதா என்று உணர்வதற்கு முன் உன் உடலில் உயிர் உள்ளதா என்று ஆராய்ந்தன என் விழிகள். அன்று எனக்கு ஏற்பட்ட பூகம்பம் என்னை சிதைக்காமல் உன்னை முத்தெடுத்துக் கொடுத்தது. உன் பிஞ்சு உடலைத் தொட்டுத்தடவியபோது நீயே இயற்கை எனக்குக் கொடுத்த உச்சக்கட்ட படைப்பாக எண்ணி உச்சி குளிர்ந்து போனேன். அன்புக்கு மட்டுமல்ல பண்புக்கும் நீயே உதாரணம். அழகுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் உன்னை அடையாளம் காட்டலாம். தூக்கத்தைத் துண்டித்து இரவுகூட உனக்கு விளக்கேந்தி நின்றதைப்  பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். வெறித்தனமான உன் முயற்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். யாராவது முயற்சியின் முகவரியைக் கேட்டால் என் சுட்டு விரல் சட்டென்று நிமிர்ந்து உன்னைத்தான் பார்க்கும் உன் வெற்றியின் வளர்பிறையில்  நானும் உன்னோடு கைகோர்த்து வளர்ந்து வந்தேன். என் பலவீனங்களைப் பகையாக்கி பலத்தை உறவாக்கி உருமாற்றியவன்  நீ. என் சந்தோஷ சாம்ராஜ்யத்தின் தேர் நீ. உன் வயது வளர்ந்தாலும் இன்னும் பால் மணம் மாறாத பசும்பொன் நீ. இன்று மட்டுமல்ல என்றுமே செல்லமடா நீ எனக்கு.

Thursday, August 11, 2011

சிவராத்திரியானது

என்னை நடுங்க வைத்த இரவு அது. பக்கத்தில் யாருமில்லை. ஊசிவிழுந்தால் கூட கேட்கும் என யாரோ சொன்னது அன்று நிரூபனமானது. வாங்கி வந்த ரொட்டி என் பசியைத் தீர்த்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அடிக்கடி என் கண்கள் கடிகார முள்ளைப் பார்த்தது. கடிகார முள் நகர மறுத்து என்னை எரிச்சலூட்டியது. நேரம் நத்தையாய் நகர்ந்தது. தனிமை தூக்கத்தைத் துண்டித்தது. வெளியில் மழை தூரல் போட்டுக்கொண்டிருந்தது. மணி ஒன்பதைக் காட்டியது. படுக்கையில் சாய்ந்தவாறு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினேன். தினம் இரவில் தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது வழக்கம். ஆரம்பத்தில் தூங்குவதற்கு முன் படித்தால் தூக்கம் ஆழ்ந்து வருவதாய் உணர்ந்தேன். நாளடைவில் அதுவே பழக்கமாகிப்போனது. கண்கள் சொருக ஆரம்பித்ததும் சுற்றி இருந்த விளக்குகளை அப்படியே எரியவிட்டு அறை விளக்கை மட்டும் அணைத்துட்டு உறங்கிப் போனேன். திடீரென என்னை எழுப்பிவிட்ட இடியோசை கொஞ்சம் நடுங்க வைத்தது. அதைத் தொடர்ந்துவந்த அடர்த்தியான மழை மின்னலோடு அடிக்கடி வந்த இடியோசை கொஞ்சமல்ல அதிகமாகவே என்னைப் பயமுறுத்தியது . எழுந்து கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக மணி பன்னிரண்டு. மறுவினாடியில் இடித்த இடியில் எங்கும் ஒரே இருட்டு. மின்சாரம் தடையானது. எங்கு என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இரத்தமே உரைந்து விடுவதைப்போல் இருந்தது எனக்கு. தட்டுத் தடுமாறி மெழுகுவத்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படுத்தேன். மழை சத்தம் தலைவலியை உண்டுபண்ணியது. ஒரே புழுக்கம். அந்த மழை நேரத்திலும்கூட என் கழுத்திலிருந்து வழிந்த வியர்வை தலையணையை ந்னைத்துக்கொண்டிருந்தது. காரணம் புழுக்கமா பயமா என்று தெரியவில்லை. அந்த நடுக்கம் தூக்கத்தைத் தூர விரட்டி விட்டது. நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் குடியிருந்த மலாய்க்காரர் நடுநிசியானதும் பேய் ஓட்டுவது அவரது வழக்கம். அன்று இரவும் அந்த பயங்கரம் நடந்தது. மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு ஒரு பெண் அலறும் சத்தம் என் செவிப்பரைகளைக் கிழித்தது. அந்த சத்தம் என் பயத்தை மேலும் கூட்டியது. சாமி மேடையில் வைத்திருந்த ருத்திராட்ச மாலையை எடுத்து என் கழுத்தில் அணிந்து கொண்டு கொஞ்சம் பஞ்செடுத்து இரண்டு காதுக்குள்ளும் திணித்துக்கொண்டு கண்களை இருக மூடிக்கொண்டேன். அந்த இரவு முழுவதும் மழையும் நிற்கவில்லை. மின்சாரமும் வரவில்லை. உறக்கமும் வரவில்லை. அன்று இரவு சிவராத்திரியானது எனக்கு. மறுநாள் காலையில் காதில் இருந்த பஞ்சை தூக்கி வீசியபோது சிரிப்பு வந்தது. நடுக்கம் போனது.

Tuesday, August 2, 2011

இரகசியமாய்..

மனதோடு விளையாடி மறைமுகமாய் எனைத் தேடி மயிலுருவில் வந்த பேரழகே. உருக்கொண்டு சிறகெடுத்து வருடிவிட்டு சென்றாலும் நீ சென்ற திசை பார்த்து இமைக்காமல் விழியசைய மறுக்குதையா இங்கு. மௌனமாய் நான் அமர்ந்து மனம் அடங்கி உடல் மறுத்த வேளையெல்லாம் உள்ளூர நீ வந்து இறகாலெ எனை வருடி சென்றுள்ளாய் என்பதை உனை பார்த்த பின்புதான் புரிந்துகொண்டேன். நீலத்தில் பசுமையும் பசுமைக்குள் நீலமும் எனை வந்து ஆட்கொண்ட போதெல்லாம் பல கேள்வி நான் கேட்டும் விடையேதும் காணாமல் முனகலோடு நின்றது என் மூச்சு. முடிவென்பதிங்கில்லை முடிச்சுக்கள் பல உண்டு நீயாக முடிச்சவிழ்த்துப் பார் என பக்கத்தில் வந்தாயா. படியளக்க வந்தவனே...நான் அளந்த படியை நீ உண்டு செல்லவா எனைத் தேடி வந்தாய். இரை தேடி வந்தாயா இறையாகி வந்தாயா. நீ வந்ததும் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்துவிட்டதென ஊரெல்லாம் சொன்னபோது ஆகாயமே எனைத்தேடி வந்ததாய் உடல் கூச நின்றேன். உனைப்பிடித்து கூட்டுக்குள் அடைத்துவிட துடிக்கின்றது மனிதம். கூட்டுக்குள் அடைபடவா சிறகு வாங்கி வந்தாய். அதுதான் மனிதனின் சித்தம் என்றால் அதற்கும் அல்லவா வழிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். உனை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் நீ வைக்கின்ற புள்ளியில் கோலமிடும் இரகசியம். மீண்டும் ஒரு முறை சிறகெடுத்து வா அழகே உன் இறகுக்குள் இளைப்பாற நான் வர வேண்டும்.

Monday, July 11, 2011

யாதுமாகி நில்

பெண் அடங்கிப்போவாள் அன்புக்கு. அடக்கியாள நினைப்பவரை அடக்கி முடக்கிவிடுவாள். தனக்கு அடங்கிவிட்டாள் என்று நினைக்கும் ஆணுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பெண் மௌனமாய் இருந்தால் அடங்கிவிட்டதாக அர்த்தமில்லை. பெண்மையை சீண்டிப் பார்க்கும்போது எதிர்த்து போராட இயலாத பெண்ணிடம் மௌனம் மகரந்தச் சேர்க்கை செய்யும். பொய்மையை முலாம் பூசிக்கொண்டு நிற்கும். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போய்விட்டதாகத்தானே அர்த்தப்பட்டுப் போகிறது. அந்த அர்த்தங்களின் விசுவரூபம் உதாசீனப்படுத்தப்படும்போது இன்னொரு சுனாமி வாசலுக்கு வந்து வாய்க்கால் வெட்டுகிறது என்பதை எத்தனை பேர் அறிவர். பெண்ணின் உணர்வறிந்து மொழியறிந்து மனமறிந்து வலியறிந்து எவனொருவன் தாங்கிப்பிடிக்கிறானோ அவன் யாதுமாகி நிற்கிறான். பெண்ணின் எதிர்பார்ப்புகளை உதாசீனப்படுத்துபவன் தண்டிக்கப்படுகிறான். எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும். உலகம் ஆயிரம் சொல்லும். அது வெறும் கணிப்புதான். உண்மை என்னவென்பது அறிந்தவனுக்கே தெரியும். கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம். கண்களை மூடி தன்னை உணர்ந்தால், தான் செய்வது சரியா தவறா என்பது புரியாதா. புரிந்துகொண்டால்தானே மனித ஜென்மம். இதுக்கெதற்கு அக்னி பிரவேசம். ரசிப்பதும் ரசிக்கப்படுவதும் எந்த அளவுக்கு சுகமோ அதைப்போல் உதாசீனப்படுத்துவதும் உதாசீனப்படுத்தப்படுவதும் பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வணங்காமுடியாய் வாழ்ந்து வாழ்வை இழப்பதைவிட வளைந்துகொடுத்து வாழ்ந்து வாழ்வை வளைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணசைவுக்கு எல்லாமே காத்திருக்கும்.

Tuesday, July 5, 2011

விதியா..சதியா..

நீ விட்டுச் சென்றதும் உனை விட்டுச் சென்றதும்  அறிவாயா.  கல்லாகிப் போனதா நெஞ்சம். உன் கூட்டை நீயே கலைத்துப் போடவா வாழ்வை வரம் வாங்கி வந்தாய். கட்டிலை வீசினாய் கட்டியவன் காணாமல் போனான் தொட்டிலை  வீசினாய் தொலைந்து போனதே நீ தூக்கி சுமந்த சுகங்கலெல்லாம். அது நீ தேடிக்கொண்ட வினையா. அல்லது தேடிப்போன வினையா. உன் சுமையை யார் முதுகில் ஏற்றிவிட்டு யார் சுமையை நீ சுமக்க ஓடோடிப்போனாய்.  உன் சுவாசக்காற்றை சுகிக்க முடியாமல் தன் சுவாசக் காற்றை நிறுத்திக் கொண்டதே நீ பெற்றெடுத்த ஒரு திங்களைக்கூட முழுமையாய்க் காணாத பச்சிளங் குழந்தை. எந்த கங்கையில் இந்தப் பாவத்தைக் கழுவப் போகிறாய். கழுவினால் கழன்று போகுமா நீ சேர்த்து வைத்த பாவச் சுமை. வருடங்கள் ஓடிப்போனாலும் உன்னைப் பற்றிய உண்மைகளை உரசிப் பார்த்து தரம் பிரித்துக் காட்டி தரிசு நிலமாய் நீ கிடப்பதை ஏளனமாய் சொல்லிச் சிரிக்கிறார்களே உன் பெண் பிள்ளைகள். அந்த சிரிப்புக்குள் மின்மினிகளாய் மின்னிக்கொண்டிருக்கும் துக்கங்களும் சோகங்களும் பின்னிக்கொண்டு தோரணங்கட்டி ஆடுவதை அறிவாயா நீ. அவர்களின் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் வெருப்புத்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அன்று வாழ வைக்க வேண்டிய பெண்களின் வாழ்க்கையை வழிமறித்து பரிதவிக்க விட்டது எதற்காக. ஞாயத்தராசில் உன்னைத் தூக்கி வைத்து கேள்வி கேட்கிறார்களே இன்று என்ன பதில் சொல்லப் போகிறாய். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் உன் விஷயத்தில் பெற்ற மனமே கல்லாகிப் போனது. விதி வழி ஓடினாய். விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டதை அறிவாயா. தாய்மடிக்காக தவமிருந்த தங்கங்களைத் தாரைவார்த்து விட்டு எவன் வீட்டு கிளியையோ வளர்க்க உன் வாழ்க்கை முழுவதையும் கூட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்டாயே உனக்கு சிலை வைப்பான் என்று மனப்பால் குடித்தாயா. பார்த்தாயா நீ ஊற்றிய பாலைக் குடித்துவிட்டு இன்று உன்னைப் பாடைக்குள் வைத்து பழிதீர்க்க கருநாகமாய்க் காத்திருப்பதை. கட்டாந்தரையில் படுத்துறங்கி கட்டுக்கட்டாய் சேர்த்து வைத்தப் பணமே உன்னைக் குறிபார்த்து கத்தி முனையில் நிறுத்தியுள்ளது. இப்போதுகூட உன் சொத்துக்குள் குளிர்காய வரவில்லை நீ பெற்ற செல்வங்கள். அழகான ஆயுட்காலத்தை அலங்கோலப்படுத்தினாலும் நீ அநாதையாய் நிற்கும் அவலத்தைத் துடைத்தெரிய உன் முன் கைநீட்டி நிற்கிறார்களே. இன்னுமா உனக்குப் புரியவில்லை. அல்லது புரியாததுபோல் பாசாங்கு செய்கிறாயா. உன்னையே முலாம் பூசிக்கொண்டு மறைந்திருப்பது ஏன். தராசில் ஏறி நின்றால் நீ நிற்கும் தட்டு கீழே இறங்கிவிடும் என்ற பயமா. தோற்றுவிடுவோம் என்ற அச்சமா. நீதான் எப்போதோ தோல்விக்கு துணைபோய்விட்டாயே. தோல்வியே நீயாகிப்போன பிறகு உனக்கெதற்கு முகமூடி.

Wednesday, May 25, 2011

பிரியாவிடை

வணக்கம். இந்தக் கீற்று உங்களுக்கு சமர்ப்பணம். உடைந்துபோன சில்லுக்களாய் சிதைந்துபோகும் முன் தாங்கிப் பிடித்து தடவிக்கொடுத்தது உங்கள் வார்த்தைகள். ஓடி ஓடி ஓய்ந்துபோய் சோர்ந்து வந்த நேரம் இதழ் பிரித்து வெளி வந்த தேன்துளியாய் என் உச்சி முகர்ந்து கைகுலுக்கியது உங்கள் சொற்கள். கரம் குவித்து கவி பாடி என்னை நெகிழச் செய்தன உங்கள் வாழ்த்துகள். எத்தனை ஆழமாய் என்னைப் படித்துள்ளீர்கள், இரசித்துள்ளீ ர்கள், மதித்துள்ளீர்கள் என்பதனை அறிந்தபோது ஆச்சரியம் என்னை ஆட்கொண்டது. அறிமுகப் படுத்திய நாட்களை அழகாக அச்சுக்கோர்த்து நாட்குறிப்பேட்டில் சேர்த்து வைத்ததை எனக்குப் படம் பிடித்துக் காட்டினீர்கள். நட்பின் ஆழத்தை அளந்து காட்ட முயற்சித்து அளவுகோல் போதாமல் திக்குமுக்காட வைத்தீர்கள். தூய நட்பு என்றுமே தூர்ந்துபோகாது என்று துவைத்துப்போட்ட துயரங்களைத் தூக்கி எறியச் சொன்னது உங்களன்பு. உலர்ந்து போனது உடலா உள்ளமா என்று அறியும் முன் என் சோர்வுகளைத் துறவு கொள்ளச் செய்தது உங்கள் உல்லாச வரவேற்பு. குலு குலு அறையின் கதவைத் திறந்ததும் என்னை வரவேற்ற என் பெயர் உங்கள் அன்பின் முகவரியைச் சொல்லாமல் சொல்லிப் போனது. எனக்கே தெரியாமல் சேர்த்து வைத்த என் வரிகளுக்கு வடிவம் கொடுத்த போது என் விழியோரம் துளிர்த்த நீர்த்துளியை இமைகள் மறைத்தன. அன்று வந்திருந்த குழந்தைகள்கூட என்னுரை கேட்டு கண்ணீர் சொரிந்த போது என் பதிவுகளின் சுவடுகள் அவர்களின் மனதிலும் பட்டா போட்டிருப்பதைக் கண்டு மனம் கலங்கினேன். நான் நலம் வாழ வாழ்த்தியதும்  என் வருகைக்காக வாசல் திறந்து வைத்து காத்திருப்பதும் காணும்போது மனசு மகிழம்பூவாய் மணக்கிறது. நான் வந்ததும் போனதும் வெறும் கானல் நீராய் இல்லாமல் கல் வெட்டாய் பதிந்துள்ளது என்பதனை அறியும் போது உள்ளம் மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்து போகிறது. இறைவனின் கட்டளை என்னவென்று புரியும்வரை காவலாய் நிற்கிறது காலம் இங்கே.

Tuesday, May 10, 2011

வரம் வாங்கி வந்த நாட்கள்

பாபா....பாபா....ஏன் இவ்வளவு சீக்கிரம் உங்களை மறைத்துக் கொண்டீர்கள். இந்த அவதாரத்தில் உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எழுதப்படவில்லையா. வருவேன் என்று சொல்லி வைத்தேனே. மறந்துவிடவில்லை என்பது எனக்குத் தெரியும். மறைந்து நின்று உங்களின் மறுபதிப்பை பதியம்போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்களுக்கேது மரணம் பாபா. மரணத்தை மரிக்க வைத்த நீங்கள் இங்குப் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. நீங்கள் இப்புவிக்கு வந்துபோன நாட்கள் அல்லவா வரம் வாங்கி ஜனித்துள்ளன. என் மனம் மலிந்து உடல் உரிந்து உயிர் உறைந்த பொழுதுகளில் உங்கள் திருவுருவம் காட்டி என்னைத் தூக்கி நிறுத்திய நாட்களை எப்படிச் சொல்வேன். உங்களது செந்நிற கமலப் பாதங்களை என் கண்முன் பதித்துச் சென்ற தருணம் என் விழிகளுக்குள் படர்ந்திருந்த சோகப்படலம் உங்கள் காலடியில் கரைந்து போனதை யாரிடம் சொல்வேன். அந்த விடியற்காலைப் பொழுதில் உங்கள் விஜயம் என் அறை முழுக்க வீசிய பூ வாசம் என்ன புண்ணியம் செய்தேன் நான். உங்கள் கால் தடத்தில் மலர்ந்த அழகிய மலர்களின் ஒளி என் அறையை மூழ்கடித்ததை எப்படிச் சொல்வேன். அன்று காலை நான் கண்விழிக்கும் போது உங்கள் இரு கரங்களையும் உயர்த்தி என்னை ஆசிர்வதித்ததும் விடிந்ததும் என் பக்கத்து அறையில் இருந்தவர்கள் விடியற்காலை நான்கு மணிக்கு என்ன அப்படியொரு வாசம் என்று பேசிக்கொண்டபோதும்தான் நான் கண்டது கனவல்ல நனவென்று உணர்ந்தேன். அன்று மாலை என்னோடு தங்கியிருந்தவர் உங்கள் நிழல்படத்தை வாங்கிவந்து வரவேற்பறையில் மாட்டிவைத்தபோது மெய்யாகவே மெய் சிலிர்த்துப் போனேன். காரணம் நான் கண்விழிக்கும்போது ஆசிர்வதித்த அதே திருவுருவத்தை அங்கு நிழற்படமாகப் பார்த்தேன். நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆனால் அன்று நடந்த எல்லாமே யாரோ சொல்ல யாரோ நடத்திக்கொண்டிருப்பதைப் போன்றே இருந்தது. அநாதையாய் நான் உணர்ந்த உணர்வுகளை உடைத்து என் தலை சாய்க்க உங்கள் மடி காத்திருப்பதைப் புன்னகையோடு எனக்குப் புரியவைத்தீர்கள். ஒருவேளை நான் உங்களை சந்திக்கும் நாட்கள் தாமதமாகிவிட்டது என்பதனால்தான் நீங்களே வந்து என் தலை கோதிச் சென்றீர்களா பாபா. என்னே உங்கள் கருணை. யாரிடம் போய் சொல்வேன் இந்த அரிய அனுபவத்தை. வார்த்தைகளின் வரம்புக்குள் வர முடியாத வாழ்வல்லவா அது. எப்படி காற்றும் மழையும் மலரும் ஒளியும் சொல்லும் மொழி வடிவமற்றுள்ளதோ அப்படியல்லவா வலிமையாய் மௌனித்துள்ளது. உங்களுடைய ஓய்வு நேரத்தை முடித்துக்கொண்டு விரைந்து எழுந்து வரும் பொழுதுகளுக்காகத் திருவோடு ஏந்திக் கொண்டு நிற்கிறது காலம். மீண்டும் ஒரு புதிய பரிணாமத்துக்குள் புகுந்து வரப்போகும் உங்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது  அரியாசனம்.

Monday, May 2, 2011

வானம் வளையும்

சக்கர நாற்காலியில் நீ வளம் வர சுமையே சுகமாய் மொத்த குடும்பமும் உன்னைச் சுற்றி சேவகம் செய்ய காலம்  காத்துக்கிடக்கிறதா இல்லை காலனைக் காக்க வைத்துவிட்டாயா. முதல் முறை என் விழிகளைச் சந்திக்கத் திராணியில்லாமல் உன் விழிகள் தலை சாய்த்துக் கொண்டதும் ஏதோ ஒரு கோபம் உன்மேல் எனக்கு வந்து போனது உண்மைதான். ஆனால் உன் வேகமும் விவேகமும் என்னை சற்று உரசிப் பார்த்தப்போது என் கோபம் தானாகக் கழன்று போனது. உன் தாயும் தந்தையும் நாள்முழுக்க உனக்காகக் கைகட்டி இங்கே காத்துக் கிடக்க எந்த சலனமும் இல்லாமல் நீ உன் நண்பர்களோடு சகஜமாய் சந்தோசமாய் காலத்தைச் சாய்த்துப் பிடித்துக் கண்ணடிக்கிறாயே அது எப்படி.  இரண்டு மாதக் குழந்தையைத் தோள் மீதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் உன்னை மார்போடும் சாய்த்துக்கொண்டு இங்கே தவமாய் தவம் கிடக்கும் தாய்மையை என்னவென்று சொல்வது, காலம் உன்னைக் கட்டிப் போட்டாலும் அங்கேயே சுருண்டு கிடக்காமல் கட்டவிழ்த்து வீசி விட்டு எழுந்து அமர்ந்து ஆர்ப்பரிக்கும் நீ எழுந்து நிற்க உன் சக்தி முழுதும் திரட்டு.  சாதித்தவர்களின் பட்டியலைத் தேடு.  வல்லமை தர வேணடி வானுலாவ நடந்துபோ. வானம் உனக்காக வளைந்து வரும்.

Sunday, April 17, 2011

தேங்கி நிற்கிறேன்

ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் கதை சொல்லும். உன் விசும்பல் என் செவிகளுக்குள்  ரீங்காரமிட்டு  உள்ளத்து உணர்வுகளை  மகரந்தமாய் என்னிடம் சேர்க்கின்றது. அழாதே! அழுது என்னை உடைத்துவிடாதே! இதை  கேட்டுப் பெறவில்லை நான். இது சூழ்ச்சியா சூட்சுமமா தெரியாது. காலம் எனக்குக் கம்பலம் விரிக்கின்றது. போகாமல் இருக்க வேண்டும் என பூவேலி போடுகின்றது உன் விழிகள். போய்விடாதே என மனம் மண்டியிட்டு மன்றாடுகிறது. முடிந்தவரை முயன்றேன் முடியாமல் தேய்கிறேன். எல்லா உறவுகளுக்குள்ளும் ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் எந்த  எதிர்பார்ப்புகளுக்குள்ளும் சிறைபடாது சிறகு விரிப்பது தூய நட்பு மட்டும்தான். தூய நட்பின் கதகதப்பில் குளிர்காய்ந்த அன்பு என்றும் மாறாது மறையாது. எனக்காக நீயோ உனக்காக நானோ எதுவும் செய்யவில்லை எதையும் கேட்கவில்லை இருப்பினும் ஏதோ ஓர் இழப்பு இழையோடுகிறது. பிரிவொன்று சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு  வந்து என் கரம் பற்றி நிற்பதைப் பார்த்ததும் உன் விழியோரம் தேங்கி நிற்கும் சோகத்துக்கு விலையும் உண்டா சொல் கண்ணே. நடந்து முடிந்த நாட்களும் கடந்து சென்ற காட்சிகளும் கண்ணுக்குள் கவி பாடுகிறது. சந்தோஷ நாட்குறிப்பில் நம் முகவரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் போல் துன்பம் தூண்டில்போடும் இந்த நேரத்தில் உடன் இருந்து உதவவிடாமல் என்னை விலக்கி வைத்து வேடிக்கை காட்டுகிறது கால தேவதை. என்ன செய்வேன் நான்.  அலுங்காமல் குலுங்காமல் அட்சயப்பாத்திரத்தில் அள்ளி வைத்து அழகு பார்த்தாய் என்னை. உன்னை எங்கே வைப்பேன் நான். நீ ரசித்து ரசித்து தூதுவிட்ட ஒவ்வொரு வார்த்தையும் மருதாணி பூசிக்கொண்டு என் முன் வட்டமடிக்கிறது. உன்னைத் தேற்றவும் முடியாமல் தேம்பவும் முடியாமல் தேங்கி நிற்கிறேன்.

Saturday, April 9, 2011

அழகாய் பூக்குமே

அன்புக்கும் அமைதிக்கும் அர்த்தம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கையில் மருந்துக்குக்கூட இந்த அத்தியாயத்துக்குள் நுழைய மறுப்பதேன். தன்னைச் சுற்றி ஒரு வேளி போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொண்டால் யாரால் எழுப்பமுடியும். தூங்குபவர்களை  எழுப்பிவிடலாம். தூங்குவதைப்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் எரிச்சலை மூட்டினாலும் பல சமயங்களில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இவர்கள்கூட மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் அதுதான்  உண்மை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்கள் நகரும்போது  பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதபோதெல்லாம் இவர்களின் மனமும் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றதென்று யாருக்குப் புலப்படும். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது இவர்களின் மீது எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. தனக்குத் தேவையானதெல்லாம் இருந்தும்கூட பிறரின் பொருட்களை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதும் பிறரின் பொருட்களை தொலையச் செய்வதும் இவர்களை உள்ளூர ஆனந்தப்படுத்தும் ஓர் அற்பச் செயல். இப்படிச் செய்வதன் மூலம் பிறரைப் பழிவாங்கிவிட்டதாக இவர்களின் நினைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தொலைத்த பொருளைத் தேடி அலைந்து வேதனைப்படுவதைப் பார்த்துப் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்துவிடும் இவர்களின் மனது. ஆனால் பிறரின் பொருட்களை தொலைப்பதில் சுகம் காணும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தொலைந்துகொண்டிருப்பது இவர்களால் அறியப்படாத இரகசியம். இவர்கள் முழுமையாக தங்களைத் தொலைத்த பிறகுதான் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே உண்மை அறியப்படும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் இருக்கலாம். உங்கள் நண்பர்களாக இருக்கலாம். உங்கள் வீட்டில்கூட இருக்கலாம். இவர்களின் செய்கையைப் பார்த்து வெறுத்து ஒதுக்கி விடாமல் தயவுசெய்து இவர்களின் முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அழகாய் பூக்குமே.

Tuesday, April 5, 2011

கேளடி தோழி நீயொரு சேதி

அறிமுகம் இல்லாத ஊரில் அவஸ்த்தைப் படப்போகிறோமோ என்ற கவலையோடு வந்த என்னை அன்போடு அரவணைத்து தோழமைப் பாராட்டியது உன் நட்பு. குடும்பத்தை விட்டுப்பிரிந்து தொலைதூரம் வந்து துவண்டு கிடந்த என்னைத் துவட்டிவிட்டது உன் அழகான வார்த்தைகள். ஒரு நாள் இரவு உணவு அருந்த அமர்ந்தபோது என் கைப்பேசியில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அந்த விபத்து செய்தி என் கைகளில் எடுத்த உணவை வாய்க்குள் வைக்க விடாமல் செய்தது. முதலில் சாப்பிடுங்க பிறகு விசாரிப்போம் என்று ஆண்டி சொன்னதும் வாய்க்குள் வைத்த ஒரு கவளச் சோறு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கைகளைக் கழுவிக்கொண்டு நண்பரை விசாரித்தபோது பலத்த காயங்களுடன் உன்னை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. உனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டியது என் மனம். அன்று இரவு கலக்கத்தோடு இருந்த விழிகளில் உறக்கம் வரவில்லை. கண்களின் ஓரம் கண்ணீர்தான் வந்தது. எப்போது விடியும் எப்போது உன்னைப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். மறுநாள் மருத்துவமனையில் உன்னைப் பார்த்தபோது உடல் முழுக்க காயங்கள் இருந்தும்கூட உன் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் என்னை சோகத்தில் ஆழ்த்தாமல் உன்னை ரசிக்க வைத்தது. உன் காயங்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல் என் அண்ணன் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையாகவும் இப்படி நொருங்கிப்போய்விட்டாரே என்று  உன் காரைப்பற்றி கவலைப்படும்போதும் ஒரு உயிரற்ற பொருள்மீது நீ கொண்ட பாசத்தைக் கண்டு பிரமித்துள்ளேன். உன் வண்டி பயன்படுத்த முடியாமல் போனதும் நீ என்னோடு வந்து தங்கியதும் நம் நட்பு மேலும் கைகுலுக்கியது.  உன் உடல் நலம் பெற்றதும் புதிய வண்டி வாங்கிய பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ என்னைப் பேருந்து ஏற்றிவிட்டுவிட்டுப் போகும்போதெல்லாம் நன்றிப் பெருக்கோடு என் விழிகள் உன்னை வழியனுப்பும். நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் மாற்றலாகிக் கடிதம் வந்ததும் நாம் பிரியப்போகிறோம் என்ற கவலை என்னிடம் மட்டுமல்ல உன்னிடம்கூட சிறிதளவும் இல்லாமல் இருந்ததைக் கவனித்தாயா. அது ஏன் என்று உனக்குத் தெரியுமா. இருவருக்கும் ஒரே சமயத்தில் கடிதம் வந்ததால் பிரிவு வலியை ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்வோடு பிரிந்தோம். மீண்டும் நாம் சந்தித்துக்கொள்ளவே இல்லை. கைப்பேசியில் குரலும் குறுஞ்செய்தியும் மட்டுமே நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இதோ உனக்காக எழுதியுள்ளேன். இதையும் படி. இதயம் இலேசாகும்.

Saturday, April 2, 2011

கொட்டித் தீர்த்துவிடு தோழி

வணக்கம். நமக்குள் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். நம் தேசங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் உம்மையும் எம்மையும் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது கொட்டித்தீர்த்துவிடு தோழி. எரிமலையாய் குமுறிக் கொட்டித்தீர்க்கும் தோழிகளுக்குப்  பனிமலர்களைத் தூவி ஆசிர்வதிக்கும் தங்களின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள உயிர்ச்சத்துக்கள் என்னை இழுத்து உட்கார வைக்கிறது. தேவையில்லாத பேச்சுக்களைப் பேசும் உதடுகளுக்கு உடனே பூட்டுப் போடுவதும் அறியாமையால் பூட்டிக்கிடக்கும் உள்ளங்களின் பூட்டுடைத்து வாழ்க்கைக்கு வழி காட்டுவதும் தங்களுக்கே உரித்தான பானியோ. எதிர்மறை கருத்துக்களிலேயே உடும்புப்பிடியாக இருக்கும் பெண்களின் நெற்றிப்பொட்டில் தோட்டாக்களால் துளைத்தெடுக்கும் தைரியம் மிக மிக அருமை. பொய்மையின் தோலுரித்து உண்மையின் வெளிச்சத்தில் பெண்மையின் மென்மையை அழகுபடுத்துகிறது தங்களின் சொல்லாடல். அது மட்டுமா. பெண்ணால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் நியாயத் தராசில் வைத்து ஆண்மையை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்துகிறது தங்களின் வழக்காடுமுறை. அழகான கருத்துக்களை  உதட்டில் புன்சிரிப்பைத் தேக்கிக்கொண்டு சொற்களைப் பாகெடுத்து தாங்கள் அள்ளி ஊட்டும் ஆணித்தரம் என்னை அசர வைக்கிறது. வாழ்ந்த நாட்களை சாட்சியாய் வைத்து வாழும் நாட்களுக்கு வழி சொல்லும் வண்ணக் கலவையம்மா நீ. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி தாங்கள் அள்ளித் தெளிக்கும் தீர்ப்பைக் கேட்டிருந்தால் வாழ வழி தெரியாத  நல்லத்தங்காள் கூட தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி தேடியிருந்திருப்பாள். எனக்குத் தங்களை வாழ்த்த வயதுள்ளதா என்று தெரியவில்லை மனதுள்ளது. வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். அன்பான வாசகர்களே... மக்கள் தொலைக்காட்சியில் மாலை மணி ஆறுக்கு மேல் கொட்டித் தீர்த்துவிடு தோழியுடன் நீங்களும் கைகுலுக்கினால்  பெண்களின் வாழ்க்கையில் விழுந்திருக்கும் சுலுக்குகளுக்கு எப்படி முடிச்சவிழ்க்கப்படுகிறது என்பதைக் காணலாம். உங்களுக்கேகூட வழிபிறக்கலாம்.                .

Monday, March 14, 2011

ருத்ரதாண்டவம்

கள்வன் நுழைந்தால்கூட வேண்டியதைமட்டும் வேண்டும்மட்டும் அள்ளிக்கொண்டு ஓடிவிடுவான். நீயோ கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு உனக்குள் பதுக்கிக்கொண்டாயே. இங்கே ஊரும் உடைமையும் இழந்து சோற்றுக்காகவும் நீருக்காகவும் கையேந்தி நிற்கிறோமே. எங்கள் அலறல் உன் காதுகளுக்கு எட்டவில்லையா அல்லது எங்கள் நிலைமையைக் கண்டு எள்ளிநகையாடுகிறாயா. ஏன். யார்மீது கோபம். எதற்காக வந்தது இந்தக் கோபம். யாரைப் பழிவாங்க எடுத்தாய் இந்த விஷ்வரூபம். எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வீசி எறிந்து துவாம்சம் செய்துவிட்டாயே. எதற்காக இங்கே வந்து நர்த்தனம் ஆடினாய். அசுரத்தனமாய் நீ ஆடிவிட்டுச் சென்றதுக்குப் பெயர் ஆழிப்பேரலையாம். அந்தப் பெயர்கூட உனக்கு நாங்கள் வைத்ததுதான். உனக்குத் தெரியுமா பிறவியிலேயே உயர்ந்த பிறவி நாங்கள்தானாம். மார்தட்டிக்கொண்டிருக்கிறோம். நீயோ அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தசாவதாரம் பூண்டு ஆனந்தமாய் ருத்ரதாண்டவமாடி எங்களை அற்பமாய் அழித்துவிட்டுச் செல்கிறாயே. நியாயமா இது. நீயும் இருக்கிறாய். உனக்கும் கோபம் வரும். கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எங்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கிறாயா.  நீ கொடுத்த அடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு விழுகிறோமே தெரியவில்லையா உனக்கு. எந்தக் கடனைத் தீர்த்துக்கொள்ள இங்கே வந்து வட்டியும் முதலுமாய் வசூலித்துச் சென்றாய். எங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உன் வாய்க்குள் தினித்து வேடிக்கைப் பார்த்தோம். நாங்கள் தயாரித்த அணுகுண்டுகளை உனக்குள் வெடிக்கவைத்துப் பரீட்சித்தோம். ஓ .... உன்னை ஊனப்படுத்திவிட்டோம் என்ற கோபமோ. நீ எப்போதும் அழுததில்லையே. கதறியதில்லையே. கண்ணீர் விட்டதில்லையே. தடுத்ததுகூட இல்லையே. அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டு மௌனமாய்தானே இருந்தாய். உன் மௌனத்துக்குள் இப்படி ஒரு புகைச்சல் பூதாகரமாய் பொங்கி எழப்போகிறது என்று சொல்லவே இல்லையே. யார் உனக்கு என்ன கொடுமை செய்தாலும் அறியாத பிள்ளைபோல் அமைதியாக இருந்தாயே. உனக்கும் உணர்வுண்டு உன்னாலும் பேச முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாய். ஆனால் எங்களுக்குப் புரியாது. புரிந்தால்கூட புரியாததுபோல்தான் நாங்கள் இருப்போம். ஏன் தெரியுமா. நீதான் வாய்திறந்து வார்த்தை உதிர்க்கவில்லையே. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று பழமொழி படித்த பரம்பரையல்லவா நாங்கள். அப்படிப்பட்ட எங்களை ஏளனமாய் மிதித்துவிட்டு ஒட்டுமொத்தமாய் உலகத்துப் பார்வையெல்லாம் ஒரு நொடிக்குள் உன்மீது திருப்பிக்கொண்டாயே....நீ எத்தனை முறை சீறிப்பாய்ந்து எழுந்து வந்து தாண்டவமாடினாலும்  உன் ஆவேசம் சொல்லும் அறிவுரையை உணர்ந்துகொள்ள முடியாத நாங்கள் உனக்கு வைத்த அழகான பெயர் ஆழிப்பேரலைதான். ஏனென்றால் நாங்கள்தான் உயர்ந்த பிறவியாயிற்றே.

Saturday, March 5, 2011

வஞ்சகன் கண்ணனடி

காலம் இணைத்ததைக் காலமே பிரித்தது. மீண்டும் இணைவோம் என்று ஒருபோதும் நினைக்காத வேளையில் நிஜமாகவே இணைந்தோம். விட்டுப்போன தொடர்பு மீண்டும் கைகோர்த்தது. காய்ந்துபோன நினைவுகளுக்கு நீர் தெளித்து மீண்டும் பசுமைப்படுத்தி படரவிட்டோம். பொக்கிஷமாய் பூட்டிக்கிடந்த நிகழ்வுகளின் பூட்டுடைத்து மீண்டும் ரசித்துப் படித்தோம். ஓய்வு பெறும் வரை ஒன்றாக உழைத்திருப்போம் என்று ஆனந்தமாய் ஆய்வு நடத்தினோம் .ஆனால் பூநாகமாய் புறப்பட்ட  பதினைந்து புல்லுறுவிகள் நீட்டிய  ஓலை  உனக்கும்  எனக்கும் இடையே திரை போட்டு வேடிக்கை பார்க்கிறது. உன் ஆழ்ந்த அறிவை அடையாளம் காண முடியாத முள்ளம்பன்றிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டாயே. அவை உன்னைக் கடித்துக் குதறிவிடும் என்பதனால் தூக்கி எறியப்பட்டாயா. துவண்டுவிடாதே தோழி. தூறலைக் கண்டு துவண்டு விடாதே. தொடர்ந்து செல். அடைமழை வந்தாலும் தொடர்ந்து செல். நீ விட்டுச் சென்ற நினைவுத் துளிகள் இங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்துக்கோர்க்க மீண்டும் வா. வரண்டு விட்டது பாலைவனம் என இறுமாப்போடு பல்லிளித்த வஞ்சகர் களின் பற்களைப் பிடுங்கி உன் சோலைவனத்துக்கு உரமாக்கு. எழுதிய தீர்ப்பைத் திருத்தி எழுத யாருக்கு உண்டு தைரியம் . ஆனால் உனக்கு உண்டு பெண்ணே. உன்னிடம் எனக்குப் பிடித்ததே அந்த தைரியம்தான். பிடிக்காததும்கூட உண்டு. உன் கோபம். கோபம் தலைக்கேறியதும் வந்துவிழும் வார்த்தைகள். அவை உன்னை நிதானமிழக்க வைக்கிறது என்பதை நீ அறிவாயா. இன்னும்கூட உண்டு தோழி. நீ உண்ணும்போது  ஊர் பிரச்சனையெல்லாம் உன் பிரச்சனையாக எண்ணி உணவோடு சேர்த்து விழுங்குவது. உணவு மட்டும்  உன் உடலுக்குள் செல்லவில்லை ஊரில் உள்ள பிரச்சனைகளும் உன் உடலுக்குள்  இரத்தத்துக்குள் கலக்கின்றது என்பதை நீ ஏன் அறியாய். அது உனக்கே ஊறு விளைவிக்கும். அதனால்தான் பல முறை உன்னைத் தடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை நான் சொல்லவில்லை. சொன்னதும் கண்ணனடி.

Thursday, March 3, 2011

மயிலிறகாய்......

கொட்டினால் கோலம் கிறுக்கினால் ஓவியம் என்று வார்த்தைகளால் சுண்டி இழுத்து மயிலிறகாய் என்னை வருடிச்சென்றவள் நீ. வாழ்த்துக் கூறியதும் உன் இதழ் உதிர்த்த புன்னகையின் பூரிப்பு உன் விழிகளில் காணவில்லையே. ஆசையாய் தேடி அன்பாய் நீட்டிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தயக்கம் உன்னைக்  காட்டிக் கொடுக்கிறதே. உனக்குள்ளும் ஏதோ ஒன்று உராய்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். சொல்லிவிடு. சொன்னால் உன்னை சிதைத்துக் கொண்டிருக்கும் சிராய்ப்புக் காயம்  சீரழிந்து போகும். சொல்லாத சோகம் சுகமாய் உன்னை சொறிந்துகொண்டே இருக்கும். சோகம்கூட சில சமயங்களில் சுகமாய்தான் இருக்கும். ஆனால் சுகமே சோகம்தான் என நினைத்தால் சோர்ந்துபோகும் வாழ்க்கை. துரத்திவிடு. தூர துரத்திவிடு. சோகம் உன்னைத் தின்று விடுவதற்குள் நீ சோகத்தைத் தின்றுவிடு. வானத்தில் இருக்கும் நிலவைப் போல தூரமாய் வைத்துவிடு. நிலவுகூட தூரத்தில் இருக்கும்போது அழகாய்த்தான் இருக்கிறது. அருகில் வைத்துக்கொள்ள முடியுமா. உன்னுடன் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் துன்பத்திற்கு தூபம் போடாதே. உன் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கும் உருண்டையை உமிழ்ந்துவிடு. உன்னைச்சுற்றிப் படர்ந்திருக்கும் அழகான விஷயங்களை ஆழ்ந்து பார். அனுபவித்துப்பார். அவற்றை இரசித்துப்பார். இரசிப்பதுகூட ஒரு கலைதான். உன்னிடம் அந்தக் கலை கொட்டிக்கிடக்கிறது என்பது எனக்குத் தெரியும். போனதைப் பற்றியே யோசித்தால் இருப்பதைப் பற்றி எப்போது நினைப்பது. எப்போது இரசிப்பது. கிடக்காத சுகத்தை எண்ணித் தேய்ந்து போகாதே. உனக்கு இறைவன் கொடுத்த சுகங்கள் எத்தனையோ அவற்றை எண்ணி நெகிழ்ந்து போ. உனக்கும் கீழே இருப்பவர் கோடி. கால்களுக்கு செருப்பு கிடக்கவில்லையே என ஏக்கம் கொள்ளாதே. ஊனமில்லாத கால்கள் கொடுக்கப்பட்டுள்ளதே என திருப்தி கொள். சொல் நன்றியை இறைவனுக்கு.

Monday, February 28, 2011

அரிதாரம் பூசாதே

உண்மையாய் இருக்கப் பழகு. உண்மை  இறைவன் உனக்குக் கொடுத்த அழகான உருவத்தை வெளிக்கொணரும். பொய்மையாய் இருக்க நீ முயற்சித்தால் உன் உண்மையான உருவத்துக்கு அரிதாரம் பூசி உலாவ விடுகிறாய் என்று அர்த்தம். எதற்கு பொய் வேசம். பிறர் உன்னை  மதிக்க வேண்டும் என்பதற்காகவா. இல்லை. அப்படி நீயாக நினைத்துக்கொள்கிறாய். அதனால் நீ அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாய் என்பது உன்னால் அறியப்பட முடியாத விஷயம். உன் பேச்சே நீ எப்படிப்பட்டவன் என்பதைப் பிறருக்குக் காட்டிக்கொடுக்கும். நீ சொல்லும் ஒரு சிறு பொய்கூட அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. சில வினாடி, சில நிமிடம், சில மணி அல்லது சில நாட்களில் அது தன் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் நிற்கும். அப்போது நீ பிறர் முன் கூனிக் குருகி நிற்பாய். அதை சரிக்கட்ட இன்னொரு பொய்யை சொல்ல வேண்டி இருக்கும். இப்படி பொய் மேல் பொய் சொல்லி உன் மெய்கூட பொய்யாகிப் போகும். உண்மையை ஒப்புக்கொள். அதில் ஒரு தெளிவு இருக்கும். மன நிம்மதி இருக்கும். பிறரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிராது. பிறரின் சாபத்திலிருந்தும் தடுக்கும். தன் பலவீனம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே பெரும்பாலானோர் பொய்மைக்குள் புகுந்து கொள்கின்றனர். பலவீனத்தை எதற்காக மறைக்க வேண்டும். பலவீனத்தையே உன் பலமாக மாற்று. அவை உன்னைப் பதப்படுத்தும். பிறரை உன் வசப்படுத்தும். உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வெட்கப்படாதே. அவமானத்திலிருந்து தப்பித்துக்கொள்வாய். உண்மை உன் உள்ளத்தை அழகாக்கும். உருவத்தை அழகாக்கும். உண்மை எப்படி இருக்கும் என்று தெரியாதா....குழந்தையை உற்றுக் கவனி.அங்கே உண்மை ஒளிக்காமல் வைக்கப்பட்டுள்ளது.

Friday, February 25, 2011

மௌனமாய் இருந்துவிடு...



மௌனம்...... இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறுத்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயிருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மனதோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திறந்து மௌனமாய் அமர்ந்து வானத்தை உற்றுப் பார். வானம் உனக்கு வசப்படும். கோடி வெண்புள்ளிகள் வெளிச்சக் கூட்டமாய் உன்னைத் தேடி வரும். மனதை இழுத்து நிறுத்தினால் கண்களைத் திறந்து கொண்டே இக்காட்சியைப் பார்க்கலாம். அந்த வெளிச்சப் பிழம்பு முக்கோண வடிவில் உருமாறி உயிர் துடிப்போடு உன்னோடு தொடர்பு கொள்ளும். இயற்கையே குருவாக மாறி உன்னை வழி நடத்தும். மௌனமாய் இருந்து பார். காற்றும் மரமும் செடி கொடிகளும் மலரும் மண்ணும் மழையும் சொல்லும் இரகசியம் உன் காதுக்குள் கேட்கும். நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத் தேடி வரும். மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே. குழந்தை தாய் மடியில் ஆசையாய்த் தவழ்ந்து அனுபவிக்கும் சந்தோசத்தைப் போல் மழையோடு உறவாடிப்பார். மழை உன்னைத் தண்டிக்காது; உன் உச்சி முகர்ந்து உள்ளொளி பெருக்கி உன்னை வாழ்த்திவிட்டுப் போகும். கோபத்தை மட்டுமே அள்ளித் தெளிப்பவரிடம் மௌனத்தை அன்பளிப்பாய் கொடுத்துவிடு. அவரது கோபம்கூட நிர்கதியாகிப்போகும். மௌனத்தை தாய்மொழியாய்க் கொண்டு மகாத்மாவாக மாறிவிடச் சொல்லவில்லை. மௌனம் உன்னை மனிதனாக மாற்றும். மனிதம் உன்னை மகாத்மாவாக மாற்றும். உன்னை உன்னை என்று நான் சொன்னதெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எனக்கும்தான். நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

நீதான்.....நீயேதான்

நீ இல்லாத பொழுதுகள், உன்னோடு பேசாத பொழுதுகள், உன்னைக் காணாத பொழுதுகள் நான் என்னோடு பேச ஆரம்பித்தேன். அவை கொஞ்சம் கொஞ்சமாக என் அடி மனதில் கவிபாட ஆரம்பித்தது. சேமித்த ஞாபகங்களை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது அவை என்னை வாசிக்க ஆரம்பித்தன. சிந்திக்க ஆரம்பித்தது என் உள்ள்ம். எப்படி என்ன செய்வதென்று புரியவில்லை. அன்று எப்போதும் வாங்கிப்படிக்கும் நாளிதழ் என் கையில் இருந்தது. சேமித்த ஞாபகங்களை வார்த்தைகளாகக் கோர்த்து அந்த நாளிதழுக்கு அனுப்பத் தூண்டியது மனம். ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா உதாசீனப்படுத்தப்படுமா என்ற நெருடல் வேறு எனக்குள். யோசித்தேன். விண்ணப்பம் என்ற தலைப்பிட்டு அந்த நாளிதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  கடிதத்தோடு சேர்த்து என் முதல் கவிதையையும் அந்த நாளிதழின் முகவரிக்கு அனுப்பினேன். இருப்பினும் என் கவிதை பிரசுரத்திற்குத் தகுதியானதுதானா என்ற ச்ந்தேகம் எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த வாரமே என் முதல் கவிதை உயிரைத் தேடி என்ற தலைப்பில் நாளிதழில் பிரசுரமானது. கவிதையை விட அந்தக் கவிதைக்காகப் போட்டிருந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பெண் நீர் வீழ்ச்சியில் குளிப்பதைப் போலவும் அந்த நீர் வீழ்ச்சியிலிருந்து தெரிக்கும் நீர்த்துளிகள் அவள் முகத்தில் பட்டுத் தெரிக்கும் அழகும் மிகவும் அர்ப்புதமாக இருந்தது. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. பல முறை கவிதையின் கீழிருந்த என் பெயரை உற்றுப் பார்த்தேன். என் முதல் கவிதை எப்படி உயிரைத் தேடி என்ற தலைப்பைப் பூண்டிருந்ததோ அதேபோல் அது என் உயிரை உரசிச் சென்றது. அன்று புதிதாய் ஒன்றை சாதித்த சந்தோசம் என் உள்ளமெல்லாம் பூத்திருந்தது. அதன் பிறகு என் முயற்சிகள் தொடர ஆரம்பித்தது. என் கவிதைக்கு வரிகள் எடுத்துக்கொடுத்தது நீதான். அதற்கு அடித்தளம் போட்டதும்  நீதான். நீயே தான்.  கவிதையின் வழி என் ச்ந்தோசங்களைச் சொன்னேன்; என் வேதனைகளைச் சொன்னேன்; என் பிரிவைக்கூட சொன்னேன் ஆனால் அவற்றுக்கு சிறகுக் கட்டி தேசத்தைச் சுற்றிப் பறக்க விட்டு அரங்கேறச் செய்த அந்த முதன்மை மனிதனுக்கு நன்றியைச் சொல்லவில்லை. அந்த நல்லவர் யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று உலகையே உதறிவிட்டு தனது ஆதிக்கத்தை அஸ்தமனமாக்கிக் கொண்ட  பிறகுதான் ஒருமுறையேனும் நன்றியை நேரில் சொல்லி இருக்கலாமே என்ற ஆதங்கம் என் உள்ளத்தைப் பல முறை உறுத்தியுள்ளது.

Tuesday, February 22, 2011

நானும் அவனும்

என் கிராமத்து சாலையோரத்தில் மகிழம்பூ மரம் ஒன்று இருக்கும். விடுமுறை நாட்களில் காலையில் எழுந்ததும் என் கவனத்தை ஈர்ப்பது அந்த மகிழம்பூக்களின் வாசம்தான். தினமும் காலையில் அங்கே ஓடிச்சென்று  அந்தப் பூக்களைப் பொருக்கி வந்து நூலில் கோர்த்து சாமி படங்களுக்குப் போடுவேன். அப்படி நான் ஓடிச்செல்லும் போதெல்லாம் அவனும் என்னோடு ஓடி வருவான். அந்த மகிழம்பூ மரத்தின் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் இருக்கும். நாவல் மரத்தின் கீழ் உதிர்ந்து கிடக்கும் நாவல் பழங்களைப் பொருக்கி வந்து என்னிடம் தருவான். அந்த நாவல் மரத்தின் கீழ் ஒரு பெரிய கிணறு உண்டு.அந்தக் கிணற்று நீர்தான் என் கிராமத்து மக்களுக்கு அப்போதைய தெப்பக்குளம். நான் ஒரு சிறிய வாளியிலும் அவன் ஒரு பெரிய  வாளியிலும் வீட்டுக்கு நீர் அள்ளிப் போவது எங்கள் சாயங்கால கடமை மட்டுமல்ல அது எங்கள் பொழுதுபோக்கும்கூட. நீரை எடுத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் புறப்படுவோம் ஆனால் அதை விரைவாக வீட்டில் உள்ள தொட்டியில் ஊற்றி விட்டு ஓடி வந்து என் வாளியையும் தூக்கிக் கொண்டு ஓடுவான். அவ்வளவு சுறுசுறுப்பு அவன். எங்கள் வீட்டு அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று நீந்தி விளையாடுவதும் அலைகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடி விளையாடுவதும் இன்றும் என் மனத்திரையில் நிழலாடும் காட்சிகள் அவை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடற்கரையை ஒட்டி உள்ள படகுத்துறைக்குச் சென்று கடலில் மிதந்துவரும் பலகைப்பெட்டிகளுக்காகக் காத்திருப்பான். தூரத்தில் மிதந்து வரும்போதே நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு கடலில் நீந்திச்சென்று தனக்குக் கிடைத்த பெட்டியை கரைக்கு இழுத்து வருவேன். அதை சைக்கிளில் வைத்துக் கட்டி வீட்டிக்குக் கொண்டுவந்து கோடரியால் வெட்டிப்போடுவான். அவன் வெட்டிப்போடும் பலகைகளை அடுப்பங்கரையில் அடுக்கி வைப்பேன் நான். அதைப் பார்க்கும் பக்கத்து வீட்டு பாட்டி அந்தப் பிள்ளைகளை பாருங்க எவ்வளவு பொருப்பா இருக்காங்க நீங்களும் இருக்கீங்களே என்று தன் பேரப்பிள்ளைகளைத் திட்டுவது ஜன்னல் வழியாக என் காதில் விழும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அந்தப் பலகைகள்தான்  எங்கள் வீட்டு சமையலுக்கு அம்மாவுக்குக் கைகொடுத்து வந்தது. அப்படி ஒரு நாள் மாலை வேளையில் படகுத்துறையில் ஓடும்போது கால் தவறி கடலில் விழுந்துவிட்டான். அங்கு கற்றூண்களில் ஒட்டியிருந்த சிப்பிகள் அவன் உடலைப் பதம் பார்த்து விட்டன. அந்தத் தடையங்கள் இன்னும் அவன் உடலில் வரிவரியாக வடுக்களாக உள்ளன. என் அம்மா பள்ளி ஓய்வு நேர உணவுக்காக செய்து கொடுத்தனுப்பும் வாழைப்பழ பலகாரங்களை நண்பர்களிடம் விற்று பணமாக்கி சேமித்து வைப்பான். அப்படி சேமித்து வைக்கும் பணத்தை அம்மாவிடமே திருப்பித் தரும் அன்பான குணமுடையவன். ஒரு நாள் என்னை அவனோடு போட்டியிட அழைத்தான். அதுவும் வரையும் போட்டிக்கு. நான் தயங்கித் தயங்கி சம்மதித்தேன்.  கண்ணன் வெண்ணெய் உண்ணும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை என்னிடம் கொடுத்தான். அவன் யசோதை கண்ணனை மிரட்டும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை எடுத்துக் கொண்டான். சரி வா வரையலாம். யார் நல்லா வரையறோம்னு பார்க்கலாம் என்றான். இருவரும் வரைய ஆரம்பித்தோம். நிமிடங்கள் நகர்ந்தன. அவனும் வரைந்து முடித்தான் நானும் வரைந்து முடித்தேன். அவனுடைய ஓவியம் சுமாராக இருந்தது. என் ஓவியத்தை இமைக்காமல் பார்த்தான். நானும்தான். என் ஓவியத்தை எடுத்துக்கொண்டு ஓடி அம்மாவிடம் காட்டினான். அப்பாவிடம் காட்டினான். நம்பவே முடியல இவ்வளவு அழகா எப்படி வரைந்தே என்று கேட்டான். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஏனென்றால் எனக்கே தெரியாத ஓவியத் திறமையை அன்று வெளிக்கொணர்ந்தவன் அவன்தான். அதன்பிறகுதான்  பார்த்த காட்சியெல்லாம் வரைய ஆரம்பித்தேன்.

Wednesday, February 16, 2011

வழிமேல் விழி வைத்து...

என் பள்ளியின் முன்புறம் ஒரு சிறு பூந்தோட்டம் இருந்தது. அதில் அவரவருக்கு விருப்பமான செடிகளை நட்டுவைத்து வளர்க்கும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. என்ன செடி நடலாம் என்று என் மண்டைக்குள் ஒரே குடைச்சல். உனக்கு ரோஜாப்பூதான ரொம்பப் பிடிக்கும் அந்தச் செடிய நடு என்று அம்மா ஆலோசனை சொன்னதும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டதைப்போல் நிம்மதி பெரு மூச்சு விட்டேன். மறுநாள் காலையில் அம்மா வெட்டித் தந்த ரோஜாக் கிளையை என் பள்ளியின் பூந்தோட்டத்தில் நட்டு வைத்தேன். என் வகுப்பறையின் பின்புறத்தில் ஒரு நீர்க்குழாயும் ஒரு சிறிய வாளியும் இருக்கும். அதில்தான் நான் தினந்தோறும் நீர் பிடித்து ரோஜாச் செடிக்கு வார்த்து வந்தேன். அந்த ரோஜாக் கிளை துளிர் விட ஆரம்பித்ததும் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு. அந்தச் செடியில் புதிய இலைகளைப் பார்க்கும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை பூக்கும். அந்த ரோஜாச் செடியில் எப்போது பூ பூக்கும் என்று தவம் கிடக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ஒரு சிறு அரும்பு துளிர்த்திருப்பதைப் பார்த்தேன். அந்த முதல் அரும்பு என்னை ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பல முறை அந்த மொட்டு மலர்கிறதா என்று ஓடிச்சென்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நாளுக்கு நாள் மொட்டு பெரிதாகிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். மேலிருக்கும் புல்லிதழ் அவிழ்ந்து சிவப்பு நிறம் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. என் நண்பர்கள் நாளை ரோஜா மலர்ந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். நாளை எப்போது வரும் என்ற காத்திருப்போடு வீடு திரும்பினேன். அங்கு காத்திருந்தது எனக்கு ஒரு பேரிடி. சீக்கிரம் சாப்பிட்டிட்டு கிளம்பு பாட்டி இறந்துட்டாங்களாம் தந்தி வந்திருக்கு என்று மூக்கை சிந்தியவாறே அம்மா துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எனக்கும் கவலையாகத்தான் இருந்தது இருப்பினும் திரும்பி வருவதற்கு நான்கைந்து  நாட்கள் ஆகும் என்று தெரிந்ததும் இந்த பாட்டிக்கு நேரம் காலம் தெரியாதா என்று மனம் முனுக ஆரம்பித்தது. அம்மா கண்ணீரும் கம்பலையுமாய் பேருந்தை விட்டு கீழிறங்க நானும் பிந்தொடர்ந்தேன். அந்த வீட்டின் முன்புறத்தில் வெற்றிலைப் பாக்கை இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பாட்டி. வந்ததே கோபம் எனக்கு. பிறகுதான் அது தவறுதலாக வந்த தந்தி என்று வீட்டில் இருந்தவர்கள் பேசி சிரித்தபோது தெரிந்துகொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். என் பக்கத்து வீட்டு நண்பன் ஓடி வந்து உன் ரோஜாப்பூ மலர்ந்திருச்சி தெரியுமா. இந்நேரம் வாடிப்போயிருக்கும் என்று என் ஏக்கத்தைப் பெரிதாக்கினான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் ரோஜாப்பூ என்ன ஆகியிருக்குமோ என்ற தவிப்பு எனக்கு. மறுநாள் ஓடிச்சென்று பார்த்தேன். ரோஜாப்பூ வாடாமல் வதங்காமல் எனக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தது. மலர்ந்தது ரோஜா மட்டுமல்ல என் மனமும்தான்.

Thursday, February 10, 2011

தொலைத்துவிட்டேனடி தோழி

 தொலைத்துவிட்டேனடி தோழி. உன்னைத் தொலைத்துவிட்டேனடி. தொலைந்து போனதை எண்ணி தொலைந்துவிட்டாயே நீ. நீ தொலைத்த எதையுமே தொடர்ந்துபோக முடியாமல் தோற்றுப்போனேனடி நான். எவ்வளவு அழகு நீ. எவ்வளவு இனிமை உன்னிடம். உன் இளமைக்கால ரசிகை நான் என்பது உனக்குத் தெரியுமா. உன் மடியில் தலை சாய்த்து  இளைப்பாறும் நாட்கள் மீண்டும் வராதா. நீ செல்லமாய் வாரியணைத்து முத்தமிட்ட ஈரம் இன்னும் காயவில்லையே என் கன்னத்தில். உன் கதகதப்பில் குளிர்காய்ந்த சூடு கூட குறையவில்லை. அதற்குள் தனிமைப்படுத்திக்கொண்டாயே உன்னை. என் சிரிப்புக்களையும் சிணுங்கள்களையும் சில்லரைகளாய் உன் அடிமடியில்  சேமித்து  வைத்திருந்தாயே.  அனைத்தையும் அவிழ்த்து எங்கே கொட்டினாய். உன்னை அடித்துப் போட்ட அந்தப் பிரிவை கலைத்துப்போடமுடியாமல் களைத்துப் போனேனடி நான். நீயாக நீ இல்லையே. தூக்கத்தைத் தூர விரட்டி விட்டு...தூயவளே என்ன ஆனாய்.  கடற்கரை ஈரத்தில் இருவரும் நடக்கையில் மணலில்  பதிந்த நம் காலடி தடத்தை ஓடி வந்து அழித்துவிட்டுத் திரும்பி ஓடும் அலையைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் முறைத்துவிட்டு வருவாயே, மறந்துபோனதா அல்லது மரித்துப்போனதா. நான் ஒரு வரி பாட நீ மறு வரி பாட பதிவு செய்த பாடலை இனி எப்படி பதியம் போடுவேன். உன்னோடு தூளிகட்டி நான் வாழ்ந்த காலங்கள் கனவில்லையே. இருந்தும் கவிழ்ந்து போனது ஏன். நீ காட்டிய பாதையில் நடை பயில வந்த என்னை பாதியிலேயே பரிதவிக்க விட்டு விட்டு பல்லக்கு ஏறி பாற்கடல் கடைய சென்றாயா. அன்று மூழ்கிப்போன உன்னை முத்தெடுக்க வரவில்லையே நான். இன்று தொலைத்துவிட்ட காலத்தை துரத்திப் பிடிக்க வருவாயா என்னோடு. தூரத்து நிலவாய் துவண்டு போன உனக்கு அன்பாய் அருகிலேயே நான் இருந்தும் அனாதையாய் நீ இருக்க தோற்று விட்டேனடி தோழி. தொலைத்துவிட்டேனடி உன்னை.

Wednesday, February 9, 2011

சடையன் மகனுக்கு.........

என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக்கொண்டு பதினைந்து படிகளைக் கடந்து கீழே வந்ததும் என் கண்களைக் கவர்ந்தது கொத்துக் கொத்தாய் ஊசிகளைக் கோர்த்ததுபோல் பூத்திருந்த அந்த சிவப்பு வண்ண மலர்கள்தான். அங்கே பூக்களையும் அதன் மேல் படர்ந்திருந்த காலைப் பனி நீர்த் துளிகளையும் ரசித்தவாறு நான் சற்று நின்றதும் கால் வலிக்குதா ? தூக்கிக்கவா ? என்று நீங்கள் கேட்டதும் சிரித்ததுக் கொண்டே வேண்டாம் என தலையசைத்துவிட்டு உங்களைப் பின் தொடர்ந்ததும் இன்னும் ஞாபகத்தில் பசுமையாய் இருக்கிறது. இதுதான் நீ படிக்கப்போற பள்ளி என்று நீங்கள் புன்னகையோடு சொன்னபோது உங்கள் கைகளை இன்னும் இருக்கமாய் பற்றிக்கொண்டேன். நாம் இருவரும் கதவருகே நின்ற போது அங்கே ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு தன் காலணிகளுக்குக் கயிறு கட்டிக்கொண்டிருந்தார். வாய்யா தலைமையாசிரியர் உள்ளதான் இருக்காரு போய் பாரு என்று சொன்னவர் என்னைப் பார்த்து கண்களை சிமிட்டியதும் நான் முகத்தை திருப்பிக் கொண்டதும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அவர் அப்பள்ளியின் ஆசிரியர் என்பது அன்று எனக்குத் தெரியாது. நீங்கள் என்னைத் தலைமையாசிரியர் முன் நிறுத்தியதும் என்னிடம் தலைமையாசிரியர் கேட்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொன்னதும் ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை எனக்குப் பதில் சொல்லத் தெரியாது என்று நினைத்தீர்களோ.  புத்தகப் பையை நாற்காலியின் விளிம்பில் மாட்டிவிட்டு என் தலையை லேசாக வருடிவிட்டு கை அசைத்ததும் உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டேன். என்னை விட்டு விட்டுப் போக மனமில்லாமல் மீண்டும் என் தலையை வருடிவிட்டு பல முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தீர்கள். உங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என்னைத் தலைமையாசிரியரின் குரல் திருப்பியது. உன் பெயர் என்ன ?..... நான் உங்களையே பார்த்துக்கொண்டிருந்ததால் மௌனம் என்னிடம். சரி உனக்குப் படிக்கத் தெரியுமா ? தலையை மட்டும் அசைத்தேன். அவர் மேசை மேல் இருந்த பிரம்பை எடுத்து என்னிடம் கொடுத்து கரும்பலகையில் இருந்த சொற்களை வாசிக்கச் சொன்னதும் நான் கடகடவென வாசித்ததும் சந்தோசத்தில் வாய்விட்டு சிரித்தார். பார்த்தீர்களாடா இன்னைக்கு வந்த பிள்ளை எப்படி வாசிக்குதுனு... என்று அங்கே அமர்ந்திருந்த மாணவர்களிடம் கூறினார்.அவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். அன்றிலிருந்து ஒன்றாம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான் குட்டி ஆசிரியராக மாறினேன். பெருமையாக இருந்தது எனக்கு. என்னை அங்கே விட்டு வந்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்டன இன்னும் நான் அந்த சூழலிலிருந்து மீளவே இல்லை. அந்த அழகிய சூழலை உருவாக்கித் தந்த உங்களுக்கு................ நன்றி அப்பா.

Friday, February 4, 2011

உயிரை உயிராக்கிய அந்த நாள்

அப்போது இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் யாருமில்லை. மூன்று வயது தம்பி மட்டும் வாயில் பால் போத்தலுடன் என் பக்கத்தில். என் பள்ளியின் உயரம் தாண்டும் போட்டிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிக பயிற்சி மேலும் என்னைத் தரமாக்கும் என்று நினைத்தேன் என் வீட்டின் வரவேற்பறை பெரியதாக இருக்கும். நடு அறையில் இரண்டு உயரமான நாற்காலிகளை வைத்தேன். அதன் மேல் நீண்ட மூங்கிலை வைத்தேன். தூரத்திலிருந்து ஓடி வந்து தாண்டினேன். சந்தோசம் மனசெல்லாம். பள்ளியில் நடக்கவிருக்கும் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கை மனதைப் பூரிக்க வைத்தது. ஆனால் மீண்டும் மீண்டும் தா.ண்டியதும் சிமெந்து தரை கால் வலிக்கச் செய்தது.தலையணை ஒன்றை கொண்டு வந்து மூங்கிலின் முன்புறம் போட்டேன். ஓடி வந்து மூங்கிலைத் தாண்டினேன்.... தரை மீது வைக்க வேண்டிய காலை தலையணை மீது வைத்தேன். சருக்கிய தலையணை கால் நீட்டிய வாக்கில் என் உடலை தரை மீது தள்ளியது. நின்றது மூச்சு.  அசையவில்லை உடல்.  நகரவில்லை விழி. இயங்கவில்லை இதயம். ஆனால்...என் வாழ்வில்அதுவரை  நடந்த அத்தனை சம்பவங்களும் குழந்தை பருவம் வரை திரைப்படக் காட்சியைப்போல் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது முன்கதவு உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் வெளியிலிருந்து யாரும் பார்க்கவும் வழியில்லை. உயிர் உடலை விட்டு வெளியேறும் தருணம் வந்துவிட்டதா? புரியவில்லை. நினைவுகளை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் சரணாகதி அடைந்தேன். மறுவினாடி என் மூன்று வயது தம்பி என்னருகில் வந்து அவனது பால் போத்தலில் இருந்த நீரை என் வாய்க்குள் ஊற்றினான். மீண்டும் மெல்ல மெல்ல மூச்சு வந்தது எனக்கு. நெஞ்சுக்குள் பயங்கர வலி. அப்போது என் அருகில் நின்றது குழந்தையா குருபரனா என்று சிந்திக்கத் தோன்றியது. அதன் பிறகு நெடுங்காலம் நெஞ்சுக்குள் இருந்த வலி போகவில்லை. நான் உயரம் தாண்டும் போட்டியில் கலந்துகொள்ளவும் முடியவில்லை. ஆனால் ஒருசில வினாடிகளில் என் குழந்தைப் பருவம் வரை பின்னோக்கி ஓடிய காட்சிகள் ஏன் ஏற்பட்டது? அந்த நிமிடம் எனக்குள் என்ன நடந்தது? இந்த தேடல் பல ஆண்டுகள் என்னைத் தொடர்ந்து வந்தது. எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை. தேடல் ஆரம்பமானால் பதில் தேடிவரும் என்ற நம்பிக்கை மட்டும் என்னை விட்டுப் போகவில்லை.
நிறைய ஆன்மீக புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ஆத்ம தரிசனம் என்ற புத்தகத்தில் என் கேள்விக்கு விடை கிடைத்தது. அதிர்ந்து போனேன். அதில் உடலை விட்டு உயிர் பிரியும் தருணம் இந்த அனுபவம் ஏற்படும் என்று அறிந்தேன். என் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. இந்த அரியஅனுபவத்தை எனக்குத் தந்த்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.