Monday, February 28, 2011

அரிதாரம் பூசாதே

உண்மையாய் இருக்கப் பழகு. உண்மை  இறைவன் உனக்குக் கொடுத்த அழகான உருவத்தை வெளிக்கொணரும். பொய்மையாய் இருக்க நீ முயற்சித்தால் உன் உண்மையான உருவத்துக்கு அரிதாரம் பூசி உலாவ விடுகிறாய் என்று அர்த்தம். எதற்கு பொய் வேசம். பிறர் உன்னை  மதிக்க வேண்டும் என்பதற்காகவா. இல்லை. அப்படி நீயாக நினைத்துக்கொள்கிறாய். அதனால் நீ அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாய் என்பது உன்னால் அறியப்பட முடியாத விஷயம். உன் பேச்சே நீ எப்படிப்பட்டவன் என்பதைப் பிறருக்குக் காட்டிக்கொடுக்கும். நீ சொல்லும் ஒரு சிறு பொய்கூட அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. சில வினாடி, சில நிமிடம், சில மணி அல்லது சில நாட்களில் அது தன் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் நிற்கும். அப்போது நீ பிறர் முன் கூனிக் குருகி நிற்பாய். அதை சரிக்கட்ட இன்னொரு பொய்யை சொல்ல வேண்டி இருக்கும். இப்படி பொய் மேல் பொய் சொல்லி உன் மெய்கூட பொய்யாகிப் போகும். உண்மையை ஒப்புக்கொள். அதில் ஒரு தெளிவு இருக்கும். மன நிம்மதி இருக்கும். பிறரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிராது. பிறரின் சாபத்திலிருந்தும் தடுக்கும். தன் பலவீனம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே பெரும்பாலானோர் பொய்மைக்குள் புகுந்து கொள்கின்றனர். பலவீனத்தை எதற்காக மறைக்க வேண்டும். பலவீனத்தையே உன் பலமாக மாற்று. அவை உன்னைப் பதப்படுத்தும். பிறரை உன் வசப்படுத்தும். உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வெட்கப்படாதே. அவமானத்திலிருந்து தப்பித்துக்கொள்வாய். உண்மை உன் உள்ளத்தை அழகாக்கும். உருவத்தை அழகாக்கும். உண்மை எப்படி இருக்கும் என்று தெரியாதா....குழந்தையை உற்றுக் கவனி.அங்கே உண்மை ஒளிக்காமல் வைக்கப்பட்டுள்ளது.

Friday, February 25, 2011

மௌனமாய் இருந்துவிடு...



மௌனம்...... இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறுத்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயிருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மனதோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திறந்து மௌனமாய் அமர்ந்து வானத்தை உற்றுப் பார். வானம் உனக்கு வசப்படும். கோடி வெண்புள்ளிகள் வெளிச்சக் கூட்டமாய் உன்னைத் தேடி வரும். மனதை இழுத்து நிறுத்தினால் கண்களைத் திறந்து கொண்டே இக்காட்சியைப் பார்க்கலாம். அந்த வெளிச்சப் பிழம்பு முக்கோண வடிவில் உருமாறி உயிர் துடிப்போடு உன்னோடு தொடர்பு கொள்ளும். இயற்கையே குருவாக மாறி உன்னை வழி நடத்தும். மௌனமாய் இருந்து பார். காற்றும் மரமும் செடி கொடிகளும் மலரும் மண்ணும் மழையும் சொல்லும் இரகசியம் உன் காதுக்குள் கேட்கும். நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத் தேடி வரும். மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே. குழந்தை தாய் மடியில் ஆசையாய்த் தவழ்ந்து அனுபவிக்கும் சந்தோசத்தைப் போல் மழையோடு உறவாடிப்பார். மழை உன்னைத் தண்டிக்காது; உன் உச்சி முகர்ந்து உள்ளொளி பெருக்கி உன்னை வாழ்த்திவிட்டுப் போகும். கோபத்தை மட்டுமே அள்ளித் தெளிப்பவரிடம் மௌனத்தை அன்பளிப்பாய் கொடுத்துவிடு. அவரது கோபம்கூட நிர்கதியாகிப்போகும். மௌனத்தை தாய்மொழியாய்க் கொண்டு மகாத்மாவாக மாறிவிடச் சொல்லவில்லை. மௌனம் உன்னை மனிதனாக மாற்றும். மனிதம் உன்னை மகாத்மாவாக மாற்றும். உன்னை உன்னை என்று நான் சொன்னதெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எனக்கும்தான். நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

நீதான்.....நீயேதான்

நீ இல்லாத பொழுதுகள், உன்னோடு பேசாத பொழுதுகள், உன்னைக் காணாத பொழுதுகள் நான் என்னோடு பேச ஆரம்பித்தேன். அவை கொஞ்சம் கொஞ்சமாக என் அடி மனதில் கவிபாட ஆரம்பித்தது. சேமித்த ஞாபகங்களை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது அவை என்னை வாசிக்க ஆரம்பித்தன. சிந்திக்க ஆரம்பித்தது என் உள்ள்ம். எப்படி என்ன செய்வதென்று புரியவில்லை. அன்று எப்போதும் வாங்கிப்படிக்கும் நாளிதழ் என் கையில் இருந்தது. சேமித்த ஞாபகங்களை வார்த்தைகளாகக் கோர்த்து அந்த நாளிதழுக்கு அனுப்பத் தூண்டியது மனம். ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா உதாசீனப்படுத்தப்படுமா என்ற நெருடல் வேறு எனக்குள். யோசித்தேன். விண்ணப்பம் என்ற தலைப்பிட்டு அந்த நாளிதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  கடிதத்தோடு சேர்த்து என் முதல் கவிதையையும் அந்த நாளிதழின் முகவரிக்கு அனுப்பினேன். இருப்பினும் என் கவிதை பிரசுரத்திற்குத் தகுதியானதுதானா என்ற ச்ந்தேகம் எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த வாரமே என் முதல் கவிதை உயிரைத் தேடி என்ற தலைப்பில் நாளிதழில் பிரசுரமானது. கவிதையை விட அந்தக் கவிதைக்காகப் போட்டிருந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பெண் நீர் வீழ்ச்சியில் குளிப்பதைப் போலவும் அந்த நீர் வீழ்ச்சியிலிருந்து தெரிக்கும் நீர்த்துளிகள் அவள் முகத்தில் பட்டுத் தெரிக்கும் அழகும் மிகவும் அர்ப்புதமாக இருந்தது. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. பல முறை கவிதையின் கீழிருந்த என் பெயரை உற்றுப் பார்த்தேன். என் முதல் கவிதை எப்படி உயிரைத் தேடி என்ற தலைப்பைப் பூண்டிருந்ததோ அதேபோல் அது என் உயிரை உரசிச் சென்றது. அன்று புதிதாய் ஒன்றை சாதித்த சந்தோசம் என் உள்ளமெல்லாம் பூத்திருந்தது. அதன் பிறகு என் முயற்சிகள் தொடர ஆரம்பித்தது. என் கவிதைக்கு வரிகள் எடுத்துக்கொடுத்தது நீதான். அதற்கு அடித்தளம் போட்டதும்  நீதான். நீயே தான்.  கவிதையின் வழி என் ச்ந்தோசங்களைச் சொன்னேன்; என் வேதனைகளைச் சொன்னேன்; என் பிரிவைக்கூட சொன்னேன் ஆனால் அவற்றுக்கு சிறகுக் கட்டி தேசத்தைச் சுற்றிப் பறக்க விட்டு அரங்கேறச் செய்த அந்த முதன்மை மனிதனுக்கு நன்றியைச் சொல்லவில்லை. அந்த நல்லவர் யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று உலகையே உதறிவிட்டு தனது ஆதிக்கத்தை அஸ்தமனமாக்கிக் கொண்ட  பிறகுதான் ஒருமுறையேனும் நன்றியை நேரில் சொல்லி இருக்கலாமே என்ற ஆதங்கம் என் உள்ளத்தைப் பல முறை உறுத்தியுள்ளது.

Tuesday, February 22, 2011

நானும் அவனும்

என் கிராமத்து சாலையோரத்தில் மகிழம்பூ மரம் ஒன்று இருக்கும். விடுமுறை நாட்களில் காலையில் எழுந்ததும் என் கவனத்தை ஈர்ப்பது அந்த மகிழம்பூக்களின் வாசம்தான். தினமும் காலையில் அங்கே ஓடிச்சென்று  அந்தப் பூக்களைப் பொருக்கி வந்து நூலில் கோர்த்து சாமி படங்களுக்குப் போடுவேன். அப்படி நான் ஓடிச்செல்லும் போதெல்லாம் அவனும் என்னோடு ஓடி வருவான். அந்த மகிழம்பூ மரத்தின் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் இருக்கும். நாவல் மரத்தின் கீழ் உதிர்ந்து கிடக்கும் நாவல் பழங்களைப் பொருக்கி வந்து என்னிடம் தருவான். அந்த நாவல் மரத்தின் கீழ் ஒரு பெரிய கிணறு உண்டு.அந்தக் கிணற்று நீர்தான் என் கிராமத்து மக்களுக்கு அப்போதைய தெப்பக்குளம். நான் ஒரு சிறிய வாளியிலும் அவன் ஒரு பெரிய  வாளியிலும் வீட்டுக்கு நீர் அள்ளிப் போவது எங்கள் சாயங்கால கடமை மட்டுமல்ல அது எங்கள் பொழுதுபோக்கும்கூட. நீரை எடுத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் புறப்படுவோம் ஆனால் அதை விரைவாக வீட்டில் உள்ள தொட்டியில் ஊற்றி விட்டு ஓடி வந்து என் வாளியையும் தூக்கிக் கொண்டு ஓடுவான். அவ்வளவு சுறுசுறுப்பு அவன். எங்கள் வீட்டு அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று நீந்தி விளையாடுவதும் அலைகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடி விளையாடுவதும் இன்றும் என் மனத்திரையில் நிழலாடும் காட்சிகள் அவை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடற்கரையை ஒட்டி உள்ள படகுத்துறைக்குச் சென்று கடலில் மிதந்துவரும் பலகைப்பெட்டிகளுக்காகக் காத்திருப்பான். தூரத்தில் மிதந்து வரும்போதே நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு கடலில் நீந்திச்சென்று தனக்குக் கிடைத்த பெட்டியை கரைக்கு இழுத்து வருவேன். அதை சைக்கிளில் வைத்துக் கட்டி வீட்டிக்குக் கொண்டுவந்து கோடரியால் வெட்டிப்போடுவான். அவன் வெட்டிப்போடும் பலகைகளை அடுப்பங்கரையில் அடுக்கி வைப்பேன் நான். அதைப் பார்க்கும் பக்கத்து வீட்டு பாட்டி அந்தப் பிள்ளைகளை பாருங்க எவ்வளவு பொருப்பா இருக்காங்க நீங்களும் இருக்கீங்களே என்று தன் பேரப்பிள்ளைகளைத் திட்டுவது ஜன்னல் வழியாக என் காதில் விழும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அந்தப் பலகைகள்தான்  எங்கள் வீட்டு சமையலுக்கு அம்மாவுக்குக் கைகொடுத்து வந்தது. அப்படி ஒரு நாள் மாலை வேளையில் படகுத்துறையில் ஓடும்போது கால் தவறி கடலில் விழுந்துவிட்டான். அங்கு கற்றூண்களில் ஒட்டியிருந்த சிப்பிகள் அவன் உடலைப் பதம் பார்த்து விட்டன. அந்தத் தடையங்கள் இன்னும் அவன் உடலில் வரிவரியாக வடுக்களாக உள்ளன. என் அம்மா பள்ளி ஓய்வு நேர உணவுக்காக செய்து கொடுத்தனுப்பும் வாழைப்பழ பலகாரங்களை நண்பர்களிடம் விற்று பணமாக்கி சேமித்து வைப்பான். அப்படி சேமித்து வைக்கும் பணத்தை அம்மாவிடமே திருப்பித் தரும் அன்பான குணமுடையவன். ஒரு நாள் என்னை அவனோடு போட்டியிட அழைத்தான். அதுவும் வரையும் போட்டிக்கு. நான் தயங்கித் தயங்கி சம்மதித்தேன்.  கண்ணன் வெண்ணெய் உண்ணும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை என்னிடம் கொடுத்தான். அவன் யசோதை கண்ணனை மிரட்டும் காட்சியைக் கொண்ட தீபாவளி அட்டையை எடுத்துக் கொண்டான். சரி வா வரையலாம். யார் நல்லா வரையறோம்னு பார்க்கலாம் என்றான். இருவரும் வரைய ஆரம்பித்தோம். நிமிடங்கள் நகர்ந்தன. அவனும் வரைந்து முடித்தான் நானும் வரைந்து முடித்தேன். அவனுடைய ஓவியம் சுமாராக இருந்தது. என் ஓவியத்தை இமைக்காமல் பார்த்தான். நானும்தான். என் ஓவியத்தை எடுத்துக்கொண்டு ஓடி அம்மாவிடம் காட்டினான். அப்பாவிடம் காட்டினான். நம்பவே முடியல இவ்வளவு அழகா எப்படி வரைந்தே என்று கேட்டான். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஏனென்றால் எனக்கே தெரியாத ஓவியத் திறமையை அன்று வெளிக்கொணர்ந்தவன் அவன்தான். அதன்பிறகுதான்  பார்த்த காட்சியெல்லாம் வரைய ஆரம்பித்தேன்.

Wednesday, February 16, 2011

வழிமேல் விழி வைத்து...

என் பள்ளியின் முன்புறம் ஒரு சிறு பூந்தோட்டம் இருந்தது. அதில் அவரவருக்கு விருப்பமான செடிகளை நட்டுவைத்து வளர்க்கும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. என்ன செடி நடலாம் என்று என் மண்டைக்குள் ஒரே குடைச்சல். உனக்கு ரோஜாப்பூதான ரொம்பப் பிடிக்கும் அந்தச் செடிய நடு என்று அம்மா ஆலோசனை சொன்னதும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டதைப்போல் நிம்மதி பெரு மூச்சு விட்டேன். மறுநாள் காலையில் அம்மா வெட்டித் தந்த ரோஜாக் கிளையை என் பள்ளியின் பூந்தோட்டத்தில் நட்டு வைத்தேன். என் வகுப்பறையின் பின்புறத்தில் ஒரு நீர்க்குழாயும் ஒரு சிறிய வாளியும் இருக்கும். அதில்தான் நான் தினந்தோறும் நீர் பிடித்து ரோஜாச் செடிக்கு வார்த்து வந்தேன். அந்த ரோஜாக் கிளை துளிர் விட ஆரம்பித்ததும் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு. அந்தச் செடியில் புதிய இலைகளைப் பார்க்கும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை பூக்கும். அந்த ரோஜாச் செடியில் எப்போது பூ பூக்கும் என்று தவம் கிடக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ஒரு சிறு அரும்பு துளிர்த்திருப்பதைப் பார்த்தேன். அந்த முதல் அரும்பு என்னை ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பல முறை அந்த மொட்டு மலர்கிறதா என்று ஓடிச்சென்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நாளுக்கு நாள் மொட்டு பெரிதாகிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். மேலிருக்கும் புல்லிதழ் அவிழ்ந்து சிவப்பு நிறம் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. என் நண்பர்கள் நாளை ரோஜா மலர்ந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். நாளை எப்போது வரும் என்ற காத்திருப்போடு வீடு திரும்பினேன். அங்கு காத்திருந்தது எனக்கு ஒரு பேரிடி. சீக்கிரம் சாப்பிட்டிட்டு கிளம்பு பாட்டி இறந்துட்டாங்களாம் தந்தி வந்திருக்கு என்று மூக்கை சிந்தியவாறே அம்மா துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எனக்கும் கவலையாகத்தான் இருந்தது இருப்பினும் திரும்பி வருவதற்கு நான்கைந்து  நாட்கள் ஆகும் என்று தெரிந்ததும் இந்த பாட்டிக்கு நேரம் காலம் தெரியாதா என்று மனம் முனுக ஆரம்பித்தது. அம்மா கண்ணீரும் கம்பலையுமாய் பேருந்தை விட்டு கீழிறங்க நானும் பிந்தொடர்ந்தேன். அந்த வீட்டின் முன்புறத்தில் வெற்றிலைப் பாக்கை இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பாட்டி. வந்ததே கோபம் எனக்கு. பிறகுதான் அது தவறுதலாக வந்த தந்தி என்று வீட்டில் இருந்தவர்கள் பேசி சிரித்தபோது தெரிந்துகொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். என் பக்கத்து வீட்டு நண்பன் ஓடி வந்து உன் ரோஜாப்பூ மலர்ந்திருச்சி தெரியுமா. இந்நேரம் வாடிப்போயிருக்கும் என்று என் ஏக்கத்தைப் பெரிதாக்கினான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் ரோஜாப்பூ என்ன ஆகியிருக்குமோ என்ற தவிப்பு எனக்கு. மறுநாள் ஓடிச்சென்று பார்த்தேன். ரோஜாப்பூ வாடாமல் வதங்காமல் எனக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தது. மலர்ந்தது ரோஜா மட்டுமல்ல என் மனமும்தான்.

Thursday, February 10, 2011

தொலைத்துவிட்டேனடி தோழி

 தொலைத்துவிட்டேனடி தோழி. உன்னைத் தொலைத்துவிட்டேனடி. தொலைந்து போனதை எண்ணி தொலைந்துவிட்டாயே நீ. நீ தொலைத்த எதையுமே தொடர்ந்துபோக முடியாமல் தோற்றுப்போனேனடி நான். எவ்வளவு அழகு நீ. எவ்வளவு இனிமை உன்னிடம். உன் இளமைக்கால ரசிகை நான் என்பது உனக்குத் தெரியுமா. உன் மடியில் தலை சாய்த்து  இளைப்பாறும் நாட்கள் மீண்டும் வராதா. நீ செல்லமாய் வாரியணைத்து முத்தமிட்ட ஈரம் இன்னும் காயவில்லையே என் கன்னத்தில். உன் கதகதப்பில் குளிர்காய்ந்த சூடு கூட குறையவில்லை. அதற்குள் தனிமைப்படுத்திக்கொண்டாயே உன்னை. என் சிரிப்புக்களையும் சிணுங்கள்களையும் சில்லரைகளாய் உன் அடிமடியில்  சேமித்து  வைத்திருந்தாயே.  அனைத்தையும் அவிழ்த்து எங்கே கொட்டினாய். உன்னை அடித்துப் போட்ட அந்தப் பிரிவை கலைத்துப்போடமுடியாமல் களைத்துப் போனேனடி நான். நீயாக நீ இல்லையே. தூக்கத்தைத் தூர விரட்டி விட்டு...தூயவளே என்ன ஆனாய்.  கடற்கரை ஈரத்தில் இருவரும் நடக்கையில் மணலில்  பதிந்த நம் காலடி தடத்தை ஓடி வந்து அழித்துவிட்டுத் திரும்பி ஓடும் அலையைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் முறைத்துவிட்டு வருவாயே, மறந்துபோனதா அல்லது மரித்துப்போனதா. நான் ஒரு வரி பாட நீ மறு வரி பாட பதிவு செய்த பாடலை இனி எப்படி பதியம் போடுவேன். உன்னோடு தூளிகட்டி நான் வாழ்ந்த காலங்கள் கனவில்லையே. இருந்தும் கவிழ்ந்து போனது ஏன். நீ காட்டிய பாதையில் நடை பயில வந்த என்னை பாதியிலேயே பரிதவிக்க விட்டு விட்டு பல்லக்கு ஏறி பாற்கடல் கடைய சென்றாயா. அன்று மூழ்கிப்போன உன்னை முத்தெடுக்க வரவில்லையே நான். இன்று தொலைத்துவிட்ட காலத்தை துரத்திப் பிடிக்க வருவாயா என்னோடு. தூரத்து நிலவாய் துவண்டு போன உனக்கு அன்பாய் அருகிலேயே நான் இருந்தும் அனாதையாய் நீ இருக்க தோற்று விட்டேனடி தோழி. தொலைத்துவிட்டேனடி உன்னை.

Wednesday, February 9, 2011

சடையன் மகனுக்கு.........

என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக்கொண்டு பதினைந்து படிகளைக் கடந்து கீழே வந்ததும் என் கண்களைக் கவர்ந்தது கொத்துக் கொத்தாய் ஊசிகளைக் கோர்த்ததுபோல் பூத்திருந்த அந்த சிவப்பு வண்ண மலர்கள்தான். அங்கே பூக்களையும் அதன் மேல் படர்ந்திருந்த காலைப் பனி நீர்த் துளிகளையும் ரசித்தவாறு நான் சற்று நின்றதும் கால் வலிக்குதா ? தூக்கிக்கவா ? என்று நீங்கள் கேட்டதும் சிரித்ததுக் கொண்டே வேண்டாம் என தலையசைத்துவிட்டு உங்களைப் பின் தொடர்ந்ததும் இன்னும் ஞாபகத்தில் பசுமையாய் இருக்கிறது. இதுதான் நீ படிக்கப்போற பள்ளி என்று நீங்கள் புன்னகையோடு சொன்னபோது உங்கள் கைகளை இன்னும் இருக்கமாய் பற்றிக்கொண்டேன். நாம் இருவரும் கதவருகே நின்ற போது அங்கே ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு தன் காலணிகளுக்குக் கயிறு கட்டிக்கொண்டிருந்தார். வாய்யா தலைமையாசிரியர் உள்ளதான் இருக்காரு போய் பாரு என்று சொன்னவர் என்னைப் பார்த்து கண்களை சிமிட்டியதும் நான் முகத்தை திருப்பிக் கொண்டதும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அவர் அப்பள்ளியின் ஆசிரியர் என்பது அன்று எனக்குத் தெரியாது. நீங்கள் என்னைத் தலைமையாசிரியர் முன் நிறுத்தியதும் என்னிடம் தலைமையாசிரியர் கேட்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொன்னதும் ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை எனக்குப் பதில் சொல்லத் தெரியாது என்று நினைத்தீர்களோ.  புத்தகப் பையை நாற்காலியின் விளிம்பில் மாட்டிவிட்டு என் தலையை லேசாக வருடிவிட்டு கை அசைத்ததும் உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டேன். என்னை விட்டு விட்டுப் போக மனமில்லாமல் மீண்டும் என் தலையை வருடிவிட்டு பல முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தீர்கள். உங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என்னைத் தலைமையாசிரியரின் குரல் திருப்பியது. உன் பெயர் என்ன ?..... நான் உங்களையே பார்த்துக்கொண்டிருந்ததால் மௌனம் என்னிடம். சரி உனக்குப் படிக்கத் தெரியுமா ? தலையை மட்டும் அசைத்தேன். அவர் மேசை மேல் இருந்த பிரம்பை எடுத்து என்னிடம் கொடுத்து கரும்பலகையில் இருந்த சொற்களை வாசிக்கச் சொன்னதும் நான் கடகடவென வாசித்ததும் சந்தோசத்தில் வாய்விட்டு சிரித்தார். பார்த்தீர்களாடா இன்னைக்கு வந்த பிள்ளை எப்படி வாசிக்குதுனு... என்று அங்கே அமர்ந்திருந்த மாணவர்களிடம் கூறினார்.அவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். அன்றிலிருந்து ஒன்றாம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான் குட்டி ஆசிரியராக மாறினேன். பெருமையாக இருந்தது எனக்கு. என்னை அங்கே விட்டு வந்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்டன இன்னும் நான் அந்த சூழலிலிருந்து மீளவே இல்லை. அந்த அழகிய சூழலை உருவாக்கித் தந்த உங்களுக்கு................ நன்றி அப்பா.

Friday, February 4, 2011

உயிரை உயிராக்கிய அந்த நாள்

அப்போது இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் யாருமில்லை. மூன்று வயது தம்பி மட்டும் வாயில் பால் போத்தலுடன் என் பக்கத்தில். என் பள்ளியின் உயரம் தாண்டும் போட்டிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிக பயிற்சி மேலும் என்னைத் தரமாக்கும் என்று நினைத்தேன் என் வீட்டின் வரவேற்பறை பெரியதாக இருக்கும். நடு அறையில் இரண்டு உயரமான நாற்காலிகளை வைத்தேன். அதன் மேல் நீண்ட மூங்கிலை வைத்தேன். தூரத்திலிருந்து ஓடி வந்து தாண்டினேன். சந்தோசம் மனசெல்லாம். பள்ளியில் நடக்கவிருக்கும் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கை மனதைப் பூரிக்க வைத்தது. ஆனால் மீண்டும் மீண்டும் தா.ண்டியதும் சிமெந்து தரை கால் வலிக்கச் செய்தது.தலையணை ஒன்றை கொண்டு வந்து மூங்கிலின் முன்புறம் போட்டேன். ஓடி வந்து மூங்கிலைத் தாண்டினேன்.... தரை மீது வைக்க வேண்டிய காலை தலையணை மீது வைத்தேன். சருக்கிய தலையணை கால் நீட்டிய வாக்கில் என் உடலை தரை மீது தள்ளியது. நின்றது மூச்சு.  அசையவில்லை உடல்.  நகரவில்லை விழி. இயங்கவில்லை இதயம். ஆனால்...என் வாழ்வில்அதுவரை  நடந்த அத்தனை சம்பவங்களும் குழந்தை பருவம் வரை திரைப்படக் காட்சியைப்போல் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது முன்கதவு உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் வெளியிலிருந்து யாரும் பார்க்கவும் வழியில்லை. உயிர் உடலை விட்டு வெளியேறும் தருணம் வந்துவிட்டதா? புரியவில்லை. நினைவுகளை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் சரணாகதி அடைந்தேன். மறுவினாடி என் மூன்று வயது தம்பி என்னருகில் வந்து அவனது பால் போத்தலில் இருந்த நீரை என் வாய்க்குள் ஊற்றினான். மீண்டும் மெல்ல மெல்ல மூச்சு வந்தது எனக்கு. நெஞ்சுக்குள் பயங்கர வலி. அப்போது என் அருகில் நின்றது குழந்தையா குருபரனா என்று சிந்திக்கத் தோன்றியது. அதன் பிறகு நெடுங்காலம் நெஞ்சுக்குள் இருந்த வலி போகவில்லை. நான் உயரம் தாண்டும் போட்டியில் கலந்துகொள்ளவும் முடியவில்லை. ஆனால் ஒருசில வினாடிகளில் என் குழந்தைப் பருவம் வரை பின்னோக்கி ஓடிய காட்சிகள் ஏன் ஏற்பட்டது? அந்த நிமிடம் எனக்குள் என்ன நடந்தது? இந்த தேடல் பல ஆண்டுகள் என்னைத் தொடர்ந்து வந்தது. எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை. தேடல் ஆரம்பமானால் பதில் தேடிவரும் என்ற நம்பிக்கை மட்டும் என்னை விட்டுப் போகவில்லை.
நிறைய ஆன்மீக புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ஆத்ம தரிசனம் என்ற புத்தகத்தில் என் கேள்விக்கு விடை கிடைத்தது. அதிர்ந்து போனேன். அதில் உடலை விட்டு உயிர் பிரியும் தருணம் இந்த அனுபவம் ஏற்படும் என்று அறிந்தேன். என் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. இந்த அரியஅனுபவத்தை எனக்குத் தந்த்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.