Monday, March 14, 2011

ருத்ரதாண்டவம்

கள்வன் நுழைந்தால்கூட வேண்டியதைமட்டும் வேண்டும்மட்டும் அள்ளிக்கொண்டு ஓடிவிடுவான். நீயோ கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு உனக்குள் பதுக்கிக்கொண்டாயே. இங்கே ஊரும் உடைமையும் இழந்து சோற்றுக்காகவும் நீருக்காகவும் கையேந்தி நிற்கிறோமே. எங்கள் அலறல் உன் காதுகளுக்கு எட்டவில்லையா அல்லது எங்கள் நிலைமையைக் கண்டு எள்ளிநகையாடுகிறாயா. ஏன். யார்மீது கோபம். எதற்காக வந்தது இந்தக் கோபம். யாரைப் பழிவாங்க எடுத்தாய் இந்த விஷ்வரூபம். எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வீசி எறிந்து துவாம்சம் செய்துவிட்டாயே. எதற்காக இங்கே வந்து நர்த்தனம் ஆடினாய். அசுரத்தனமாய் நீ ஆடிவிட்டுச் சென்றதுக்குப் பெயர் ஆழிப்பேரலையாம். அந்தப் பெயர்கூட உனக்கு நாங்கள் வைத்ததுதான். உனக்குத் தெரியுமா பிறவியிலேயே உயர்ந்த பிறவி நாங்கள்தானாம். மார்தட்டிக்கொண்டிருக்கிறோம். நீயோ அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தசாவதாரம் பூண்டு ஆனந்தமாய் ருத்ரதாண்டவமாடி எங்களை அற்பமாய் அழித்துவிட்டுச் செல்கிறாயே. நியாயமா இது. நீயும் இருக்கிறாய். உனக்கும் கோபம் வரும். கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எங்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கிறாயா.  நீ கொடுத்த அடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு விழுகிறோமே தெரியவில்லையா உனக்கு. எந்தக் கடனைத் தீர்த்துக்கொள்ள இங்கே வந்து வட்டியும் முதலுமாய் வசூலித்துச் சென்றாய். எங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உன் வாய்க்குள் தினித்து வேடிக்கைப் பார்த்தோம். நாங்கள் தயாரித்த அணுகுண்டுகளை உனக்குள் வெடிக்கவைத்துப் பரீட்சித்தோம். ஓ .... உன்னை ஊனப்படுத்திவிட்டோம் என்ற கோபமோ. நீ எப்போதும் அழுததில்லையே. கதறியதில்லையே. கண்ணீர் விட்டதில்லையே. தடுத்ததுகூட இல்லையே. அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டு மௌனமாய்தானே இருந்தாய். உன் மௌனத்துக்குள் இப்படி ஒரு புகைச்சல் பூதாகரமாய் பொங்கி எழப்போகிறது என்று சொல்லவே இல்லையே. யார் உனக்கு என்ன கொடுமை செய்தாலும் அறியாத பிள்ளைபோல் அமைதியாக இருந்தாயே. உனக்கும் உணர்வுண்டு உன்னாலும் பேச முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாய். ஆனால் எங்களுக்குப் புரியாது. புரிந்தால்கூட புரியாததுபோல்தான் நாங்கள் இருப்போம். ஏன் தெரியுமா. நீதான் வாய்திறந்து வார்த்தை உதிர்க்கவில்லையே. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று பழமொழி படித்த பரம்பரையல்லவா நாங்கள். அப்படிப்பட்ட எங்களை ஏளனமாய் மிதித்துவிட்டு ஒட்டுமொத்தமாய் உலகத்துப் பார்வையெல்லாம் ஒரு நொடிக்குள் உன்மீது திருப்பிக்கொண்டாயே....நீ எத்தனை முறை சீறிப்பாய்ந்து எழுந்து வந்து தாண்டவமாடினாலும்  உன் ஆவேசம் சொல்லும் அறிவுரையை உணர்ந்துகொள்ள முடியாத நாங்கள் உனக்கு வைத்த அழகான பெயர் ஆழிப்பேரலைதான். ஏனென்றால் நாங்கள்தான் உயர்ந்த பிறவியாயிற்றே.