Tuesday, August 13, 2013
தூக்கம் உன் கண்களை...
Sunday, March 10, 2013
அசோகவர்த்தினியாகவோ..அசோகவர்மனாகவோ..
Sunday, March 3, 2013
பங்கோர் அம்மன்
அழகிய தீவுக்குள் அழியாத சரித்திரம் ஒன்று வரையப்படாத ஓவியமாய் என் மனதுக்குள் தூரிகை ஏந்தி வாழ்கிறது. இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கும். அப்படி ஒரு சம்பவம் என் கண் முன் கண்ட காட்சி எனக்குள் பதப்படுத்தப்பட்டுள்ளது. சாலையை விட்டு சில படிகள் இறங்கினால் நான் படித்த பள்ளி. பள்ளியைச் சுற்றி பூச்செடிகளும் மாமரங்களும் சூழ்ந்திருக்கும். பள்ளியை விட்டு சில படிகள் இறங்கினால் கம்பீரமாய் எழுந்தருளியிருக்கும் காளியம்மன் கோவில். கோவிலின் முன்புறம் எந்நேரமும் அலை ஓசையை அள்ளி வீசியவாறு கடலின் நர்த்தனம். கோவிலின் விதையாய் இருந்த பாறைதான் இந்தப் பகுதியில் என் ஆதங்கம். ஓர் இரவு அம்மன் பாறையின் மேல் அமர்ந்திருந்ததை தான் நேரில் கண்டதாக என் தந்தை கண்ணில் நீர் மல்க கூறியுள்ளார். அந்த அற்புதங்களைக் கேட்டே வளர்ந்ததாலோ என்னவோ காலையில் பள்ளி சென்றவுடன் புத்தகப் பையை வகுப்பறைக்குள் வைத்து விட்டு ஓடிச்சென்று கோவிலில் விழுந்து வணங்கிவிட்டுதான் மறு வேலை. ஆதியில் அது ஒரு சிறு ஆலயம். கோவிலின் முழு வடிவத்தில் இயற்கையாகவே பாதி பாறை இடம்பெற்றிருக்கும். கோவிலின் கற்பக்கிரகமே பாறையோடுதான் இணைந்திருக்கும். கோவில் உருவான விதமே ஆச்சரியமான ஆனால் உண்மைக்குப் பாதகமற்ற சரித்திரம். ஆரம்பக்காலத்தில் அந்தப் பாறையின் பக்கத்தில் படுத்துறங்கும் பார்வையற்ற ஒருவரின் கனவில் அம்மன் தோன்றி அந்தப் பாறையில் தினமும் விளக்கு வைக்கச் சொன்னதாகவும்; விளக்கு வைக்கத் தொடங்கிய பிறகு அவர் பார்வை பெற்றதாகவும் கேள்விப்பட்டதுண்டு. அதுமட்டுமல்ல விளக்கு வைத்தவர் பார்வை இல்லாதவர் என்றும், ஓர் இரவில் அம்மன் அவர் கனவில் பாறையின் மேல் தோன்றி காட்சி தந்ததாலும், அதன் பிறகு அவருக்கு பார்வை கிடைத்ததாலும் அந்தப் பாறையே சக்தி பீடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அந்தக் கோவிலின் வரலாற்று பதிப்பில் நான் படித்ததுண்டு. அதன் காரணமாகவே கோவிலுக்குள் பாறையும் சேர்ந்தே இருக்கும். கோவிலை உடைத்துப் பெரியதாகக் கட்ட முடிவெடுத்தப் போது பாறையை உடைப்பதில் சர்ச்சை தொடங்கியது. உடைக்கலாம் என்று ஒரு சாராரும் உடைக்கக் கூடாது என்று மறு சாராரும் விவாதிக்க ஆரம்பித்தனர். இறுதியில் பாறையை உடைக்கக் கூடாது என்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வழங்கியவர் சாதாரண ஆள் இல்லை. திருவிழாவிற்கு நாற்பத்தெட்டு நாட்களுக்கு முன்பிருந்து அன்ன ஆகாரமின்றி கோவிலிலேயே தங்கி திருவிழாவுக்கு முதல் நாள் சுமார் பத்து மணி நேரம் கரகத்தைக் கையால் தொடாமல் தலையில் சுமந்தவாறே மக்களுக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டே கோவிலை வந்தடையும் ஒரு முதியவர். அவர் பார்ப்பதற்கே மிகவும் கம்பீரத்துடன் தெய்வீகமாகக் காட்சியளிப்பார். அவர் கொடுத்த அருள் வாக்குதான் அந்தத் தீர்ப்பு. அதுவும் பாறையை உடைத்தால் கோவில் தலைவரின் உயிருக்குப் பேராபத்துக் காத்திருக்கு என்பதுதான் சத்திய வாக்கு. இருப்பினும் நாகரிக வளர்ச்சியின் காரணமோ, தெய்வத்தை நாருரித்துப் பார்க்கும் ஏளனமோ தெரியவில்லை. பாறையை உடைத்தே தீர வேண்டும் என்று தீர்மானமானது. பழைய கோவிலைப் பிரித்து புதிய கோவில் கட்டும் வேலை தொடங்கப்பட்டது. ஒரு நாள் திடீரென்று பள்ளிக்கூடமே அதிரும் அளவுக்கு வேட்டு சத்தம் கேட்டது. படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிப்போய் பார்த்தோம். வேட்டு வைக்கப்பட்டு பாறை இரண்டு துண்டுகளாக பிளந்துகிடந்தது. பாறை சிதறல்களின் தூசு புகை அடங்கும் முன் கோவில் தலைவர் மூர்ச்சையற்று சரிந்து கிடப்பதைப் பார்த்து அனைவரும் பதறிவிட்டனர். அவரை அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினர் உடன் இருந்தவர்கள். ஆனால் பலனற்றுப் போனது. சொன்ன அருள்வாக்கு சத்தியமாகிப்போனது. கோவில் தலைவருக்கு மீண்டும் மூச்சு வரவே இல்லை. அந்த சக்தியின் வடிவத்தை முதன் முறையாக அப்போது நான் அனுபவித்தேன். இன்றுவரை அந்நிகழ்வு என் உயிரோடு ஊஞ்சல் கட்டிக்கொண்டு நிற்கிறது. பிறகு பாறைத் துண்டுகளை அடித்தளமாக்கிக் கோயில் எழுப்பப்பட்டது. அதன்பிறகு அந்தக் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் என் கண்களுக்குப் பாறை மட்டுமே விஸ்வரூபம் கொண்டு அம்மனை ஏந்தி நிற்கிறது.
Saturday, February 16, 2013
உன் விழியில் என் பார்வை
மலை உச்சியிலிருந்து விழும் அருவியைப் பார்க்கும் போதெல்லாம் திகைப்போடு மலைத்திருக்கிறேன். அதன் மூலத்தைப் பார்க்கும் ஆவல் எனக்குள் ஏற்படும். இந்த நீர் எங்கிருந்து ஊற்றெடுத்து எப்படி வருகிறது என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். என்றாவது ஒரு நாள் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டதுண்டு. பார்த்தேன். அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கும்கி திரைப்படம் எனக்கு வழங்கியது. விடுமுறை நாள்களில் பொழுது போக்க என்ன செய்வது என்று யோசிக்கும்போதெல்லாம் என் குடும்பத்தார் சட்டென்று யோசனை வழங்குவது திரையரங்கம்தான். ஆனால் கும்கி திரைப்படம் வெளியானபோது யோசிக்கவேயில்லை. காத்திருந்து விரைந்து சென்று பார்த்தோம். படம் பார்க்கும் ஆவலைவிட கலையுலகின் முடிசூடா திலகத்தின் வாரிசு எப்படி இருக்கும் என்ற ஆவலே அதிகமாக இருந்தது. அதுவும் பாடல் வெளியீட்டு விழாவைப் பார்த்த பிரமாண்டம் யானையின் இரு தந்தங்களயும் பற்றிக்கொண்டு நெற்றிப்பொட்டில் முத்தமிடும் காட்சி அமர்க்களப்படுத்தியது. அப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கும் ஒரு காட்சி. அந்தக் காட்டின் அழகும் அந்த அழகுக்கே மகுடம் தரித்ததைப் போல் அமைந்த கொட்டும் அருவியும் என் நெடுநாள் கனவுக்குள் நுழைந்து தெரித்து ஓட ஆரம்பித்தது. அந்தக் கொட்டும் அருவியின் மலை உச்சியில் போய் பார்க்க வேண்டும் என்று சின்ன வயசுல அம்மாவைக் கேட்டேன் என்று அவள் தன் ஆவலை வெளியிட்டபோது யாருக்கும் சொல்லாத என் ஆசையும் மொட்டவிழ்த்துக் கொண்டு நின்றது. உயரத்திலிருந்து வெள்ளை வெளேரென்று கொட்டும் நீரிலிருந்து தெரித்துக் கிளம்பும் நீர்ப்புகை சில்லென்று எங்கும் பரவ கீழிருந்து மெதுவாக காமிராவை நகர்த்தி அருவியின் உச்சிவரை கொண்டு செல்லும் காட்சிக்குள் நானும் மூழ்கி எழுந்தேன். நானே காமிராவின் கண்களாய் மாறிப்போனதாய் உணர்ந்தேன். காணக்கிடைக்காத காட்சியை நேரில் காண்பதைப் போல் புலகாங்கிதம் எனக்குள். நான் நேரில் பார்க்க ஆசைப்பட்ட பார்க்க முடியாத காட்சிகள் என் கண் முன் விரிந்து நிற்பதைக் கண்டு பிரபிப்போடு பூரித்துப் போனேன். அந்தப் பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு நன்றி. காட்சியை அற்புதமாய் பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு மிக்க நன்றி
Subscribe to:
Comments (Atom)
