அன்புக்கும் அமைதிக்கும் அர்த்தம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கையில் மருந்துக்குக்கூட இந்த அத்தியாயத்துக்குள் நுழைய மறுப்பதேன். தன்னைச் சுற்றி ஒரு வேளி போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொண்டால் யாரால் எழுப்பமுடியும். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குவதைப்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் எரிச்சலை மூட்டினாலும் பல சமயங்களில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இவர்கள்கூட மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் அதுதான் உண்மை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்கள் நகரும்போது பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதபோதெல்லாம் இவர்களின் மனமும் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றதென்று யாருக்குப் புலப்படும். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது இவர்களின் மீது எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. தனக்குத் தேவையானதெல்லாம் இருந்தும்கூட பிறரின் பொருட்களை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதும் பிறரின் பொருட்களை தொலையச் செய்வதும் இவர்களை உள்ளூர ஆனந்தப்படுத்தும் ஓர் அற்பச் செயல். இப்படிச் செய்வதன் மூலம் பிறரைப் பழிவாங்கிவிட்டதாக இவர்களின் நினைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தொலைத்த பொருளைத் தேடி அலைந்து வேதனைப்படுவதைப் பார்த்துப் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்துவிடும் இவர்களின் மனது. ஆனால் பிறரின் பொருட்களை தொலைப்பதில் சுகம் காணும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தொலைந்துகொண்டிருப்பது இவர்களால் அறியப்படாத இரகசியம். இவர்கள் முழுமையாக தங்களைத் தொலைத்த பிறகுதான் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே உண்மை அறியப்படும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் இருக்கலாம். உங்கள் நண்பர்களாக இருக்கலாம். உங்கள் வீட்டில்கூட இருக்கலாம். இவர்களின் செய்கையைப் பார்த்து வெறுத்து ஒதுக்கி விடாமல் தயவுசெய்து இவர்களின் முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அழகாய் பூக்குமே.
Saturday, April 9, 2011
அழகாய் பூக்குமே
அன்புக்கும் அமைதிக்கும் அர்த்தம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கையில் மருந்துக்குக்கூட இந்த அத்தியாயத்துக்குள் நுழைய மறுப்பதேன். தன்னைச் சுற்றி ஒரு வேளி போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொண்டால் யாரால் எழுப்பமுடியும். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குவதைப்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் எரிச்சலை மூட்டினாலும் பல சமயங்களில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இவர்கள்கூட மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் அதுதான் உண்மை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்கள் நகரும்போது பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதபோதெல்லாம் இவர்களின் மனமும் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றதென்று யாருக்குப் புலப்படும். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது இவர்களின் மீது எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. தனக்குத் தேவையானதெல்லாம் இருந்தும்கூட பிறரின் பொருட்களை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதும் பிறரின் பொருட்களை தொலையச் செய்வதும் இவர்களை உள்ளூர ஆனந்தப்படுத்தும் ஓர் அற்பச் செயல். இப்படிச் செய்வதன் மூலம் பிறரைப் பழிவாங்கிவிட்டதாக இவர்களின் நினைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தொலைத்த பொருளைத் தேடி அலைந்து வேதனைப்படுவதைப் பார்த்துப் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்துவிடும் இவர்களின் மனது. ஆனால் பிறரின் பொருட்களை தொலைப்பதில் சுகம் காணும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தொலைந்துகொண்டிருப்பது இவர்களால் அறியப்படாத இரகசியம். இவர்கள் முழுமையாக தங்களைத் தொலைத்த பிறகுதான் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே உண்மை அறியப்படும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் இருக்கலாம். உங்கள் நண்பர்களாக இருக்கலாம். உங்கள் வீட்டில்கூட இருக்கலாம். இவர்களின் செய்கையைப் பார்த்து வெறுத்து ஒதுக்கி விடாமல் தயவுசெய்து இவர்களின் முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அழகாய் பூக்குமே.
Tuesday, April 5, 2011
கேளடி தோழி நீயொரு சேதி
அறிமுகம் இல்லாத ஊரில் அவஸ்த்தைப் படப்போகிறோமோ என்ற கவலையோடு வந்த என்னை அன்போடு அரவணைத்து தோழமைப் பாராட்டியது உன் நட்பு. குடும்பத்தை விட்டுப்பிரிந்து தொலைதூரம் வந்து துவண்டு கிடந்த என்னைத் துவட்டிவிட்டது உன் அழகான வார்த்தைகள். ஒரு நாள் இரவு உணவு அருந்த அமர்ந்தபோது என் கைப்பேசியில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அந்த விபத்து செய்தி என் கைகளில் எடுத்த உணவை வாய்க்குள் வைக்க விடாமல் செய்தது. முதலில் சாப்பிடுங்க பிறகு விசாரிப்போம் என்று ஆண்டி சொன்னதும் வாய்க்குள் வைத்த ஒரு கவளச் சோறு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கைகளைக் கழுவிக்கொண்டு நண்பரை விசாரித்தபோது பலத்த காயங்களுடன் உன்னை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. உனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டியது என் மனம். அன்று இரவு கலக்கத்தோடு இருந்த விழிகளில் உறக்கம் வரவில்லை. கண்களின் ஓரம் கண்ணீர்தான் வந்தது. எப்போது விடியும் எப்போது உன்னைப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். மறுநாள் மருத்துவமனையில் உன்னைப் பார்த்தபோது உடல் முழுக்க காயங்கள் இருந்தும்கூட உன் கலகலப்பான பேச்சும் சிரிப்பும் என்னை சோகத்தில் ஆழ்த்தாமல் உன்னை ரசிக்க வைத்தது. உன் காயங்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல் என் அண்ணன் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையாகவும் இப்படி நொருங்கிப்போய்விட்டாரே என்று உன் காரைப்பற்றி கவலைப்படும்போதும் ஒரு உயிரற்ற பொருள்மீது நீ கொண்ட பாசத்தைக் கண்டு பிரமித்துள்ளேன். உன் வண்டி பயன்படுத்த முடியாமல் போனதும் நீ என்னோடு வந்து தங்கியதும் நம் நட்பு மேலும் கைகுலுக்கியது. உன் உடல் நலம் பெற்றதும் புதிய வண்டி வாங்கிய பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ என்னைப் பேருந்து ஏற்றிவிட்டுவிட்டுப் போகும்போதெல்லாம் நன்றிப் பெருக்கோடு என் விழிகள் உன்னை வழியனுப்பும். நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் மாற்றலாகிக் கடிதம் வந்ததும் நாம் பிரியப்போகிறோம் என்ற கவலை என்னிடம் மட்டுமல்ல உன்னிடம்கூட சிறிதளவும் இல்லாமல் இருந்ததைக் கவனித்தாயா. அது ஏன் என்று உனக்குத் தெரியுமா. இருவருக்கும் ஒரே சமயத்தில் கடிதம் வந்ததால் பிரிவு வலியை ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்வோடு பிரிந்தோம். மீண்டும் நாம் சந்தித்துக்கொள்ளவே இல்லை. கைப்பேசியில் குரலும் குறுஞ்செய்தியும் மட்டுமே நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இதோ உனக்காக எழுதியுள்ளேன். இதையும் படி. இதயம் இலேசாகும்.
Saturday, April 2, 2011
கொட்டித் தீர்த்துவிடு தோழி
வணக்கம். நமக்குள் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். நம் தேசங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் உம்மையும் எம்மையும் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது கொட்டித்தீர்த்துவிடு தோழி. எரிமலையாய் குமுறிக் கொட்டித்தீர்க்கும் தோழிகளுக்குப் பனிமலர்களைத் தூவி ஆசிர்வதிக்கும் தங்களின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள உயிர்ச்சத்துக்கள் என்னை இழுத்து உட்கார வைக்கிறது. தேவையில்லாத பேச்சுக்களைப் பேசும் உதடுகளுக்கு உடனே பூட்டுப் போடுவதும் அறியாமையால் பூட்டிக்கிடக்கும் உள்ளங்களின் பூட்டுடைத்து வாழ்க்கைக்கு வழி காட்டுவதும் தங்களுக்கே உரித்தான பானியோ. எதிர்மறை கருத்துக்களிலேயே உடும்புப்பிடியாக இருக்கும் பெண்களின் நெற்றிப்பொட்டில் தோட்டாக்களால் துளைத்தெடுக்கும் தைரியம் மிக மிக அருமை. பொய்மையின் தோலுரித்து உண்மையின் வெளிச்சத்தில் பெண்மையின் மென்மையை அழகுபடுத்துகிறது தங்களின் சொல்லாடல். அது மட்டுமா. பெண்ணால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் நியாயத் தராசில் வைத்து ஆண்மையை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்துகிறது தங்களின் வழக்காடுமுறை. அழகான கருத்துக்களை உதட்டில் புன்சிரிப்பைத் தேக்கிக்கொண்டு சொற்களைப் பாகெடுத்து தாங்கள் அள்ளி ஊட்டும் ஆணித்தரம் என்னை அசர வைக்கிறது. வாழ்ந்த நாட்களை சாட்சியாய் வைத்து வாழும் நாட்களுக்கு வழி சொல்லும் வண்ணக் கலவையம்மா நீ. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி தாங்கள் அள்ளித் தெளிக்கும் தீர்ப்பைக் கேட்டிருந்தால் வாழ வழி தெரியாத நல்லத்தங்காள் கூட தனக்கும் Monday, March 14, 2011
ருத்ரதாண்டவம்
கள்வன் நுழைந்தால்கூட வேண்டியதைமட்டும் வேண்டும்மட்டும் அள்ளிக்கொண்டு ஓடிவிடுவான். நீயோ கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு உனக்குள் பதுக்கிக்கொண்டாயே. இங்கே ஊரும் உடைமையும் இழந்து சோற்றுக்காகவும் நீருக்காகவும் கையேந்தி நிற்கிறோமே. எங்கள் அலறல் உன் காதுகளுக்கு எட்டவில்லையா அல்லது எங்கள் நிலைமையைக் கண்டு எள்ளிநகையாடுகிறாயா. ஏன். யார்மீது கோபம். எதற்காக வந்தது இந்தக் கோபம். யாரைப் பழிவாங்க எடுத்தாய் இந்த விஷ்வரூபம். எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வீசி எறிந்து துவாம்சம் செய்துவிட்டாயே. எதற்காக இங்கே வந்து நர்த்தனம் ஆடினாய். அசுரத்தனமாய் நீ ஆடிவிட்டுச் சென்றதுக்குப் பெயர் ஆழிப்பேரலையாம். அந்தப் பெயர்கூட உனக்கு நாங்கள் வைத்ததுதான். உனக்குத் தெரியுமா பிறவியிலேயே உயர்ந்த பிறவி நாங்கள்தானாம். மார்தட்டிக்கொண்டிருக்கிறோம். நீயோ அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தசாவதாரம் பூண்டு ஆனந்தமாய் ருத்ரதாண்டவமாடி எங்களை அற்பமாய் அழித்துவிட்டுச் செல்கிறாயே. நியாயமா இது. நீயும் இருக்கிறாய். உனக்கும் கோபம் வரும். கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எங்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கிறாயா. நீ கொடுத்த அடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு விழுகிறோமே தெரியவில்லையா உனக்கு. எந்தக் கடனைத் தீர்த்துக்கொள்ள இங்கே வந்து வட்டியும் முதலுமாய் வசூலித்துச் சென்றாய். எங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உன் வாய்க்குள் தினித்து வேடிக்கைப் பார்த்தோம். நாங்கள் தயாரித்த அணுகுண்டுகளை உனக்குள் வெடிக்கவைத்துப் பரீட்சித்தோம். ஓ .... உன்னை ஊனப்படுத்திவிட்டோம் என்ற கோபமோ. நீ எப்போதும் அழுததில்லையே. கதறியதில்லையே. கண்ணீர் விட்டதில்லையே. தடுத்ததுகூட இல்லையே. அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டு மௌனமாய்தானே இருந்தாய். உன் மௌனத்துக்குள் இப்படி ஒரு புகைச்சல் பூதாகரமாய் பொங்கி எழப்போகிறது என்று சொல்லவே இல்லையே. யார் உனக்கு என்ன கொடுமை செய்தாலும் அறியாத பிள்ளைபோல் அமைதியாக இருந்தாயே. உனக்கும் உணர்வுண்டு உன்னாலும் பேச முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாய். ஆனால் எங்களுக்குப் புரியாது. புரிந்தால்கூட புரியாததுபோல்தான் நாங்கள் இருப்போம். ஏன் தெரியுமா. நீதான் வாய்திறந்து வார்த்தை உதிர்க்கவில்லையே. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று பழமொழி படித்த பரம்பரையல்லவா நாங்கள். அப்படிப்பட்ட எங்களை ஏளனமாய் மிதித்துவிட்டு ஒட்டுமொத்தமாய் உலகத்துப் பார்வையெல்லாம் ஒரு நொடிக்குள் உன்மீது திருப்பிக்கொண்டாயே....நீ எத்தனை முறை சீறிப்பாய்ந்து எழுந்து வந்து தாண்டவமாடினாலும் உன் ஆவேசம் சொல்லும் அறிவுரையை உணர்ந்துகொள்ள முடியாத நாங்கள் உனக்கு வைத்த அழகான பெயர் ஆழிப்பேரலைதான். ஏனென்றால் நாங்கள்தான் உயர்ந்த பிறவியாயிற்றே.
Saturday, March 5, 2011
வஞ்சகன் கண்ணனடி
காலம் இணைத்ததைக் காலமே பிரித்தது. மீண்டும் இணைவோம் என்று ஒருபோதும் நினைக்காத வேளையில் நிஜமாகவே இணைந்தோம். விட்டுப்போன தொடர்பு மீண்டும் கைகோர்த்தது. காய்ந்துபோன நினைவுகளுக்கு நீர் தெளித்து மீண்டும் பசுமைப்படுத்தி படரவிட்டோம். பொக்கிஷமாய் பூட்டிக்கிடந்த நிகழ்வுகளின் பூட்டுடைத்து மீண்டும் ரசித்துப் படித்தோம். ஓய்வு பெறும் வரை ஒன்றாக உழைத்திருப்போம் என்று ஆனந்தமாய் ஆய்வு நடத்தினோம் .ஆனால் பூநாகமாய் புறப்பட்ட பதினைந்து புல்லுறுவிகள் நீட்டிய ஓலை உனக்கும் எனக்கும் இடையே திரை போட்டு வேடிக்கை பார்க்கிறது. உன் ஆழ்ந்த அறிவை அடையாளம் காண முடியாத முள்ளம்பன்றிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டாயே. அவை உன்னைக் கடித்துக் குதறிவிடும் என்பதனால் தூக்கி எறியப்பட்டாயா. துவண்டுவிடாதே தோழி. தூறலைக் கண்டு துவண்டு விடாதே. தொடர்ந்து செல். அடைமழை வந்தாலும் தொடர்ந்து செல். நீ விட்டுச் சென்ற நினைவுத் துளிகள் இங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்துக்கோர்க்க மீண்டும் வா. வரண்டு விட்டது பாலைவனம் என இறுமாப்போடு பல்லிளித்த வஞ்சகர் களின் பற்களைப் பிடுங்கி உன் சோலைவனத்துக்கு உரமாக்கு. எழுதிய தீர்ப்பைத் திருத்தி எழுத யாருக்கு உண்டு தைரியம் . ஆனால் உனக்கு உண்டு பெண்ணே. உன்னிடம் எனக்குப் பிடித்ததே அந்த தைரியம்தான். பிடிக்காததும்கூட உண்டு. உன் கோபம். கோபம் தலைக்கேறியதும் வந்துவிழும் வார்த்தைகள். அவை உன்னை நிதானமிழக்க வைக்கிறது என்பதை நீ அறிவாயா. இன்னும்கூட உண்டு தோழி. நீ உண்ணும்போது ஊர் பிரச்சனையெல்லாம் உன் பிரச்சனையாக எண்ணி உணவோடு சேர்த்து விழுங்குவது. உணவு மட்டும் உன் உடலுக்குள் செல்லவில்லை ஊரில் உள்ள பிரச்சனைகளும் உன் உடலுக்குள் இரத்தத்துக்குள் கலக்கின்றது என்பதை நீ ஏன் அறியாய். அது உனக்கே ஊறு விளைவிக்கும். அதனால்தான் பல முறை உன்னைத் தடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை நான் சொல்லவில்லை. சொன்னதும் கண்ணனடி.
Thursday, March 3, 2011
மயிலிறகாய்......
கொட்டினால் கோலம் கிறுக்கினால் ஓவியம் என்று வார்த்தைகளால் சுண்டி இழுத்து மயிலிறகாய் என்னை வருடிச்சென்றவள் நீ. வாழ்த்துக் கூறியதும் உன் இதழ் உதிர்த்த புன்னகையின் பூரிப்பு உன் விழிகளில் காணவில்லையே. ஆசையாய் தேடி அன்பாய் நீட்டிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தயக்கம் உன்னைக் காட்டிக் கொடுக்கிறதே. உனக்குள்ளும் ஏதோ ஒன்று உராய்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். சொல்லிவிடு. சொன்னால் உன்னை சிதைத்துக் கொண்டிருக்கும் சிராய்ப்புக் காயம் சீரழிந்து போகும். சொல்லாத சோகம் சுகமாய் உன்னை சொறிந்துகொண்டே இருக்கும். சோகம்கூட சில சமயங்களில் சுகமாய்தான் இருக்கும். ஆனால் சுகமே சோகம்தான் என நினைத்தால் சோர்ந்துபோகும் வாழ்க்கை. துரத்திவிடு. தூர துரத்திவிடு. சோகம் உன்னைத் தின்று விடுவதற்குள் நீ சோகத்தைத் தின்றுவிடு. வானத்தில் இருக்கும் நிலவைப் போல தூரமாய் வைத்துவிடு. நிலவுகூட தூரத்தில் இருக்கும்போது அழகாய்த்தான் இருக்கிறது. அருகில் வைத்துக்கொள்ள முடியுமா. உன்னுடன் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் துன்பத்திற்கு தூபம் போடாதே. உன் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கும் உருண்டையை உமிழ்ந்துவிடு. உன்னைச்சுற்றிப் படர்ந்திருக்கும் அழகான விஷயங்களை ஆழ்ந்து பார். அனுபவித்துப்பார். அவற்றை இரசித்துப்பார். இரசிப்பதுகூட ஒரு கலைதான். உன்னிடம் அந்தக் கலை கொட்டிக்கிடக்கிறது என்பது எனக்குத் தெரியும். போனதைப் பற்றியே யோசித்தால் இருப்பதைப் பற்றி எப்போது நினைப்பது. எப்போது இரசிப்பது. கிடக்காத சுகத்தை எண்ணித் தேய்ந்து போகாதே. உனக்கு இறைவன் கொடுத்த சுகங்கள் எத்தனையோ அவற்றை எண்ணி நெகிழ்ந்து போ. உனக்கும் கீழே இருப்பவர் கோடி. கால்களுக்கு செருப்பு கிடக்கவில்லையே என ஏக்கம் கொள்ளாதே. ஊனமில்லாத கால்கள் கொடுக்கப்பட்டுள்ளதே என திருப்தி கொள். சொல் நன்றியை இறைவனுக்கு.
Monday, February 28, 2011
அரிதாரம் பூசாதே
உண்மையாய் இருக்கப் பழகு. உண்மை இறைவன் உனக்குக் கொடுத்த அழகான உருவத்தை வெளிக்கொணரும். பொய்மையாய் இருக்க நீ முயற்சித்தால் உன் உண்மையான உருவத்துக்கு அரிதாரம் பூசி உலாவ விடுகிறாய் என்று அர்த்தம். எதற்கு பொய் வேசம். பிறர் உன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவா. இல்லை. அப்படி நீயாக நினைத்துக்கொள்கிறாய். அதனால் நீ அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாய் என்பது உன்னால் அறியப்பட முடியாத விஷயம். உன் பேச்சே நீ எப்படிப்பட்டவன் என்பதைப் பிறருக்குக் காட்டிக்கொடுக்கும். நீ சொல்லும் ஒரு சிறு பொய்கூட அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. சில வினாடி, சில நிமிடம், சில மணி அல்லது சில நாட்களில் அது தன் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் நிற்கும். அப்போது நீ பிறர் முன் கூனிக் குருகி நிற்பாய். அதை சரிக்கட்ட இன்னொரு பொய்யை சொல்ல வேண்டி இருக்கும். இப்படி பொய் மேல் பொய் சொல்லி உன் மெய்கூட பொய்யாகிப் போகும். உண்மையை ஒப்புக்கொள். அதில் ஒரு தெளிவு இருக்கும். மன நிம்மதி இருக்கும். பிறரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிராது. பிறரின் சாபத்திலிருந்தும் தடுக்கும். தன் பலவீனம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே பெரும்பாலானோர் பொய்மைக்குள் புகுந்து கொள்கின்றனர். பலவீனத்தை எதற்காக மறைக்க வேண்டும். பலவீனத்தையே உன் பலமாக மாற்று. அவை உன்னைப் பதப்படுத்தும். பிறரை உன் வசப்படுத்தும். உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வெட்கப்படாதே. அவமானத்திலிருந்து தப்பித்துக்கொள்வாய். உண்மை உன் உள்ளத்தை அழகாக்கும். உருவத்தை அழகாக்கும். உண்மை எப்படி இருக்கும் என்று தெரியாதா....குழந்தையை உற்றுக் கவனி.அங்கே உண்மை ஒளிக்காமல் வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
