Tuesday, August 2, 2011
இரகசியமாய்..
மனதோடு விளையாடி மறைமுகமாய் எனைத் தேடி மயிலுருவில் வந்த பேரழகே. உருக்கொண்டு சிறகெடுத்து வருடிவிட்டு சென்றாலும் நீ சென்ற திசை பார்த்து இமைக்காமல் விழியசைய மறுக்குதையா இங்கு. மௌனமாய் நான் அமர்ந்து மனம் அடங்கி உடல் மறுத்த வேளையெல்லாம் உள்ளூர நீ வந்து இறகாலெ எனை வருடி சென்றுள்ளாய் என்பதை உனை பார்த்த பின்புதான் புரிந்துகொண்டேன். நீலத்தில் பசுமையும் பசுமைக்குள் நீலமும் எனை வந்து ஆட்கொண்ட போதெல்லாம் பல கேள்வி நான் கேட்டும் விடையேதும் காணாமல் முனகலோடு நின்றது என் மூச்சு. முடிவென்பதிங்கில்லை முடிச்சுக்கள் பல உண்டு நீயாக முடிச்சவிழ்த்துப் பார் என பக்கத்தில் வந்தாயா. படியளக்க வந்தவனே...நான் அளந்த படியை நீ உண்டு செல்லவா எனைத் தேடி வந்தாய். இரை தேடி வந்தாயா இறையாகி வந்தாயா. நீ வந்ததும் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்துவிட்டதென ஊரெல்லாம் சொன்னபோது ஆகாயமே எனைத்தேடி வந்ததாய் உடல் கூச நின்றேன். உனைப்பிடித்து கூட்டுக்குள் அடைத்துவிட துடிக்கின்றது மனிதம். கூட்டுக்குள் அடைபடவா சிறகு வாங்கி வந்தாய். அதுதான் மனிதனின் சித்தம் என்றால் அதற்கும் அல்லவா வழிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். உனை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் நீ வைக்கின்ற புள்ளியில் கோலமிடும் இரகசியம். மீண்டும் ஒரு முறை சிறகெடுத்து வா அழகே உன் இறகுக்குள் இளைப்பாற நான் வர வேண்டும்.
Monday, July 11, 2011
யாதுமாகி நில்
பெண் அடங்கிப்போவாள் அன்புக்கு. அடக்கியாள நினைப்பவரை அடக்கி முடக்கிவிடுவாள். தனக்கு அடங்கிவிட்டாள் என்று நினைக்கும் ஆணுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பெண் மௌனமாய் இருந்தால் அடங்கிவிட்டதாக அர்த்தமில்லை. பெண்மையை சீண்டிப் பார்க்கும்போது எதிர்த்து போராட இயலாத பெண்ணிடம் மௌனம் மகரந்தச் சேர்க்கை செய்யும். பொய்மையை முலாம் பூசிக்கொண்டு நிற்கும். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போய்விட்டதாகத்தானே அர்த்தப்பட்டுப் போகிறது. அந்த அர்த்தங்களின் விசுவரூபம் உதாசீனப்படுத்தப்படும்போது இன்னொரு சுனாமி வாசலுக்கு வந்து வாய்க்கால் வெட்டுகிறது என்பதை எத்தனை பேர் அறிவர். பெண்ணின் உணர்வறிந்து மொழியறிந்து மனமறிந்து வலியறிந்து எவனொருவன் தாங்கிப்பிடிக்கிறானோ அவன் யாதுமாகி நிற்கிறான். பெண்ணின் எதிர்பார்ப்புகளை உதாசீனப்படுத்துபவன் தண்டிக்கப்படுகிறான். எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும். உலகம் ஆயிரம் சொல்லும். அது வெறும் கணிப்புதான். உண்மை என்னவென்பது அறிந்தவனுக்கே தெரியும். கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம். கண்களை மூடி தன்னை உணர்ந்தால், தான் செய்வது சரியா தவறா என்பது புரியாதா. புரிந்துகொண்டால்தானே மனித ஜென்மம். இதுக்கெதற்கு அக்னி பிரவேசம். ரசிப்பதும் ரசிக்கப்படுவதும் எந்த அளவுக்கு சுகமோ அதைப்போல் உதாசீனப்படுத்துவதும் உதாசீனப்படுத்தப்படுவதும் பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வணங்காமுடியாய் வாழ்ந்து வாழ்வை இழப்பதைவிட வளைந்துகொடுத்து வாழ்ந்து வாழ்வை வளைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணசைவுக்கு எல்லாமே காத்திருக்கும்.
Tuesday, July 5, 2011
விதியா..சதியா..
நீ விட்டுச் சென்றதும் உனை விட்டுச் சென்றதும் அறிவாயா. கல்லாகிப் போனதா நெஞ்சம். உன் கூட்டை நீயே கலைத்துப் போடவா வாழ்வை வரம் வாங்கி வந்தாய். கட்டிலை வீசினாய் கட்டியவன் காணாமல் போனான் தொட்டிலை வீசினாய் தொலைந்து போனதே நீ தூக்கி சுமந்த சுகங்கலெல்லாம். அது நீ தேடிக்கொண்ட வினையா. அல்லது தேடிப்போன வினையா. உன் சுமையை யார் முதுகில் ஏற்றிவிட்டு யார் சுமையை நீ சுமக்க ஓடோடிப்போனாய். உன் சுவாசக்காற்றை சுகிக்க முடியாமல் தன் சுவாசக் காற்றை நிறுத்திக் கொண்டதே நீ பெற்றெடுத்த ஒரு திங்களைக்கூட முழுமையாய்க் காணாத பச்சிளங் குழந்தை. எந்த கங்கையில் இந்தப் பாவத்தைக் கழுவப் போகிறாய். கழுவினால் கழன்று போகுமா நீ சேர்த்து வைத்த பாவச் சுமை. வருடங்கள் ஓடிப்போனாலும் உன்னைப் பற்றிய உண்மைகளை உரசிப் பார்த்து தரம் பிரித்துக் காட்டி தரிசு நிலமாய் நீ கிடப்பதை ஏளனமாய் சொல்லிச் சிரிக்கிறார்களே உன் பெண் பிள்ளைகள். அந்த சிரிப்புக்குள் மின்மினிகளாய் மின்னிக்கொண்டிருக்கும் துக்கங்களும் சோகங்களும் பின்னிக்கொண்டு தோரணங்கட்டி ஆடுவதை அறிவாயா நீ. அவர்களின் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் வெருப்புத்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அன்று வாழ வைக்க வேண்டிய பெண்களின் வாழ்க்கையை வழிமறித்து பரிதவிக்க விட்டது எதற்காக. ஞாயத்தராசில் உன்னைத் தூக்கி வைத்து கேள்வி கேட்கிறார்களே இன்று என்ன பதில் சொல்லப் போகிறாய். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் உன் விஷயத்தில் பெற்ற மனமே கல்லாகிப் போனது. விதி வழி ஓடினாய். விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டதை அறிவாயா. தாய்மடிக்காக தவமிருந்த தங்கங்களைத் தாரைவார்த்து விட்டு எவன் வீட்டு கிளியையோ வளர்க்க உன் வாழ்க்கை முழுவதையும் கூட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்டாயே உனக்கு சிலை வைப்பான் என்று மனப்பால் குடித்தாயா. பார்த்தாயா நீ ஊற்றிய பாலைக் குடித்துவிட்டு இன்று உன்னைப் பாடைக்குள் வைத்து பழிதீர்க்க கருநாகமாய்க் காத்திருப்பதை. கட்டாந்தரையில் படுத்துறங்கி கட்டுக்கட்டாய் சேர்த்து வைத்தப் பணமே உன்னைக் குறிபார்த்து கத்தி முனையில் நிறுத்தியுள்ளது. இப்போதுகூட உன் சொத்துக்குள் குளிர்காய வரவில்லை நீ பெற்ற செல்வங்கள். அழகான ஆயுட்காலத்தை அலங்கோலப்படுத்தினாலும் நீ அநாதையாய் நிற்கும் அவலத்தைத் துடைத்தெரிய உன் முன் கைநீட்டி நிற்கிறார்களே. இன்னுமா உனக்குப் புரியவில்லை. அல்லது புரியாததுபோல் பாசாங்கு செய்கிறாயா. உன்னையே முலாம் பூசிக்கொண்டு மறைந்திருப்பது ஏன். தராசில் ஏறி நின்றால் நீ நிற்கும் தட்டு கீழே இறங்கிவிடும் என்ற பயமா. தோற்றுவிடுவோம் என்ற அச்சமா. நீதான் எப்போதோ தோல்விக்கு துணைபோய்விட்டாயே. தோல்வியே நீயாகிப்போன பிறகு உனக்கெதற்கு முகமூடி.
Wednesday, May 25, 2011
பிரியாவிடை
வணக்கம். இந்தக் கீற்று உங்களுக்கு சமர்ப்பணம். உடைந்துபோன சில்லுக்களாய் சிதைந்துபோகும் முன் தாங்கிப் பிடித்து தடவிக்கொடுத்தது உங்கள் வார்த்தைகள். ஓடி ஓடி ஓய்ந்துபோய் சோர்ந்து வந்த நேரம் இதழ் பிரித்து வெளி வந்த தேன்துளியாய் என் உச்சி முகர்ந்து கைகுலுக்கியது உங்கள் சொற்கள். கரம் குவித்து கவி பாடி என்னை நெகிழச் செய்தன உங்கள் வாழ்த்துகள். எத்தனை ஆழமாய் என்னைப் படித்துள்ளீர்கள், இரசித்துள்ளீ ர்கள், மதித்துள்ளீர்கள் என்பதனை அறிந்தபோது ஆச்சரியம் என்னை ஆட்கொண்டது. அறிமுகப் படுத்திய நாட்களை அழகாக அச்சுக்கோர்த்து நாட்குறிப்பேட்டில் சேர்த்து வைத்ததை எனக்குப் படம் பிடித்துக் காட்டினீர்கள். நட்பின் ஆழத்தை அளந்து காட்ட முயற்சித்து அளவுகோல் போதாமல் திக்குமுக்காட வைத்தீர்கள். தூய நட்பு என்றுமே தூர்ந்துபோகாது என்று துவைத்துப்போட்ட துயரங்களைத் தூக்கி எறியச் சொன்னது உங்களன்பு. உலர்ந்து போனது உடலா உள்ளமா என்று அறியும் முன் என் சோர்வுகளைத் துறவு கொள்ளச் செய்தது உங்கள் உல்லாச வரவேற்பு. குலு குலு அறையின் கதவைத் திறந்ததும் என்னை வரவேற்ற என் பெயர் உங்கள் அன்பின் முகவரியைச் சொல்லாமல் சொல்லிப் போனது. எனக்கே தெரியாமல் சேர்த்து வைத்த என் வரிகளுக்கு வடிவம் கொடுத்த போது என் விழியோரம் துளிர்த்த நீர்த்துளியை இமைகள் மறைத்தன. அன்று வந்திருந்த குழந்தைகள்கூட என்னுரை கேட்டு கண்ணீர் சொரிந்த போது என் பதிவுகளின் சுவடுகள் அவர்களின் மனதிலும் பட்டா போட்டிருப்பதைக் கண்டு மனம் கலங்கினேன். நான் நலம் வாழ வாழ்த்தியதும் என் வருகைக்காக வாசல் திறந்து வைத்து காத்திருப்பதும் காணும்போது மனசு மகிழம்பூவாய் மணக்கிறது. நான் வந்ததும் போனதும் வெறும் கானல் நீராய் இல்லாமல் கல் வெட்டாய் பதிந்துள்ளது என்பதனை அறியும் போது உள்ளம் மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்து போகிறது. இறைவனின் கட்டளை என்னவென்று புரியும்வரை காவலாய் நிற்கிறது காலம் இங்கே.
Tuesday, May 10, 2011
வரம் வாங்கி வந்த நாட்கள்
பாபா....பாபா....ஏன் இவ்வளவு சீக்கிரம் உங்களை மறைத்துக் கொண்டீர்கள். இந்த அவதாரத்தில் உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எழுதப்படவில்லையா. வருவேன் என்று சொல்லி வைத்தேனே. மறந்துவிடவில்லை என்பது எனக்குத் தெரியும். மறைந்து நின்று உங்களின் மறுபதிப்பை பதியம்போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்களுக்கேது மரணம் பாபா. மரணத்தை மரிக்க வைத்த நீங்கள் இங்குப் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. நீங்கள் இப்புவிக்கு வந்துபோன நாட்கள் அல்லவா வரம் வாங்கி ஜனித்துள்ளன. என் மனம் மலிந்து உடல் உரிந்து உயிர் உறைந்த பொழுதுகளில் உங்கள் திருவுருவம் காட்டி என்னைத் தூக்கி நிறுத்திய நாட்களை எப்படிச் சொல்வேன். உங்களது செந்நிற கமலப் பாதங்களை என் கண்முன் பதித்துச் சென்ற தருணம் என் விழிகளுக்குள் படர்ந்திருந்த சோகப்படலம் உங்கள் காலடியில் கரைந்து போனதை யாரிடம் சொல்வேன். அந்த விடியற்காலைப் பொழுதில் உங்கள் விஜயம் என் அறை முழுக்க வீசிய பூ வாசம் என்ன புண்ணியம் செய்தேன் நான். உங்கள் கால் தடத்தில் மலர்ந்த அழகிய மலர்களின் ஒளி என் அறையை மூழ்கடித்ததை எப்படிச் சொல்வேன். அன்று காலை நான் கண்விழிக்கும் போது உங்கள் இரு கரங்களையும் உயர்த்தி என்னை ஆசிர்வதித்ததும் விடிந்ததும் என் பக்கத்து அறையில் இருந்தவர்கள் விடியற்காலை நான்கு மணிக்கு என்ன அப்படியொரு வாசம் என்று பேசிக்கொண்டபோதும்தான் நான் கண்டது கனவல்ல நனவென்று உணர்ந்தேன். அன்று மாலை என்னோடு தங்கியிருந்தவர் உங்கள் நிழல்படத்தை வாங்கிவந்து வரவேற்பறையில் மாட்டிவைத்தபோது மெய்யாகவே மெய் சிலிர்த்துப் போனேன். காரணம் நான் கண்விழிக்கும்போது ஆசிர்வதித்த அதே திருவுருவத்தை அங்கு நிழற்படமாகப் பார்த்தேன். நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஆனால் அன்று நடந்த எல்லாமே யாரோ சொல்ல யாரோ நடத்திக்கொண்டிருப்பதைப் போன்றே இருந்தது. அநாதையாய் நான் உணர்ந்த உணர்வுகளை உடைத்து என் தலை சாய்க்க உங்கள் மடி காத்திருப்பதைப் புன்னகையோடு எனக்குப் புரியவைத்தீர்கள். ஒருவேளை நான் உங்களை சந்திக்கும் நாட்கள் தாமதமாகிவிட்டது என்பதனால்தான் நீங்களே வந்து என் தலை கோதிச் சென்றீர்களா பாபா. என்னே உங்கள் கருணை. யாரிடம் போய் சொல்வேன் இந்த அரிய அனுபவத்தை. வார்த்தைகளின் வரம்புக்குள் வர முடியாத வாழ்வல்லவா அது. எப்படி காற்றும் மழையும் மலரும் ஒளியும் சொல்லும் மொழி வடிவமற்றுள்ளதோ அப்படியல்லவா வலிமையாய் மௌனித்துள்ளது. உங்களுடைய ஓய்வு நேரத்தை முடித்துக்கொண்டு விரைந்து எழுந்து வரும் பொழுதுகளுக்காகத் திருவோடு ஏந்திக் கொண்டு நிற்கிறது காலம். மீண்டும் ஒரு புதிய பரிணாமத்துக்குள் புகுந்து வரப்போகும் உங்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது அரியாசனம்.
Monday, May 2, 2011
வானம் வளையும்
சக்கர நாற்காலியில் நீ வளம் வர சுமையே சுகமாய் மொத்த குடும்பமும் உன்னைச் சுற்றி சேவகம் செய்ய காலம் காத்துக்கிடக்கிறதா இல்லை காலனைக் காக்க வைத்துவிட்டாயா. முதல் முறை என் விழிகளைச் சந்திக்கத் திராணியில்லாமல் உன் விழிகள் தலை சாய்த்துக் கொண்டதும் ஏதோ ஒரு கோபம் உன்மேல் எனக்கு வந்து போனது உண்மைதான். ஆனால் உன் வேகமும் விவேகமும் என்னை சற்று உரசிப் பார்த்தப்போது என் கோபம் தானாகக் கழன்று போனது. உன் தாயும் தந்தையும் நாள்முழுக்க உனக்காகக் கைகட்டி இங்கே காத்துக் கிடக்க எந்த சலனமும் இல்லாமல் நீ உன் நண்பர்களோடு சகஜமாய் சந்தோசமாய் காலத்தைச் சாய்த்துப் பிடித்துக் கண்ணடிக்கிறாயே அது எப்படி. இரண்டு மாதக் குழந்தையைத் தோள் மீதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் உன்னை மார்போடும் சாய்த்துக்கொண்டு இங்கே தவமாய் தவம் கிடக்கும் தாய்மையை என்னவென்று சொல்வது, காலம் உன்னைக் கட்டிப் போட்டாலும் அங்கேயே சுருண்டு கிடக்காமல் கட்டவிழ்த்து வீசி விட்டு எழுந்து அமர்ந்து ஆர்ப்பரிக்கும் நீ எழுந்து நிற்க உன் சக்தி முழுதும் திரட்டு. சாதித்தவர்களின் பட்டியலைத் தேடு. வல்லமை தர வேணடி வானுலாவ நடந்துபோ. வானம் உனக்காக வளைந்து வரும்.
Sunday, April 17, 2011
தேங்கி நிற்கிறேன்
Subscribe to:
Posts (Atom)

