Thursday, May 31, 2018

மஹதீரா.....


மஹாதீரா…

உமது பெயரிலேயே அடங்கியுள்ளதையா வெற்றிக்கான அடைமொழி. 
முதல் முறையாக மீண்டும் உமது பெயர் உச்சரிக்கப்பட்டபோது எத்தனை ஜோடி கண்கள் அகல விரிந்து உமது முகத்தில் புதைந்திருக்கும் சுருக்கங்களை எண்ணிப் பார்த்தன.
வயது அறுபதைத் தொட்டதும் முடிந்தது வாழ்க்கை என்று முடங்கிப் போக எண்ணும் முகத்திரையைக் கிழித்து தொல்லைகள் அறுக்க தொடர்ந்து வந்த உமது பாதங்களுக்கு, உம்மைப் பழித்துக் காட்டிய உதடுகள்  முத்தமிட்டுச் செல்ல வேண்டும்.
 வயது ஒரு வரம்பல்ல என்று நெற்றிப் பொட்டில் சுத்தியலால் அடித்தது நீர் வீறு கொண்ட வெற்றி.
உமக்கு வயதாகி விட்டதா! 
யார் சொன்னது!
நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த எண்ணங்களும் வாள் கொண்டு நின்றதையா இத்தேசத்தில் சூல் கொண்ட துன்பத்தை வெட்டி வீழ்த்த. 
பாவங்களை சுட்டுப் போட்ட உமது கர்ஜனை இன்று வேலி கட்டி நிற்கின்றது மக்களுக்குக் காவலாய்.
புதிய சாம்ராஜ்யம் உருவாக்க மீண்டும் முளைத்து வந்த ஆலமரம் நீ. 
இந்நாட்டு சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட சாணக்கியன் நீ. 
நீரே இந்நாட்டின் உந்துசக்தி.

இறைவனுக்கு ஒரு வேண்டுகோள்!

இறைவா, எங்கள் தந்தைக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்து அவரைக் காக்க வேண்டும். இந்நாட்டு மக்களின் கண்ணீரைத் துடைக்க எழுந்து அல்லும் பகலும் பாடுபடுகின்ற அவருக்கும் வயதுக்குத் தேவையான உடல் வலி இருக்கும். அந்த வலி மட்டுமல்ல, எந்த வலியும் அவரைத் தொடராமல் காத்தருள வேண்டும்.

Friday, June 16, 2017


 

மூச்சுக் காற்றாய் ஒரு சாசனம் -வ. துளசி

இப்பள்ளியில்
கருக்கல் கணை தொடுப்பதும்
கல்லெறிந்து பூக்கள் விழுவதும்
உந்தன் விழி வீச்சின் ஒளிக்கீற்றில்

உற்சாகத்தின்
மொத்த உருவமும்
அட்சயபாத்திரமானது
உந்தன் உள்ளங்கையின் ரேகைகளில்

தீர்மானங்கள் அனைத்தும்
திணறிக்கொண்டு
வரிசையில் நின்றன
உந்தன் விரல் அசைவின் காத்திருப்புகளில்

ஏன்? எதற்கு?
என்ற பட்டிமன்றத்தில்
தோற்றும்போயின
தொண்டைக் குழியில்
சிக்கித் தவித்த கவலங்கள்

கல்லும் முள்ளும்
கால்களுக்கு மெத்தையென
தூசித் தட்டிப்
பாதங்களைப் பதித்துச் சென்றீர்
உந்தன் பார்வை பட்ட இடமெல்லாம்.

நுழைவாயில் முதல் அடிவாயில் வரை
நூல் பிடித்த அலங்காரங்கள் அத்தனையும்
இடம் பெறத் தவறாது
உந்தன் பெயர் பதிவேட்டில்

கல்விக் கருவறைக்குள்
கற்பூர ஆராதனை
கடிந்து கொள்ளவில்லை
வெற்றித் திருமகள்

உடல் சோர்ந்த போதும்
உள்ளம் சோரவில்லை
மனம் சாய்ந்த போதும் மடிசாயவில்லை
இராஜாளியாய் வட்டமிட்ட முயற்சிகள்

எதற்காக அத்தனையும் எதற்காக
உமக்காகவா அல்லது
ஊருக்காகவா
உரித்தெடுத்துப் பார்ப்பவர்
எத்தனை பேர்.

வானவில்லின் வண்ணங்களாய்
நீர் சென்றாலும் செல்லாது
நிலைத்திருக்கும்
உமது மூச்சுக் காற்று

இப்பள்ளியில்

Friday, July 25, 2014

உயிரும் நீயே! உடலும் நீயே!


யோசிக்கிறேன்.
நீங்கள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். என் ஞாபகக்கூட்டில் சிக்கவில்லை. ஆனால் என் மழலைப் பருவத்தை நீங்கள் பிறரிடம் சொல்லி பூரித்துப் போகும் போதெல்லாம் என் மனம் மத்தாப்புக் கொளுத்தி விளையாடியுள்ளது. நீங்கள் எந்த சட்டை தைத்தாலும் மீதத் துணியில் எனக்கும் ஒரு கவுன் தைத்து போட்டு அழகு பார்ப்பீர்கள். என்னையும் தம்பிகளையும் ஒன்றாக அமர வைத்து உணவளிப்பீர்கள். எனக்குக் கோபம் வந்தால் உணவு வேண்டாம் என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைப்பீர்கள். அதில் நீங்கள் மிகவும் மிடிவாதமாய் இருந்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் யாராவது 'என் பிள்ளை உணவு வேண்டாம் என்று கூறிவிட்டது, அதனால் விட்டுவிட்டேன்' என்று கூறும்போது உங்களை அழைத்துவந்து அவர்களுக்கு ஓர் அறை விட சொல்ல வேண்டும்போல் எனக்குத் தோன்றும். நான் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஒரு நாள் மோட்டார் சைக்கில் மோதி கீழே விழுந்துவிட்டேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபப்படுவீர்கள் என்று எண்ணி நீண்ட பாவாடை அணிந்து சிராய்ப்புக் காயங்களை மறைத்துக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு யாரோ சொல்லக்கேட்டு பதறி ஓடிவந்து 'ஏன் சொல்லவில்லை' என்று கூறியவாறே என் காயங்களுக்கு மருந்து போட்டபோதுதான் உங்கள் கண்டிப்புக்கு நடுவில் பாசம் புறையோடிப்போயிருப்பதை உணர்ந்தேன்.      அந்த அழகான நாட்களின் ஆராதனை எனக்குள் இன்னும் சாயம் போகவில்லை அம்மா.                                                        நான் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். அதுவும் ஞாபகத்தில் இல்லை. நிச்சயம் உங்களுக்கு ஞாபகத்தில் இருந்திருக்கும்.                                                                     யோசிக்கிறேன்..                                                  நிச்சயம் ‘அம்மா’ என்ற வார்த்தைக்காகத்தான் என் இதழ்கள் முதன் முதலில் குவிந்திருக்கும். நான் உங்களிடம் பேசிய கடைசி வார்த்தையும் அம்மா! அம்மா! அம்மா!..தான்.
                                                                   நீங்கள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தையையும் யோசிக்கிறேன். ‘ வீட்டுக்குப் போகலாம்’ என்று என் கண்களை நேருக்கு நேர் பார்த்து சொன்னதுதான் கடைசி வார்த்தை. உங்கள் கடைசி வார்த்தையை பூர்த்தி செய்யும் ஆற்றலை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி அம்மா.                                                                                     என் வாழ்க்கையின் அஸ்த்திவாரத்தை ஆழமாய் ஊன்றி வைத்து உரமிட்டது நீங்கள்தான் அம்மா. உங்கள் வியர்வை எங்கள் வாழ்க்கை. எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றலை எனக்கு அள்ளித் தந்ததும் நீங்கள்தான் அம்மா. பாசத்தைப் பகிர்ந்து கொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்ததும் நீங்கள்தான் அம்மா. அம்மா என்றால் அன்பு என்பர். ஆனால் எனக்கு உங்களது அன்பு மட்டுமல்ல கண்டிப்பும்தான் கண்முன் விரிகிறது. என்னிடம் உள்ள பண்புகளை எண்ணி நான் கர்வப்பட்டதுண்டு. என் கர்வத்தின் சான்றிதழே நீங்கள்தான் என்றெண்ணும் போது காலம் கரைத்துச் சென்றது உங்கள் உடலை மட்டும்தான் என்பது எனக்குப் புரியாமலில்லை. 

நான் கல்வியைத் தொடர நீங்கள் வேலைக்குப் போனதும், இரவில் நீங்கள் உடல் வலியால் புரண்டு புரண்டு படுக்கும் போது அந்த வலி என் உறக்கத்தையும் கலவாடிப்போனதுண்டு. என் படிப்பு முடிந்து நான் வேலைக்குப் போனதும் முதலில் உங்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டதுண்டு. அப்படியே செய்தேன். உங்கள் எண்ணப்படியே நான் உத்தியோகத்தில் அமர்ந்ததும் உங்கள் சாதனைதான் அம்மா.                                      நான் எத்தனையோ ஓவியங்கள் வரைந்ததுண்டு. ஆனால் யாரும் தொட முடியாதத் தூரிகையால் அழகாக நீங்கள் வரைந்த உயிர் ஓவியம் நான்தான் அம்மா.                                     நீங்கள் திருமணம் முடித்து வந்து செய்த முதல் வேலை அப்பாவுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்ததுதான் என்பதை அப்பா சிரித்துக் கொண்டே சொல்லும் போதெல்லாம் அவர் முகத்தில் ஒருவித பெருமிதம் தென்படும். அது உண்மைதானா என்று நான் உங்களைக் கேட்ட போது,               " உண்மைதான், படிக்காத ஒருத்தரை எனக்குக் கல்யாணம் செய்துவிட்டார்களே என்று எனக்கு வருத்தம். அதனால முதல்ல அவருக்கு படிப்பு சொல்லிக்கொடுத்தேன். இப்ப பாரு, எல்லா பத்திரிக்கையும் கட கடனு படிக்கிறாரு." என்று நீங்கள் சொன்னதுண்டு. நான் அப்போதெல்லாம் உங்களுக்குள் விழித்திருக்கு உயர் குணத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறேன். ஆமாம். பிறரின் குறைகளை மலையாக்கிக் காட்டாமல் கடுகாக்கி கரைத்துப் போடும் வித்தை உயர் குணமல்லவா. அந்த அழகான குணங்களை என் உயிருக்குள்ளும் ஊற்றி வைத்திருக்கிறீர்கள் அம்மா. அதனை அப்படியே எனக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்.                                                                                                                        எங்களது சிறு பிராயத்தில், எங்களை  ஒரே நேரத்தில் உட்கார வைத்து உணவருந்த வைத்ததுமட்டுமல்ல, எங்களுக்குள் கவனமாய் கைகோர்த்து ஒற்றுமையாக வாழவும் கற்றுக் கொடுத்தீர்கள்.  பண்புகளை சொல்லித் தந்தீர்கள். படிப்பை சொல்லித் தந்தீர்கள். சுயகாலில் நிற்க கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் சங்கரனின் மறைவு உங்கள் சந்தோஷம் மொத்தத்தையும் அள்ளிச் சென்றபோது மீள முடியாமல் தவித்தீர்கள். உங்களை மீட்க முடியாமல் நாங்கள் தவித்தோம்.                                                                                                         உங்களுக்கு நோய் உடலிலோ மனதிலோ ஏற்படும் போதெல்லாம் ஓடோடி வந்திருக்கிறேன். நான் உங்கள் பக்கத்தில் வந்ததும் உங்கள் முகத்தில் ஓடும் வேதனை ரேகை அழிந்துபோவதை கவனித்திருக்கிறேன். நான் வேதனை கொள்ளக்கூடாது என்பதற்காக பல வேலைகளில் மௌனித்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களது இறுதி மூச்சை விடும் வரை அந்தப் பிடியைத் தளர்த்தவே இல்லையே. நாங்கள் அனைவரும் உங்கள் அருகிலேயே  இருக்க உங்களது கடைசி சுவாசம் எங்களை உரசிச் செல்ல அனுமதித்தது நாங்கள் செய்த தவம் தாயே.

Monday, February 24, 2014

விரிசலில் ஒரு புகைச்சல்



முன்புபோல் இல்லை. இங்கு எதுவுமே முன்புபோல் இல்லை. நமக்குள் விழுந்தது விரிசலா..இல்லை. அதற்கு வழியில்லை. ஏதோவொன்று  என்னை வாட்டுகிறது. உன்னையும் என்னையும் முடிச்சுப்போட்ட பகிர்வுகள் முன்புபோல் இல்லை. விடியற்காலையில் வணக்கம் கூறும் புன்னகை கூட இப்போது வறுமையின் வாசலில் திரைச்சீலையாகிவிட்டது. மூடித் திறந்த முக்காடு முனகலோடு காற்றில் பறக்க விட்டது யார் தவறு. சுண்டு விரலில் சுற்றி இழுக்க சுடச்சுட சொன்னேன்  வழியொன்று. புல்லுருவி பூக்கும் முன்பே பூச்சி மருந்து பூசச் சொன்னேன். கேட்கவில்லையே..நீ. நான் முன்னறிந்து சொன்னதை முற்றுப்புள்ளியாக்கிவிட்டு, உன் உள்ளத்தில் உள்ளதை உள்ளங்கையில் ஏந்தினாய். கலை எடுப்பதாய் எண்ணி உரம் போட்டு விட்டாயே. சேற்று நீரை அள்ளித் தெளித்த பிறகு எங்கிருந்து வரும் சந்தன வாசம். மனதுக்குள் விழுந்த கீறல் வடுவாகி போய்விடுமோ என்ற பயம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான். மடியேந்திய சந்தோஷமெல்லாம் மறக்கப்படவில்லை, மறுக்கப்பட்டுவிட்டது. காலம் மீண்டும் ஒரு முறை கவிதை படிக்குமா இல்லை எட்டி நின்று வேடிக்கை பார்க்குமா என்று தெரியவில்லை எனக்கு. உனது முடிவு எதை முடித்து வைத்ததென்று புரிகிறதா இப்போது. முழுமையாய் நனைந்த பிறகு முக்காடு விழுந்தால் என்ன, பறந்தால் என்ன.

Thursday, February 6, 2014

சூப்பர் சிங்கர் கண்டெடுத்த திவாகர்

 இரவு பதினோரு  மணியானதும் உறக்கம் என் கண்களை வருட முனைவது வழக்கம். ஆனால் பதினொன்றைத் தாண்டி விடியற்காலை நான்கு வரை காட்சியைக் கண்ணுக்குள் கட்டிப் போட்டது சூப்பர் சிங்கர் 4 ஆச்சரியம். இறுதிப்போட்டியில் இடம்பெற்ற ஐவரில் விழிகள் முதலில் தேடியதென்னவோ திவாகரைத்தான். ஆராரிரோ பாடியதாரோ...என்ற பாடலைப் பாடிய போது திவாகரின் தாய் மட்டுமல்ல, நீதிபதியாக பொறுப்பேற்றிருந்த சீனிவாசனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடச் செய்தது அந்தப் பாடலின் உருக்கம். என் கண்கள்கூட குளமானது அன்று. அந்தப் பாடலைத் தொடர்ந்து ஒளியேறிய திவாகரின் குடும்ப சூழலை விரித்துக் காட்டிய வீடியோ க்ளிப் என் கண்களில் குளம் கட்டிய கண்ணீர், மடை திறந்தது. திவாகர்   முதன் முறையாக தனது தாயை அறிமுகப்படுத்திய போதுதான்  அவரது வறுமையின் கலவை சேலை கட்டி நிற்பதை என்னைப்போல் எத்தனையோ பேருக்குத் தெரிய வந்திருக்கும். திவாகர் இசை மேல் கொண்ட காதல் வெறியும் தாயின்  இயலாமையும் போட்டிப்போட்டுக்கொண்டு சதுரங்கம் அடிக்கொண்டிருப்பதை அந்தந் தாயின் கண்ணீர் காட்டிக்கொடுத்தது. அந்தக் காட்சி சூப்பர் சிங்கர் 4 ஐத்  தொடர்ந்து பார்த்துக் கொண்டு வரும் பார்வையாளர்கள் அத்தனைப் பேரின் உள்ளங்களையும் கலங்கடித்தது. மக்களின் கவனத்தை ஈர்த்தது திவாகரின் வறுமை அல்ல, அதையும் வென்று நின்ற வறுமையை மிஞ்சிய திறமை.  திவாகரின் முயற்சி இன்றைய இளைஞனுக்கு மிகச் சிறந்த கல்வெட்டு. ஏதோ ஒரு மூலையில் எந்த அடிப்படை  வசதியும் இல்லாத வறுமையின் தாலாட்டில் வளர்ந்த ஒருவன் முயற்சியை மட்டுமே மூலாதாரமாக வைத்துக்கொண்டு திறமையின் உச்சியில் வெற்றிக்கொடி கட்ட புறப்பட்ட சாதனை என்னை அசர வைத்தது. திவாகருக்காகவே ஒவ்வொரு நாளும் என் சொந்த வேலைகள் பரண்மேல் அமர்ந்துகொண்டு  அந்நிகழ்ச்சியைப் பார்க்க  எனக்கு வழிவிட்டன. வகுப்பெடுக்காமல் பாமாலை இவனிடம் வசப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அஸ்கார் நாயகனின் புன்னகையே இவனது வெற்றியின் பூமாலை.  இறுதிச் சுற்றுக்கு திவாகர் தேர்வானதும் தரையில் விழுந்து முத்தமிட்டு ஆனந்தத்தில் புரண்ட காட்சி மேடையில் அமர்ந்திருந்த  அனைவரையும் மெய் மறந்து திவாகரை நோக்கி ஓடிவரச் செய்தது. பார்த்துக் கொண்டிருந்த எனது இரு கரங்களும் என்னைக் கேட்காமல் ஒலி எழுப்பி ஆர்ப்பரித்தன.  இறுதிச் சுற்றில் தேர்வாகி நின்ற மிக திறமை வாய்ந்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக திவாகர் நின்ற போது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏந்தி நின்றது சூப்பர் சிங்கர். திவாகரின் திறமைக்கு சவாலாக அமைந்தது சய்யத் சுபாகானின் பாடும் திறன். அனைத்தையும் வென்று படியேறியது திவாகரின் ஆற்றல். ஜானகி அம்மா அவனை ஒரு குழந்தையைப் போல் முத்தமிட்டு உச்சி முகர்ந்த காட்சியில் ஒரே இரவில் வறுமை வற்றிப் போனது. முயற்சியும் திறமையும் சீர் எடுத்து வந்து சிம்மாசனத்தில் அமர வைத்தது திவாகர் என்னும் காலத்தின் கண்டெடுப்பை. வறுமையை மென்று துப்பிவிட்டு, திறமை சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. உண்மையான திறமைசாலிகளைத் தட்டி தட்டி முழு வடிவமாக்கி உயிர் கொடுத்து உலக மேடையில் அரங்கேற்றும்  சூப்பர் சிங்கருக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, August 13, 2013

தூக்கம் உன் கண்களை...

தூக்கம் தூர்ந்து போனால் துக்கம் தொட்டில் கட்டும். துவண்டு விழும் தேகத்தை தூக்கிப் பிடிக்க  முடியாமல்  உடல் உபாதைகள் உருட்டி விளையாடும். மனதை மல்லாக்கா படுக்க வைத்து பாண்டி ஆட முயற்சிக்கும். பட்டு மெத்தையில் படுத்தாலும் இமைகளை மூடியதும் உறக்கம் வர மறுத்தால் உள்ளம் ஊர் சுற்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நேரம் ஊர் சுற்ற முடியும். உள்ளம் களைத்துப் போகும்போதுதான் உனக்கே தெரியாமல் உள்ளத்தை உளைச்சல் விளைச்சல் செய்யும். உளைச்சலின் விளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க மனம் மூளையைக் கட்டிப் போடும் வித்தை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும். யாருக்கும் தெரியாமல் உருவாக்கப்படும் இந்த அத்தியாயம் நோயாக உருப்பெறும் முன் பக்கத்தில் உள்ளவர் உண்மையை உணர்ந்து புத்திசாலித்தனமாக பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றினால்தான் உண்டு. இல்லையேல் அதன் விளைவு மனதை அழித்து.. உடலை அழித்து.. வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். மீண்டு வர முடியாத வேரோர் உலகத்தில் வாழ்க்கை தடம் புரண்டு தள்ளாடிக்கொண்டிருக்கும். எத்தனையோ பேர் இந்த இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நாமே பார்த்திருப்போம். கட்டாந்தரையில் படுத்தாலும் உடனே உறங்கிப் போகும் அன்பர்கள் இந்த வேதனையை உணர்ந்திருக்க சந்தர்ப்பமில்லை. பிரச்சனைகளை உண்டு வாழும் உள்ளங்கள் எவ்வளவுதான் சொகுசாகப் படுத்தாலும் உறக்கம் விலகிப் போகும்போது  அது வேரொரு சிக்கலுக்குக் கதவைத் திறந்து வைக்கிறது என்பதைப் பாதிக்கப்பட்டவர் உணர்வதில்லை. அதனால் தூக்கம் தூரப் போகும் போதெல்லாம் மூலத்தை அறிந்தால் தொல்லைகளை அறுத்து இன்புற்று வாழ நாமே வழி தேடிக்கொள்ளலாம்.

Sunday, March 10, 2013

அசோகவர்த்தினியாகவோ..அசோகவர்மனாகவோ..


பஞ்ச பூதங்கள் பஞ்சாங்கம் சொல்லவில்லையே எங்கள் குலவிளக்கு அணையப்போகிறது என்று...எப்படி... எப்படி நடந்தது இது. கண்ணிமைக்கும் நேரத்தில் களவு போனது எப்படி. கண்களைத் திறந்துகொண்டுதானே தவம் கிடந்தோம்.  தவம் களையாமல் எங்களையே களைத்துப்போட்டுவிட்ட சூட்சுமத்தை அறியாமல் தவிக்கிறோம்.எங்கள் கண்களில் மண்ணைத் தூவியது யார். விடை காண முடியாத விடுகதையாக்கிவிட்டீரே. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் நீங்கள் பாவா இல்லை. எங்களுக்கும் நீங்கள் பாவாதான். அவ்வளவு பிடிக்கும் உங்களை. எங்களுக்கு மட்டுமா உங்களைப் பிடித்திருந்தது. அக்கம் பக்கம் முதற்கொண்டு உங்களோடு நட்புக்கொண்ட அத்தனைப் பேருக்கும் அல்லவா உங்களைப் பிடித்திருந்தது. அதனால்தானோ என்னவோ ஆண்டவனுக்கும் உங்களை அதிகம் பிடித்துப் போனது போலும். நான் உங்களை மாமா என்று அழைத்ததே இல்லை. நீங்கள் அதற்கும் மேலே  தந்தையின் இருக்கையில் அல்லவா  அமர்ந்துகொண்டு இருந்தீர்கள். உங்கள் அன்பு மழையில் சாரலாகவும் தூரலாகவும் நாங்களும் உங்களோடு இணைந்திருந்தோம். உங்கள் பண்பின் நேர்த்தியை பிறருக்கும் பரிந்துரைத்திருக்கிறோம். எங்களது ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் நிறைந்துள்ளீர்கள்.  நீங்கள் இல்லாத நிகழ்வே இல்லையே பாவா. இனி.. எப்படி.. தெரியவில்லை... நீங்கள் எப்போதுமே எங்களை எதுக்காகவும் காக்க வைத்ததே இல்லை. ஆனால் அந்த  மூன்று நாட்கள்  அன்ன ஆகாரமின்றி நாங்கள் கொண்ட விரதத்தை சிவராத்திரியாக்கிவிட்டு நீங்கள் சிவலோகம் போனது எப்படி. அந்த இரவு நாங்கள்  விழி திறந்து காத்திருக்க நீங்கள் மூடிய விழியைத் திறக்காமலேயே காத்திருந்தது எதற்காக. காலத்தைக் கடந்து கரைந்து போகவா. அப்படி என்ன அவசரம். இன்னும் கொஞ்ச காலம் எங்களோடு வாழ்ந்திருக்கலாமே. அழைக்காமலேயே உதவிக்கு ஓடோடி வருவீர்களே. இப்போது நாங்கள் எல்லோரும் அழைத்தும் கூட வர மறுத்தது ஏன். எவ்வளவு நல்ல குணங்கள் உங்களிடம். இனி யாரிடம் போய் தேடுவது. எங்குப் போய் தேடுவது. எதை சொல்லியும் உள்ளத்தைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. எப்படித் தேற்றினாலும் காயத்தை ஆற்றிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இல்லாத ஒவ்வொரு கனமும் முள் முனையில் முகாரி எழுதுகிறது.  கடைசியாக நீங்கள் பறித்த நெல்லியின் கிளை பாரம் தாங்காமல் வளைந்து தொங்கியதும் அதிலுள்ள காய்களைப் பறித்துவிட்டு  நான் கிளையை உடைக்கச் சொன்ன போது அதில் இருக்கின்ற பிஞ்சுகள் எல்லாம் முற்றியதும் உடைக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றீர்களே. நினைவில்லையா... அப்போது அந்தக் கிளையின் பாரம் குறைந்ததும் நீங்கள் பிடியைத் தளர்த்தியவுடன் கிளை மேலே போய்விட்டது. இப்போது காய்களெல்லாம் முற்றி அந்தக் கிளை பாரம் தாங்காமல் மீண்டும் வளைந்து பூமியை நோக்கிக் கொண்டிருக்கிறது.  நான் சொல்லும் முன்பே நெல்லிக்காயைப் பறித்து பங்கு போட்டுவிட்டுப் போவீர்களே. இப்போது உங்களுக்கும் சேர்த்து நானே பறிக்கிறேன். நான் மட்டுமே பறிக்கிறேன். உங்களை நாங்கள் புதைக்கவில்லை விதைத்திருக்கிறோம். மீண்டும் முளைத்து வருவதற்காக. அசோகவர்த்தினியாகவோ... அசோகவர்மனாகவோ... மீண்டும் உங்கள் வரவுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.